காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யாக இருந்தவருமான ராகுல், 2019 ஏப்ரல்,13 ல் கர்நாடக மாநிலம், கோலாரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, 'அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிகிறது' என்று பேசினார்.
வங்கி மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டதால், வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய தொழிலதிபர் லலித் மோடி ஆகியோருடன், பிரதமர் மோடியின் பெயரை ஒப்பிட்டு, ராகுல் இவ்வாறு பேசியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதேநேரத்தில், அவருக்கு உடனடியாக ஜாமின் வழங்கிய நீதிமன்றம், மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனையை மட்டும் தற்காலிகமாக, 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுலின் எம்.பி., பதவியை, லோக்சபா செயலகம் பறித்தது. மத்திய அரசின் இந்தச் செயலை, ஜனநாயகப் படுகொலை என, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
'ஊழல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில், 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை, பார்லிமென்ட் செயலகம் உடனே பறிக்க வேண்டும்; எந்தக் காரணத்திற்காகவும் ஒத்தி போடக்கூடாது' என்று, சுப்ரீம் கோர்ட், 2013 ஜூலையில் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும் நிராகரித்து விட்டது.
இந்நிலையில், கிரிமினல் அரசியல்வாதிகளை காப்பாற்றவும், அவர்களுக்கு துணை போகும் வகையிலும், மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின், 8வது பிரிவில் சில மாற்றங்களை செய்தது. அதன் வாயிலாக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றாலும், அவர்கள் பதவியில் நீடிக்க வழி வகை செய்யப்பட்டது.
இந்த திருத்தத்தை அவசர சட்டமாக செயல்படுத்த, மன்மோகன் சிங் தலைமையிலான, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தும், பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்ததால், ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
அந்த நேரத்தில், காங்., - எம்.பி.,யாக இருந்த ராகுலும், 'மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் முட்டாள் தனமானது' என்று கூறியதால், சர்ச்சை வெடித்தது. இதனால், அந்த அவசர சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற நேரிட்டது. ராகுல் எந்த அவசர சட்டத்தை முட்டாள் தனமானது என்று கூறினாரோ, அதுவே தற்போது அவருக்கு பாதகமாகி விட்டது.
சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த ராகுல், அங்கு இந்திய ஜனநாயகம் குறித்து விமர்சித்து பேசிய விவகாரம், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சில நாட்களாக புயலை கிளப்பி வந்த நிலையில், ராகுலுக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரின் எம்.பி., பதவி உடனே பறிக்கப்பட்டது, நாடு முழுதும் அரசியல் கட்சிகள் மத்தியில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், பொதுவாழ்வில் உள்ளவர்கள், குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சிகளில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், பொதுக்கூட்டங்களிலோ, தேர்தல் பிரசார பேரணிகளிலோ பேசும் போது, பொறுப்புணர்ந்து பேச வேண்டும். எதிர்க்கட்சிகளையும், அக்கட்சியின் தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி விமர்சிப்பதையும், தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையும் தவிர்க்க வேண்டும். மக்களின் ஓட்டுகளை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில், நிதானம் தவறி பேசுவதை கைவிட வேண்டும். எல்லாருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்றாலும், அதுவும் எல்லை மீறக்கூடாது. அப்படி எல்லை மீறினால், வழக்குகளையும், தற்போது ராகுலுக்கு விதிக்கப்பட்டது போன்ற தண்டனைகளையும் எதிர்கொள்ளத்தான் நேரிடும்.
எது எப்படியோ, ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்தது, நாடு முழுதும் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், வாய்ப்பூட்டாகவும் அமைந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!