ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: பழநி கோவில் மட்டுமல்ல, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 32 கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில், 650 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியில் இறைவன் மகிழ்ச்சியோடு இருக்கிறான்.
டவுட் தனபாலு: இறைவன் மகிழ்ச்சியோடு இருக்காரோ, இல்லையோ... ஆனா, நீங்க அளித்த எண்ணற்ற வாக்குறுதிகள் நிறைவேறும் என எதிர்பார்த்தும், புதிய விடியல் பிறக்கும் என நம்பியும், உங்களுக்கு ஓட்டு போட்ட ஏராளமானோர் மகிழ்ச்சியா இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உதவி எஸ்.பி., பல்வீர் சிங், அடிதடி, அலப்பறையில் ஈடுபடுவோரை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வார். அவர்களின் கைகளை, போலீசார் பின்பக்கமாக கட்டுவர். பின், சாதாரண உடைக்கு மாறும் பல்வீர் சிங், அந்த நபரின் வாயில் ஜல்லிக் கல்லை போட்டு அடிப்பார். 'கட்டிங் பிளேயர்' வாயிலாக, ரத்தம் சொட்ட சொட்ட பற்களை பிடுங்கி எறிவார். மர்ம உறுப்பை தாக்கியும் சித்ரவதை செய்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
டவுட் தனபாலு: அடடா... ஹிட்லரின் வதை முகாம் கதைகளை விட கொடூரமா இருக்குதே... பல்வீர் சிங்கை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாத்தினால் மட்டும் போதாது... அவரை நல்ல மனநல மருத்துவரிடம் காட்டி சிகிச்சை தரணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
மேற்கு வங்க சட்டபை எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 3.60 கோடி பயனாளர்களை மேற்கு வங்க அரசு பதிவு செய்துள்ளது. இதில், 1 கோடி பயனாளர்கள் போலி. திரிணமுல் காங்., தனியார் நிறுவனம் போல செயல்படுகிறது.
டவுட் தனபாலு: மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகையே, கிட்டத்தட்ட, 10 கோடி தானே... நீங்க சொல்ற கணக்கை பார்த்தா, மூன்றில் ஒருவர் ஊரக வேலை உறுதி திட்டத்துல இருக்காங்களா... அந்த 1 கோடி பேரும், மம்தாவின் கட்சியினரா தான் இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
இறைவன் மகிழ்ச்சியில் இருப்பது இவருக்கு எப்படி தெரிகிறது? கனவில் சாமி வந்து சொல்லிச்சா? எந்த சாமி, அல்லொலியாவா இல்லை வேறு சாமியா? இறைவன் இருக்கிறான் என்பதை திமுக ஒப்புக்கொள்கிறதா?