மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் என்பது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
அந்த கிராமம்தான் இப்போது பேசு பொருளாகி உள்ளது
காரணம் அங்குள்ள மனிதர் ஒருவருக்கும் கொக்குக்கும் ஏற்பட்டுள்ள நட்புஅந்த கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவர் வயல்வெளியில் டிராக்டர் ஒட்டும் தொழிலில் செய்துவருகிறார்
சில மாதங்களுக்கு முன் வயல்வெளியில் டிராக்டர் ஒட்டிக்கொண்டிருந்த போது ‛சரஸ்' இன கொக்கு ஒன்று கடுமையான காயங்களுடன் வயல்வெளியில் விழுந்து கிடப்பதைக் கண்டார்.ஆரிப் உடனே அந்தப் பறவையை அள்ளி எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்றவர் தனக்கு தெரிந்த வைத்தியத்தை செய்தார் பின் அதற்கு வேண்டிய உணவினை கொடுத்து ஒய்வு எடுக்கும் வகையில் வீட்டின் ஒரு ஒரத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.
அடுத்த சுவாரசியமான வரிகளுக்கு போவதற்கு முன் சரஸ் கொக்கு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்
சரஸ் கொக்கு என்பது நீண்ட கால்களுடன் சிவப்பு கழுத்து வெள்ளை உச்சந்தலையுடன் வெகு அழகாக காணப்படும் பறவையாகும்.உலகிலேயே பறக்கும் தன்மை கொண்ட உயரமான பறவை இதுதான். தனது குழுக்களுடன் இருந்து கொண்டு மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்களை சாப்பிட்டு வாழும். இது தன் இணையை கவர்வதற்காக ஆடும் நடனம் உலகப்புகழ் பெற்றதாகும், இந்த நடனத்தை பார்ப்பதற்கும் படம் பிடிப்பதற்கும் உலகம் முழுவதும் இருந்து பறவைப்பிரியர்கள்,இது அதிகமாக இருக்கக்கூடிய உ.பி.,மாநிலத்திற்கு வருகைதருவர். இந்தப் பறவை தனக்கான இணையைப் பெற்றுவிட்டால் இறக்கும் வரை தன் இணையை பிரியாது வாழும் தன்மை கொண்டது.பாதுகாக்கப்படவேண்டிய பறவை இன பட்டியலில் உள்ளது, இதன் காரணமாக இதன் இனப்பெருக்கத்தின் போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் கூட செய்யாமல் விட்டுவிடுவர்இப்படிப்பட்ட பறவைகளில் ஒன்றைத்தான் ஆரிப் குணப்படுத்தி தன்வீட்டில் வைத்திருந்தார் முழுமையாக குணமடைந்ததும் அது தன் குழுவைத் தேடிச் சென்றுவிடும் என்று நம்பினார் ஆனால் முழுமையாக குணமடைந்த பின்னும் ஆரிப்பைவிட்டு பிரியாமல் வீட்டிலேயே இருந்தது, அதனைக் கொண்டு போய் அதன் வாழ்விடத்தில் விட்டுவிட்டு வருவதற்குள் கொக்கு இவரைத் தேடி இவர் வீட்டிற்கு வந்துவிட்டது
கொக்கு இப்போது ஆரிப்பின் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டது ‛பட்சா' என அழைக்கின்றனர் அது தன் உணவுப்பழக்கவழக்கங்களை மறந்து ஆரிப் வீட்டு ரொட்டி சப்ஜிக்கு பழகிவிட்டது
ஆரிப் வீட்டை விட்டு தனது மோட்டார் சைக்கிளில் கிளம்பிவிட்டால் கூடவே அதுவும் கிளம்பிவிடும் அவர் மோட்டார் சைக்களிற்கு மேல் பைக் வேகத்திற்கு பறந்து செல்லும் இதை வேடிக்கை பார்க்கவே பலரும் கூடுவர் ஆரிப் வயல்வெளியில் வேலை முடித்து மதிய உணவு சாப்பிடும் போது அவருடன் தானும் சேர்ந்து சாப்பிடும் மாலையில் வீடு திரும்பம் போது கூடவே வந்துவிடும்.
இந்தப் பறவை வெகுதுாரம் பறந்தால் சோர்ந்துவிடும் என்பதால் வெகுதுார வேலைக்கு செல்லும் போது ஆரிப் தனது பட்டசாவுக்கு தெரியாமல் சென்றுவிடுவார்,இது தெரிய வரும்போது பட்சா சோர்ந்து போய் சாப்பிடாமல் ஆரிப் வரும்வரை காத்திருந்து அதன்பிறகே உணவு எடுத்துக் கொள்ளும்.
சில நாட்களில் அதன் குழுவைச் சார்ந்த பறவைகள் இதனைத் தேடிவரும் மாலை வரை இதனுடன் விளையாடும் பின் அவைகள் அதன் இருப்பிடத்திற்கு செல்லும் ஆனால் ‛பட்சா' மட்டும் அவைகளுக்கு டாடா காட்டாத குறையாக இங்கேயே தங்கிவிடும், அது அதன் குடும்பத்துடன் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் சென்றுவிட வேண்டும் என்பதுதான் ஆரிப்பின் விருப்பமும் கூட காரணம் இது காட்டுப் பறவை வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்று வன இலாகாவினர் எச்சரித்துள்ளனர், இது ஆரிப்பிற்கு தெரிகிறது ஆனால் இந்த சட்டம் எல்லாம்‛பட்சாவிற்கு' தெரியவில்லை ,அதன் அன்பு இனம் மொழியைக் கடந்ததாக உள்ளது.
-எல்.முருகராஜ்.
அன்பை மட்டும் ஆண்டவன் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாக படைத்து விட்டான்.