''வாய்க்கு வந்தபடி ஏசுதாவளாமே அந்தம்மா...'' என்றபடியே, நாளிதழை மடித்து பெஞ்சில் வைத்தார் அண்ணாச்சி.
''விபரமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்லா... அங்க, தனியா குற்றப்பிரிவை சமீபத்துல தான் ஆரம்பிச்சாவ... அங்கன பொறுப்பு வகிக்கிற பெண் அதிகாரியிடம் புகார் குடுக்க போனா, கொலையா கொன்னு எடுத்துடுதாங்க வே...
''புகார் குடுக்க வர்றவங்களை வாய்க்கு வந்தபடி அசிங்கமா ஏசுதாங்க... அதனால, ஸ்டேஷன் பக்கம் வரவே ஜனங்க பயப்படுதாவ வே...
''ரியல் எஸ்டேட் விவகாரத்துல, கட்டப் பஞ்சாயத்து செஞ்சு காசு பார்க்காங்க... பிடிபடும் குற்றவாளிகளிடம் பேரம் பேசி, 'டீல்' முடிஞ்சா வெளியே அனுப்பிடுதாங்க வே...
''இல்லன்னா, 'உள்ள' தள்ளிடுதாங்க... 'இந்தம்மா வந்த பிறகு தான் குற்றங்கள் அதிகரிச்சுட்டு'ன்னு ஏரியா மக்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''லஷ்மி மேடம் சொல்லிட்டா, அதுக்கு அப்பீலே கிடையாதுண்ணா...'' என, மொபைல் போனில் பேசிவிட்டு வைத்த குப்பண்ணாவே அடுத்த தகவலை தொடர்ந்தார்...
''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்ல, தன் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை நிறுத்த தான், இளங்கோவன் விரும்பினார் என்கிற சங்கதி ஊருக்கே தெரியும் ஓய்...
''ஆனா, முதல்வர்ஸ்டாலின் தலையிட்டு, 'நீங்க தான் நிக்கணும்'னு அழுத்தம் குடுத்ததால,இளங்கோவனும் மனசை மாத்திண்டார்... தேர்தல்ல ஜெயிச்சிட்டாலும், மாறி மாறி உடம்பு படுத்திண்டே இருக்கு... இப்ப வரைக்கும் ஆஸ்பத்திரியிலயே இருக்கார் ஓய்...
''தொகுதி மக்களுக்கு, தி.மு.க.,வினர் நன்றி சொன்னாலும், எம்.எல்.ஏ., வராதது குறையாதான் இருக்கு... இதனாலயோ என்னமோ, அரசு விழாக்கள்ல, இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்தையும் உட்கார வைக்கறா ஓய்...
''காங்., நிகழ்ச்சிகள்லயும் முக்கியத்துவம் குடுக்கறா... இப்போதைக்கு அப்பாவுக்கு பதிலா, மகன் முகத்தை பொது வெளியில காட்டி நிலைமையை சமாளிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''போலீஸ் டிபார்ட்மென்டுல, உதயநிதி அணி ரொம்ப வேகமா வளர்ந்துட்டு வருதுங்க...'' என்படியே, டீயை குடித்து முடித்தார் அந்தோணிசாமி.
''இது, அப்பா ஸ்டாலினுக்கு தெரியுமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தெரியாம இருக்குமா... ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டத்துல நடக்கிற அரசியல் எப்பவுமே, 'ஹை லெவல்'ல தாங்க இருக்கும்... இதுவரை முதல்வரா இருந்தவங்கள்ல, கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி தான், ஐ.பி.எஸ்., அதிகாரிகளை ரொம்ப நெருக்கமா வச்சிருந்தாங்க...
''இவங்களை விட, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவான ஐ.பி.எஸ்., அணி அப்ப ரொம்ப, 'பவர்புல்'லா இருந்துச்சுங்க...
''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல்வரின் மருமகன் ஐ.பி.எஸ்., அணி தான் பலம் பொருந்தியதா இருந்துச்சு... உதயநிதி அமைச்சரனதும் நிலைமை மாறுதுங்க...
''அவர் பக்கமும், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அணி ஒண்ணு உருவாகிடுச்சு... அதிகாரிகளுக்கு என்ன வேலை ஆகணும்னாலும், உதயநிதியை தான் பார்க்கிறாங்க... அவரும், தட்டாம செஞ்சு குடுத்துடுறாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
இன்பநிதி ஐ பி எஸ் அணி உருவாக்க வில்லையே அன்று ஆறுதல் கொள்ளுங்கள்.