முதல்வர் தொகுதியா... அலறும் அதிகாரிகள்!
''கண்மாய், கழிவு நீர் தேக்கம் ஆகிடும் போலிருக்கு வே...'' என்றபடியே, பிஸ்கட்டை கடித்தார் அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''முதல்வர் ஸ்டாலின், 'மதுரை மாடக்குளம்கண்மாய் நிரந்தர நீர்த்தேக்கம் ஆக்கப்படும்'னு சமீபத்துல சொன்னாரு... மொத்தம், 450 ஏக்கர்ல பரந்து விரிஞ்சு கிடக்குற கண்மாயின் மறுபக்கம், ஏற்குடி அச்சம்பத்து பஞ்சாயத்து இருக்கு வே...
''அந்த பகுதி மக்கள், கண்மாய்க்குள்ள கழிவு நீர், குப்பை கழிவுகளை கலந்துடுதாவ... கண்மாய் கரையில கற்கள் பதிச்சு, 23 கோடி ரூபாய் செலவுல கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைச்சு, அங்கன குப்பை கொட்டாம, பாதுகாக்க திட்டம் தயாரா இருக்கு வே...
''ஆனா, அதிகாரிகள் ஒப்புதல் தராம இழுத்தடிக்காவ... இப்படியே விட்டா, ஒருபக்கம் சுத்தமான மழைநீரும், மறுபக்கம் சாக்கடை நீரும் கலந்து, கண்மாய் நாறிடும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆபத்பாந்தவரா இருந்து காப்பாத்திண்டு இருக்கார் ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக, காங்., தலைவர் அழகிரி, நாலு வருஷத்துக்கும் மேல அந்த பதவியில, 'தம்' கட்டி நிக்கறார்... அந்தப்பதவியை பிடிக்க, கோஷ்டி தலைவர்கள் முட்டி மோதிண்டு இருக்கா ஓய்...
''புதிய தலைவரை நியமிக்க, காங்கிரஸ் மேலிடம் பட்டியலை துாசி தட்டிய நேரத்துல, 'நேஷனல் ஹெரால்டு' என்ற பழைய காங்., பத்திரிகை விவகாரம் பூதாகரமாயிடுத்து... சோனியாவும், ராகுலும் அமலாக்கத் துறை விசாரணையில சிக்கிண்டதால, அழகிரி பதவி தப்பிச்சது ஓய்...
''அதுக்கு அப்பறமா, 'த.மா.கா., தலைவர் வாசன் காங்கிரஸ்ல சேர்ந்தா, அவர் தலைமையில வேலை செய்ய தயார்'னு அழகிரி வாயை விட்டாரோல்லியோ... இதை, எதிர் கோஷ்டிகாரா டில்லியில பத்த வச்சுட்டா ஓய்...
''இந்த நேரம் பார்த்து, ராகுலை, எம்.பி., பதவியில இருந்து தகுதி நீக்கம் செஞ்சுட்டாளோல்லியோ... அந்த பிரச்னையை சமாளிக்கறதுல கட்சித் தலைமை மூழ்கிடுத்து... இப்படி, ஒவ்வொரு தடவையும் அழகிரி பதவிக்கு ஆபத்து வரும்போதெல்லாம், ராகுல் ஆபத்பாந்தவரா வந்து, அழகிரியை காப்பாத்திண்டு இருக்கார் ஓய்...'' என, சிரித்தபடியே முடித்தார் குப்பண்ணா.
''முதல்வர் தொகுதின்னாலே, அலறுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான, சென்னை, கொளத்துார் போலீஸ் துணை கமிஷனரா இருந்த ராஜாராமை, பிப்ரவரி மாசம் கடலுாருக்கு, 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க... அதுக்கு அப்புறம், புது துணை கமிஷனரா யாருமே பொறுப்பு ஏற்கலைங்க...
''அண்ணா நகர் துணை கமிஷனர் ரோஹித் நாதன் தான், கொளத்துாரை கூடுதலா கவனிக்கிறாரு... இது, முதல்வர் தொகுதிங்கிறதால, பல நெருக்கடிகள் வருதுங்க...
''அடாவடி ஆளுங்கட்சியினர் மேல புகார் வந்தா தடாலடியா நடவடிக்கை எடுக்க முடியாதுங்க... இதனால, போலீஸ் மேல பொதுமக்களும் அதிருப்தியில இருக்காங்க... நகை பறிப்பு, மாமூல் வசூல், ரவுடித்தனம் போன்ற குற்றங்களும் அதிகரிச்சிடுச்சுங்க...
''இவ்வளவு சிக்கல்களையும் சமாளிச்சு, அங்க குப்பை கொட்ட முடியாதுன்னு தான், துணை கமிஷனர் பொறுப்புக்கு யாரும் வர மாட்டேங்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
அடாவடி ஆளுங்கட்சியினர் மேல புகார் வந்தா தடாலடியா நடவடிக்கை எடுக்க முடியாதுங்க... ... அப்படீனா கட்சி ஆபீஸையே போலீஸ் ஸ்டேஷன் ஆக்கிட போறாங்க.. அதுதான் திராவிட நல்பொன்னாடு..