மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அனீஷ் சேகர் தலைமையில், விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, விவசாயி ஒருவர், 'கேரளாவுக்கு ஆட்டுப் புழுக்கைகளை எடுத்துச் செல்ல, கலெக்டர் தடை விதிக்க வேண்டும்' என்றார். அந்த விவசாயியிடம், 'மண்ணில் இருக்க வேண்டிய கரிமச் சத்தின் அளவு என்ன?' என, கலெக்டர் கேட்க, '5 சதவீதம்' என, அவர் பதில் கூற, பாராட்டிய கலெக்டர், 'மதுரையில் எத்தனை சதவீதம் உள்ளது?' என்று வினவினார்.
அதற்கு அந்த விவசாயி, 'வெறும், 0.5 சதவீதம் தான்' என, சளைக்காமல் பதிலளித்ததும், சக விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்ய, கலெக்டரும் கைதட்டினார்.
தொடர்ந்து பேசிய கலெக்டர், 'புள்ளி விபரம் சரியாக சொன்னதற்காக பாராட்டுகிறேன். மதுரையில் தான், கரிமச் சத்து மிகக் குறைவாக உள்ளது. அதை சரி செய்வது உங்கள் கையில் உள்ளது. வயலில் மாட்டுச்சாணம், ஆட்டுப் புழுக்கை பயன்படுத்தினால், கரிமச்சத்து அதிகரிக்கும்' என்றார்.
அரசு அதிகாரி ஒருவர், 'குறைதீர் கூட்டத்தை, கலெக்டர் வகுப்பறை மாதிரி மாத்திட்டாரே... எப்படியோ, நம்ம விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வந்தால் சரிதான்...' என, முணுமுணுத்தபடி நடந்தார்.
நம் மண் வளத்துக்கு உதவும் உரம் கடத்தப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மொட்டையாகக் கூறாமல், விவசாயிகளின் வேளாண்மை அறிவை அறியும் ஆர்வம் காட்டியதற்கு கலெக்டர் பாராட்டப்பட வேண்டியவர்தான்