01. கழுத்து நீண்ட டைனோசர்!
இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட டைனோசர் வகைகளில், 'சவுரோபோட்' வகை டைனோசர்களே அதிக நீளமான கழுத்தினைக் கொண்டவை. ஆனால், அந்த பெருமையை, சீனாவில் கடந்த 1987ல் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் ,கண்டெடுக்கப்பட்ட 'மாமென்ச்சியாசரஸ்' வகை டைனோசர்களுக்கு தற்போது வல்லுனர்கள் கொடுத்துள்ளனர். 'மாமென்ச்சியாசரஸ்' எலும்புகளை வைத்துப் பார்க்கையில், அந்த டைனோசரின் கழுத்து 50 அடி நீண்டதாக உள்ளது. அதாவது 15 மீட்டருக்கு நீண்ட கழுத்தைக் கொண்டுள்ளது. இதனால், டைனோசர்களில் மட்டுமல்ல, வேறு எந்த விலங்கினத்தையும்விட கழுத்து அதிக நீளம் கொண்டதாக 'மாமென்ச்சியாசரஸ்' திகழ்கிறது.
02. அதிக துல்லியமான நோக்கிகள்
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஜன்னல்களாகத் திகழும் நுண்ணோக்கிகளில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய முன்னேற்றங்கள் வரும். அண்மையில், அமெரிக்காவின் 'டியூக்' பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பல 'மெகாபிக்செல்' துல்லியம் கொண்ட கேமராவுடன் இணைந்த நுண்ணோக்கியை உருவாக்கியுள்ளனர். இதில் தொழில்முறை கேமராவைவிட 10 மடங்கு துல்லியமான, படம் மற்றும் 'வீடியோ' காட்சிகளை எடுக்கலாம். இரண்டையும் முப்பரிமாணத்திலும் பார்க்க முடியும். மொத்தம் 54 வகை 'லென்சு'களை இதற்குப் பயன்படுத்துவதால் இதெல்லாம் சாத்தியமானது.
03. ஓவியர்களை காப்பாற்றும் செயலி
இப்போது பரவி வரும் 'டாலி-2', சாட் ஜி.பி.டி.,-4 போன்ற செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருள்கள், அசத்தலாக படங்களை உற்பத்தி செய்து தள்ளும் திறன் படைத்தவை. இணையத்திலுள்ள ஓவியங்கள், புகைப்படங்களின் பாணிகளை காப்பியடித்து தான் அவை படங்களை உற்பத்தி செய்கின்றன. இதில் தொழில் முறை ஓவியர்களின் படைப்புகளும் அடங்கும். ஓவியர்களின் வரையும் பாணியை, செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களாள் காப்பியடிக்க முடியாதபடி செய்யும் ஒரு செயலியை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 'கிளேஸ்' என்ற அந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
04. காற்று மாசை அளக்கும் கருவி
தட்பவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தகவல்கள் எல்லோருக்கும் எட்டவேண்டும் என விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். அமெரிக்காவின் 'மாசாசூசெட்ஸ்' தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் சிலர் அதற்கு உதவியாக ஒரு காற்று மாசினை அளக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். 'பிளாட்பர்ன்' என்ற அக்கருவியை, எங்கும் எளிதில் கிடைக்கும் பொருட்களைக கொண்டு விஞ்ஞானிகள் செய்திருப்பதோடு, அதன் செய்முறையையும் பொதுவெளியில் இலவசமாக வெளியிட்டுள்ளனர். இதனால், காற்று மாசுக்கெதிரான முயற்சியில் சாதாரண மனிதர்களும் பங்கேற்க முடியும்தானே?
05. அறை வெப்பத்தில் ஒரு 'மீகடத்தி'
பெரிய குளிர்சாதனங்கள் இல்லாமல், அறை வெப்பநிலையிலேயே இயங்கும் மீகடத்தியை உருவாக்கும் ஆய்வு தொடர்கிறது. அதில், ஒரு மைல்கல்லாக, அமெரிககாவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 'ரெட்மேட்டர்' என்ற புதிய பொருளை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர். ஆய்வகத்தில், அறை வெப்பத்திலும், குறைந்த அழுத்தத்திலும், 'ரெட்மேட்டர்' ஒரு 'சூப்பர் கண்டக்டர்' எனப்படும் மீகடத்தியாக, அதாவது மின்சாரத்தை துளியும் விரயமின்றி கடத்தி, சாதனை புரிந்துள்ளது. இது சர்வதேச சோதனைகளில் உறுதி செய்யப்பட்டால், கணினி சில்லுகள் தயாரிப்பில் ஒரு புரட்சி நிகழ்வதோடு, குவாண்டம் கணினிகளின் வரவை துரித்தப்படுத்தும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!