''அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை'' என்கிறார் புத்தர். வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்து, சம்பாதித்த பின் அமைதியை நாடித்தான் மனம் செல்கிறது. அமைதியே இன்பத்திற்கு காரணம் என போதனை மூலம் வெளிப்படுத்திய புத்தருக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறந்த கட்டமைப்புடன் கோயில் கட்டியுள்ளனர். அதே மாடலில் சிவகங்கை அருகே பாகனேரியில் 'புத்தர் பீடம்' அமைத்து அதற்கு 'மனோமயா புத்தர்' பீடம் என பெயர் வைத்துள்ளார் ஓய்வு ஆசிரியர் சொக்கலிங்கம் மகன் மணிகண்டன்.
அவர் கூறியதாவது:
நான் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் உட்பட 9 நாடுகளில் தரைவழி இணைப்பு தொலைபேசி கம்பெனி நடத்துகிறேன். எங்கள் முன்னோர்களின் (நகரத்தார்) ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணி, தாய்லாந்து நாட்டின் 'வாட் பாக் நாம்' கோயிலை சேர்ந்த புத்த பிட்சுக்களின் ஆலோசனைப்படி பாகனேரியில் 'புத்தர் கோயில்' அமைக்க முடிவு செய்தேன். வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி சிலை தயாரிப்பில் இறங்கினேன். ஜெய்ப்பூர் மார்பிளில் தயாரித்த 4 அடி உயர சிலையை, இங்கு நிறுவினோம். நான் பல்வேறு நாடுகளுக்கு செல்வதால், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள 'புத்தர் கோயில்' போன்ற நிறுவ ஆசைப்பட்டு, அதை போன்றே கட்டமைப்பை உருவாக்கி, புத்தருக்கு தனி பீடம் எழுப்பி 'மனோமயா புத்தர்' என பெயரிட்டேன்.
ஹிந்து ஆகமவிதிப்படி பீடத்தை அண்மையில் பிரதிஷ்டை செய்தோம். தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 7 புத்த பிட்சுக்கள் பூஜை செய்து, புத்தருக்கு கண்மலர் திறந்தனர். கோபுர மேற்கூரையில் காப்பர் உலோகம் பொருத்தி, அதில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
மேற்கூரை முழுவதும் காப்பர் பொருத்தியுள்ளதால், இப்பீடத்தில் இருந்து 5 கி.மீ., சுற்றளவிற்கு நேர்மறை ஆற்றல் உருவாகும். மன அமைதி வேண்டி தியானம் செய்ய விரும்புவோர், பாகனேரி மானேமயா புத்தர் ஆலயம் வரலாம். மத்திய, மாநில அரசிடம் உரிய அனுமதி பெற்று சிலை அமைத்துள்ளேன். இது முற்றிலும் கோயிலாக நான் நினைக்கவில்லை, நீதி போதனை அளித்த குருவிற்கு மரியாதை செய்யும் விதமாக புத்தர் பீடம் கட்டியுள்ளேன். இங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டால் நேர்மறை ஆற்றல் பிறக்கிறது. தினமும் காலை 7:00 முதல் காலை 9:00, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பார்வையிட தகவல் தெரிவித்தால், எந்த நேரமும் அனுமதி உண்டு. தினமும் புத்தருக்கு பூஜை நடக்கும்.
புத்தபூர்ணிமா, பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு தியானம் நடைபெறும். மாதந்தோறும் இந்த ஆலயத்தை பராமரிக்க தாய்லாந்தில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்படுவர். எனது சொந்த செலவில் பீடத்தை பராமரிப்பதால், முற்றிலும் அனுமதி இலவசம். காணிக்கை செலுத்தவோ, விளக்கு ஏற்றவோ வேண்டாம். தகவலுக்கு 84890 25528ல் பேசலாம், என்றார்.
எப்படி செல்லலாம்சிவகங்கையில் இருந்து 15 கி.மீ.,ல் மதகுபட்டி, அங்கிருந்து 3 கி.மீ., துாரத்தில் பாகனேரி உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!