ஆராய்ச்சிக் கூடு!
தேனீக்கள் கூட்டுக்குள் இயங்கும் விதத்தை ஆராய்வது சவால் மிக்க வேலை. தேனீக்களின் நடத்தைகளில் பல, தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மாறுபவை. எனவே, தேனீக்கள் மெழுகால் கூடு கட்டும் சட்டகத்திற்குள், உணரிகள் மற்றும் மோட்டார்களை வைத்து, கண்காணித்து வருகின்றனர்.
ஆஸ்திரியாவின், கிராஸ் பல்கலை விஞ்ஞானிகள். கூட்டுக்குள் வெப்பநிலையை மாற்றி, தேனீக்களின் நடத்தையில் என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும். மின்னணு சாதனங்களால் தேனீக்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வண்டு கொல்லி
வறட்டுப் பாலைவனத்திலும், காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் வண்டு ஒன்று உண்டு. அது காற்றடிக்கும் திதையில் தன் பின்புறத்தை உயர்த்தியபடி நிற்கும். அப்போது அதன் பின்பகுதியில், கழிவு வெளியேற்றும் குழாய் முழுவதுமே, காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, ரத்த ஓட்டத்தில் கலக்க உதவுவதை, டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தானியங்களை வண்டுகள் சேதப்படுத்துகின்றன. காற்றில் ஈரத்தை உறியும் அந்தத் தன்மையை குலைக்கும் வகையில் மருந்துகளை உருவாக்கினால், அவை சிறந்த வண்டு கொல்லிகளாக இருக்கும் அல்லவா?
ஏலத்தில் டைனோசர்!
சுவிட்சர்லாந்தில், அடுத்த மாதம், டி. ரெக்ஸ் டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு ஏலத்திற்கு வருகிறது. 'டிரினிட்டி' என்று பெயரிடப்பட்ட அந்த டைனோசரின் காலம், 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன். அமெரிக்காவில், இரு மாநிலங்களில் கிடைத்த 'டி ரெக்ஸ்' எலும்புகளை சேர்த்து உருவாக்கப்பட்டது டிரினிட்டி. ஏலத்தில் 8.8 கோடி டாலர்களுக்கு கோரப்படலாம் என வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர். தனியார் அதை கோரினால், பொது தொல்காட்சியகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கைக்கு டி ரெக்ஸ் கிடைக்காமலேயே போகக்கூடும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் மூங்கிலா?
தரிசு நிலத்தை விளை நிலமாக்கி, காற்றிலுள்ள கரியமில மாசை கணிசமாக உறிஞ்சக்கூடியது மூங்கில். இதை பயிரிட்டு வளர்க்க சிறிதளவு நீர் போதும். விளைச்சல் அமோகமாக இருக்கும். இப்போது ஆசியாவிலிருந்து, மூங்கிலைச் சுமந்து புகை கக்கியபடி வாகனங்கள் ஐரோப்பாவுக்குப் போகின்றன.
இதைத் தவிர்க்க ஐரோப்பிய மூங்கில் தேவையை போர்ச்சுகலில் வளர்க்கலாம் எனத் திட்டமிடுகிறது 'பேம்பூலாஜிக்.' பூச்சிக்கொல்லி தேவைப்படாத மூங்கிலை, 2,000 ஹெக்டேரில் நட்டு, ஆண்டுக்கு 48 டன்கள் கரியமில வாயுவை காற்றிலிருந்து நீக்க முடியும் என்கின்றனர் பேம்பூலாஜிக்கின் நிறுவனர்கள்.
தொற்றை எதிர்க்கும் வவ்வால்!
மனிதக் கூட்டத்திற்குள் பல விநோத வைரஸ்களை பரப்புபவை வவ்வால்களே. ஆனால், கொரோனா, ரேபீஸ், எபோலா என பலவகை வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல் வவ்வால்களுக்கு உண்டு. வவ்வால்களின் மரபணுக்கள், புதிய வகை வைரஸ்களைப் பற்றிய தகவல்களை உடனடியாக உள்வாங்கி, அவற்றை எதிர்க்கும் அணுக்களை உடலில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக இருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். வவ்வால்களின் இந்தத் தன்மையை மேலும் ஆராய்ந்தால், மனித நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் மருந்துகளை உருவாக்கலாம் என்கிறது 'நேச்சர்' இதழ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!