''நடிகர் கமல் கட்சிக்காரங்க, ஜரூரா வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க...'' என்றபடியே, ரேடியோ சத்தத்தை குறைத்து விட்டு அமர்ந்தார் அந்தோணிசாமி.
''விபரத்தை எடுத்து விடும்...'' என்றார், அண்ணாச்சி.
''அடுத்த வருஷ மத்தியில லோக்சபா தேர்தல் வர்றதால, மக்கள் நீதி மய்யம் கட்சியினர், தேர்தல் பணியில வேகம் காட்ட துவங்கிட்டாங்க... ஸ்ரீபெரும் புதுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சமீபத்துல கூட்டினாங்க...
''கூட்டத்துல, 'ஒரு பூத் கமிட்டிக்கு, 20 பேர் வரையும், ஒரு சட்டசபை தொகுதிக்கு, 600 பேர் வரையும் நியமிச்சா தான், தேர்தலை சிக்கல் இல்லாம சந்திக்க முடியும்'னு முடிவெடுத்தாங்க... அதனால, உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை நடத்த, கமல் உத்தரவிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இடம் மாற மாட்டேன்னு அடம் பிடிக்கறார் ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை சிட்டிக்குள்ள, 15 வருஷத்துக்கு மேல போக்குவரத்து போலீசா இருக்கறவாளை, 'லிஸ்ட்' எடுத்து, அவாளை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு சமீபத்துல மாத்தினா ஓய்...
''கிட்டத்தட்ட, 200க்கும் அதிகமான போலீஸ்காராளை இப்படி மாத்தினா... இதுல, வடசென்னை போக்குவரத்து பிரிவுல இருக்கற அதிகாரி ஒருத்தர் மட்டும், இடம் மாறாம அடம் பிடிக்கறார் ஓய்...
''ஆளுங்கட்சிக்காராளை பிடிச்சு, அதே இடத்துல நீடிக்க முயற்சி பண்ணிண்டு இருக்கார்... இதுக்காக, 5 லட்சம் ரூபாய் வரை செலவு செஞ்சிட்டதாகவும் சொல்லிண்டு திரியறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே, ''வாங்கோ சிவா... அந்த சேரை இழுத்து போட்டு உட்காருங்கோ...'' என, நண்பரை வரவேற்றார்.
''சின்ன 'கேப்' கிடைச்சாலும், உள்ள புகுந்து கும்மி அடிச்சிடுதாவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக பட்ஜெட்ல, உயர்கல்வித் துறைக்கு தான் இருக்கிறதுலயே ரொம்பவும் குறைவா நிதி ஒதுக்கியிருக்காவ வே... கல்லுாரி கட்டமைப்பு, பேராசிரியர்கள் சம்பள செலவுகளை கழிச்சிட்டா, கையில ஒண்ணும் மிஞ்சாதாம்...
''ஏதாவது பணி நியமனம், 'டிரான்ஸ்பர்'னு வந்தா தான், நாலு காசு பார்க்க முடியும்னு துறையின் பெரிய புள்ளிகளே அலுத்துக்கிடுதாவ... இதை, அ.தி.மு.க., ஆட்சியில, உயர்கல்வித் துறையில இடைத்தரகரா இருந்தவரு, எப்படியோ மோப்பம் பிடிச்சிட்டாரு வே...
''விழுப்புரம் வழியா, சென்னை கோட்டைக்குள்ள மறுபடியும் காலடி எடுத்து வைக்க முயற்சி பண்ணுதாரு... 'கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம், கல்லுாரி முதல்வர்கள் பதவி உயர்வு, கல்லுாரி கல்வி இயக்குனர் பதவின்னு, பல வழிகள்ல வலை விரிச்சு கல்லா கட்ட என்னால முடியும்'னு மேல்மட்டத்துக்கு துாது அனுப்பி இருக்காரு...
''எப்படியும், 'கிரீன் சிக்னல்' கிடைச்சிடும்கிற நம்பிக்கையில, மாவட்ட அளவுல இருக்கிற தன்னோட தரகு ஆட்களை இப்பவே களத்துல இறக்கி விட்டிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''மாறவர்மன், ஊர்ல இருந்து எப்ப வந்தேள்...'' என விசாரிக்க, நண்பர்கள் நடையைக் கட்டினர்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு, 600 பேர் வேண்டுமென்றால், ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு (உலக நாயகன் அடி போடும் பதவிக்கு) குறைந்தது 3600 பேராவது வேண்டுமே ?? உறுப்பினர்களை சேர்த்தாலும் அவ்வளவு பேர் கிடைப்பாங்களா ?