சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்: போதை பொருட்கள் குறித்து ஆவண குறும்பட போட்டி நடத்தி, வெற்றி பெறும் குறும்படங்களை பள்ளி, கல்லுாரிகளில் திரையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டிக்கு, 300க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்தன. சிறந்த நான்கு குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
டவுட் தனபாலு: நீங்க தேர்வு செஞ்ச அந்த நாலு குறும்படங்கள்லயும், 'டாஸ்மாக்' மதுவால விளையும் தீமைகள் பற்றிய குறும்படங்கள் இருக்கவே இருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: இம்மாதம், 21ம் தேதி நிலவரப்படி, 16.93 லட்சம் விவசாயிகளுக்கு, 13 ஆயிரத்து, 29 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுவே, இதுவரை வழங்கப்பட்ட பயிர் கடனில் உச்ச அளவாகும்.
டவுட் தனபாலு: விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் அதிக அளவில் வழங்குவது வரவேற்க வேண்டிய ஒன்று தான்... ஆனா, அடுத்த வருஷம் லோக்சபா தேர்தல் வருது... அதுவரை கடனை கட்டாம இழுத்தடிச்சா, தள்ளுபடி, கிள்ளுபடி கிடைக்குமோன்னு, பலரும் பாய்ந்து, பாய்ந்து கடன் வாங்குறாங்களோ என்ற, 'டவுட்' வருதே!
தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி: மாணவர்கள், பகுத்தறிவை வளர்த்து கொள்ள வேண்டும். 'வாட்ஸ் ஆப்' செயலியில் வரும் தவறான செய்திகளை, மாணவர்கள் நம்பி விட வேண்டாம். உண்மையான செய்திகளை விட, வதந்திகள் எளிதில் மக்களிடம் சென்று சேர்ந்து விடுகின்றன.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... தேர்தல் பிரசாரத்துல நீங்க சொன்ன, '௫ சவரன் நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி; 'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் இருக்குது' என்ற, 'வதந்தி'யை பலரும் நம்பியதால தான், இப்ப, தி.மு.க., ஆட்சி நடக்கிறது; அதுல, நீங்க அமைச்சராகவும் வலம் வர்றீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை.
'மாணவர்களே , கஞ்சா, குட்கா என்று கண்டதையும் தின்று கெட்டுப்போகாமல் உங்களுக்காகவே நினைத்த இடங்களிலெல்லாம் திறந்து வைத்து 'சேவை' செய்யும் டாஸ்மாக் சரக்கையே குடித்து உருப்படுங்கள் என்று 'நீதி' யுடன் குறும்படத்தை முடிக்கலாம்