தமிழக காங்., தலைவர் அழகிரி: காந்தியிடம், எம்.எல்.ஏ., - எம்.பி, கட்சி தலைவர் என, எந்த பதவியும் இல்லை. ஆனால், அவரிடம் லட்சிய பார்வை இருந்தது; அதே லட்சிய பார்வை, ராகுலிடம்உள்ளது. அதனால் அவருக்கு,பதவி ஒரு பிரச்னை கிடையாது. பதவி இல்லா விட்டாலும் அவர் வலிமையாக செயல்படுவார்.
டவுட் தனபாலு: நீங்க, உங்க கட்சியின் தலைமையை எவ்வளவு வேண்டுமானாலும், புகழ்ந்து தள்ளுங்க... அது உங்க உரிமை, ஏன் கடமையும்கூட... ஆனா, ஒரு எம்.பி., பதவியை பறிச்சிட்டதாலயே, ராகுலும், மகாத்மா காந்தியும் ஒன்றாகிடுவாங்களா என்ற, 'டவுட்' கிளம்புதே!
lll
பத்திரிகை செய்தி: வாரிசு அரசியலுக்கு எதிராகபோர்க்கொடி துாக்கிய, ம.தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகளை, உட்கட்சி தேர்தல் வாயிலாக, 'களை' எடுக்க, அக்கட்சியின் தலைமை நிலைய செயலர் துரை திட்டமிட்டுள்ளார். மூத்த மாவட்ட செயலர்களையும் ஓரங்கட்டி விட்டு, இளைஞர்களை மாவட்டச் செயலர்களாக நியமிக்கவும், துரை தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டவுட் தனபாலு: அப்படியா...? உட்கட்சி தேர்தல் நடந்தா, போட்டி போட்டு பதவிக்கு வரக்கூடிய அளவுக்கு, ம.தி.மு.க.,வுல ஆட்கள் இருக்காங்களா என்ற, 'டவுட்' எழுதே!
lll
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழ் அழிவின் விளிம்பில் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், தமிழ் மொழி இருக்காது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆங்கில கலப்புச் சொற்களை பயன்படுத்தி, தமிழ் மொழியை அழிக்கிறோம். வணிகர்கள் பிற மொழி கலப்பில்லாமல், தமிழ் மொழியில் கடைகளுக்கு பெயர் வைக்க வேண்டும். இல்லாவிட்டால்,தார் வாளி, ஏணியுடன் வருவோம்.
டவுட் தனபாலு: வழக்கமா டாக்டர் ராமதாஸ், ஆளுங்கட்சியை விமர்சித்து தான் அரசியல் நடத்துவார்... இப்ப, அங்க கூட்டணியை ரகசியமா உறுதிப்படுத்திட்டதால, அவங்களையும் எதிர்க்க முடியாம, சும்மாவும் இருக்க பிடிக்காம, 'தமிழ்' ஆயுதத்தை கையில ஏந்துறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
முதல்ல சன் டிவில ஆரம்பிக்கலாம்.