''நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டவங்களை, அமைச்சர் அடக்கிட்டாருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, பரங்கிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர்கள் ஏழு பேர், தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒன்றியதலைவி, துணைத் தலைவர் மேல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரணும்னு, செங்கல்பட்டு கலெக்டரிடம் சமீபத்துல மனு குடுத்தாங்க...
''அதுல, 'எங்க வார்டு கோரிக்கைகளை தலைவியும், துணைத் தலைவரும் கண்டுக்கிறதே இல்லை... அவங்க வார்டுகள்ல தான் நிறைய வளர்ச்சி பணிகளை செய்றாங்க... அதுவும் இல்லாம, ஒன்றிய தலைவியின் கணவரது குறுக்கீடும் அதிகமா இருக்குது'ன்னு குமுறியிருந்தாங்க...
''இது, மாவட்ட அமைச்சர் அன்பரசன் கவனத்துக்கு போனதும், எல்லா கவுன்சிலர்களையும் அழைச்சு சமாதானப்படுத்தி அனுப்பியிருக்காருங்க... இதனால, சமீபத்துல நடந்த ஒன்றிய கூட்டத்துல எல்லா கவுன்சிலர்களும் கலந்துக்கிட்டாங்க...
''அதுவும் இல்லாம, சம்பந்தப்பட்ட ஏழு கவுன்சிலர்களின் வார்டுகள்ல சில வளர்ச்சி பணிகளுக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி
''உடலை மீட்டு குடுக்க, 8,000 ரூபாய் வாங்கியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எங்கவே இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பொரி வியாபாரி பழனியின் மகன் விஜய்... 35 வயசான இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் வேற...
''போன வாரம் நடுராத்திரி, அங்க இருந்த கிணற்றுல தவறி விழுந்து இறந்து போயிட்டார்... தீயணைப்பு துறையினர்,'தண்ணீர் அதிகமா இருக்கறதால, மோட்டார் வச்சு இறைச்சிட்டு தான் பாடியை எடுக்க முடியும்... கார்த்தால வரோம்'னு சொல்லிண்டு போயிட்டா ஓய்...
''கார்த்தால வந்து, கிணற்றுல இறங்கி விஜய் உடலை மீட்டா... ஆனா, பொரி வியாபாரி பழனிகிட்ட, 'மோட்டார் வச்சிருந்தா, 20 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்... நீங்க, 10 ஆயிரம் மட்டும் தாங்க, போதும்'னு கேட்டிருக்கா ஓய்...
''தினமும் பொரி வித்து பிழைக்கற பழனி, நொந்து போய், 8,000 ரூபாயை புரட்டி குடுத்திருக்கார்... இது ஒரு சாம்பிள் தான் ஓய்...
''கரும்பு தோட்டத்துல தீ பிடிச்சா அணைக்க ஒரு தொகை, கிணத்துல பசுமாடு, மனுஷாள் விழுந்து இறந்துட்டா, 'பாடி'யை எடுக்க ஒரு தொகைன்னு, மனிதாபிமானமே இல்லாம தீயணைப்புத் துறையினர் வசூல் பண்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''இருளர் மக்களின்சோக கதையை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்டத்துல, இருளர் இன மக்களுக்கு, அரசு சார்புல நுாத்துக்கணக்கான தொகுப்பு வீடுகளை கட்டி குடுத்திருக்காவ... ஆனா, அந்த வீடுகளுக்கு பல வருஷமா மின் இணைப்பு இல்ல வே...
''ஏன்னா, கூலி வேலைக்கும், பாம்பு பிடிக்கும் வேலைக்கு போற அவங்களால, மின் இணைப்புக்கான டிபாசிட் பணம், 10 ஆயிரத்தை கட்ட முடியல... இதனால, கொசுக் கடியிலயும், வெக்கையிலயும் கிடந்து தவிக்காவ வே...
''படிக்கிற குழந்தைகள், அகல் விளக்குல படிச்சிட்டு இருக்காவ... 'இவங்களது மின் இணைப்பு டிபாசிட்டுக்கு சிறப்பு நிதி தரணும்'னு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறைக்கு போன வருஷமே கடிதம் எழுதியும், எந்த நடவடிக்கையும் இல்ல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
இருளர் கடைசிவரை இருட்டில் தான் இருக்ணுமா. ?? விடியலரசில் விடிவு வராதா..??