பெரிய அளவில், அதுவும் உலோகத்தால் அச்சிடும் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் இப்போது வரத் துவங்கியுள்ளன. ராக்கெட், விமானம் போன்றவற்றின் பெரிய உதிரி பாகங்களை அச்சிட இவை உதவும். ஆனால், பெரிய முப்பரிமாண அச்சியந்திரங்கள், உலோகத் துகள்களை சூடாக்க லேசர் கதிரைப் பயன்படுத்துகின்றன. இதற்கு மின்சாரம் கூடுதலாகத் தேவை என்பதோடு, கலன்களின் அளவுக்குள்தான் உதிரி பாகத்தை அச்சிட முடியும்.
எனவேதான், ஆபத்தான லேசரைத் தவிர்த்துவிட்டு, வழக்கமான 'இன்டக்சன்' அடுப்பில் உள்ளதைப் போல, இன்டக்சன் முப்பரிமாண அச்சியந்திரத்தை வடிவமைத்திருக்கின்றனர், அமெரிக்காவிலுள்ள, ரோசோடிக்ஸ் (Rosotics) நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள். இன்டக்சன் அடுப்பைப்போலவே பெரிய கம்பிச் சுருள், மின்காந்தப் புலத்தை ஏற்படுத்த, அதன் நடுவே, உலோகத் தண்டுகளை செலுத்தும்போது, அது சூடாகி உருகும். அப்போது வேண்டிய வடிவத்தில் பொருளை, படலம் படலமாக அச்சிடலாம்.
ரோசோடிக்சின் ஆராய்ச்சியாளர்கள் காந்தத்தைக் கடத்தாத அலுமினியத்தையும் இதே முப்பரிமாண அச்சியந்திரத்தில் உருக்கவும் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் விண்கலன் மற்றும் விமானங்களுக்கான பெரிய அலுமினிய உதிரி பாகங்களை அச்சிட முடியும் என ரோசோடிக்சசின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!