''தலையே வராம போயிடுறதால, வால் எல்லாம் வர மாட்டேங்கு வே...'' என, புதிர் போட்டபடியே அரட்டைக்குள் நுழைந்தார் அண்ணாச்சி.
''யாரு, எங்க வராம போனது பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு கலெக்டரா ரெண்டு வருஷமா இருக்கிறவர், கிருஷ்ணன் உண்ணி... திங்கள் கிழமைதோறும் கலெக்டர் ஆபீஸ்ல, குறைதீர் முகாம் நடத்துவாங்கல்லா...
''இதுல, கிருஷ்ணன் உண்ணி கலந்துக்கிறதே இல்ல வே... தப்பித் தவறி வந்தாலும், 10 நிமிஷம் இருந்துட்டு, நடையை கட்டிடுதாரு... மாதம் ஒரு முறை நடக்கற விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர், முன்னாள் ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்னு எதுலயும் கலந்துக்க மாட்டேங்காரு வே...
''இந்தக் கூட்டங்களை பெரும்பாலும், டி.ஆர்.ஓ., அல்லது வேற அதிகாரிகள் தான் நடத்துதாவ... கலெக்டரே, 'மட்டம்' போடுறதால, மற்ற துறைகளின் உயர் அதிகாரிகளும் குறைதீர் கூட்டத்துக்கு வராம, கீழ்மட்ட ஊழியர்களை அனுப்பி வச்சிடுதாவ வே...
''இன்னும் சில துறைகள்ல பியூனை கூட பேருக்கு அனுப்பி வைக்காவ... கலெக்டரது முகாம் ஆபீசுக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,ன்னு யார் போனாலும், பார்க்க மாட்டாரு வே... '10:00 மணிக்கு மேல ஆபீஸ் வர சொல்லுங்க'ன்னு அனுப்பிடுதாரு... இதனால, குறைதீர் முகாம்ல மக்கள் தரும் மனுக்களுக்கு தீர்வே கிடைக்க மாட்டேங்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''அரசு நிலத்தை, 'ஆட்டை' போட பார்க்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகம், வாடகை கட்டடத்துல இயங்கிட்டு இருக்குது... மாசம், 60ஆயிரம் ரூபாய் வாடகை கட்டுறாங்க பா...
''சொந்தக் கட்டடம்கட்ட, 2021ல பேரூராட்சிக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி குடுத்துச்சு... அந்த இடத்துல இப்ப, 'மரம் நட்டு, காடு வளர்க்கப் போறோம்'னு தனியார் தொண்டு நிறுவனம் ஒண்ணு புகுந்திருக்குது பா...
''இதை யார் அனுமதிச்சதுன்னு தெரியல... வழக்கம் போல, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வர்றவங்க, இடநெருக்கடியால சிரமப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''நிழல் அமைச்சராவே வலம் வரார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க.,வுல, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி ஆகிய ரெண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலரும், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலரும் இருக்கா...
''இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரின் வலதுகரமா இருக்கற மாவட்டச் செயலர், நாலு தொகுதி உட்படஒட்டுமொத்த மாவட்டத்தையும் தன், 'கன்ட்ரோல்'ல கொண்டு வந்துட்டார் ஓய்...
''அவரது ஆதரவு இருக்கறவாளுக்கு மட்டும் தான், 'டெண்டரை' ஒதுக்கறா... எந்த துறை அதிகாரியா இருந்தாலும், அமைச்சர் தோரணையில கெத்தா பேசி, காரியத்தை முடிச்சுக்கறார் ஓய்...
''சில அதிகாரிகள், அவரது போன் கால் வந்தாலே, 'சீட்'ல இருந்து எழுந்து நின்னு தான் பேசறான்னா பாருங்க... அந்த அளவுக்கு, அவரது அதிகாரம் கொடி கட்டி பறக்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''கள்ளக்குறிச்சியில அவருக்கு தான், 'வசந்த'காலம்னு சொல்லும்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
உபயோகம் இல்லாத துறைக்கு போட வேண்டும்.