Load Image
Advertisement

ஜெயிச்சது மகள் தான்... ஆனா, கவுன்சிலரு அப்பா!: 'போலீசே கஞ்சா விற்க சொன்னா... என்ன தப்பா?'

''அடிக்கிற வெயிலுக்கு வெளிய போற மாதிரியா இருக்கு'' என, முணுமுணுத்தவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''வாங்க... வாங்க...'' என, வரவேற்ற மித்ரா, ''வேலியே பயிரை மேய்ற மாதிரி தான், சில விஷயங்க நடக்குது'' என புதிர்போட்டாள்.''அக்கா... நீங்க யோசிக்கிறதுகுள்ள ஜில்லுன்னு மோர் எடுத்துட்டு வர்றேன்...'' என்று சென்ற மித்ரா, இரண்டு நிமிடங்களில் வந்தாள்.மோரை பருகியபடியே, ''அது என்ன மேட்டர், சொல்லுடி...'' என்றாள் சித்ரா.''அக்கா, அவிநாசி போலீஸ்காரங்க ஒரு கஞ்சா வியாபாரியை பிடிச்சு விசாரிச்சிருக்காங்க. 'என்ன சார்...உங்க ஆளுங்க தான் கஞ்சாவை விக்க சொன்னாங்க. நீங்களே பிடிக்கிறீங்களே...'ன்னு அந்த கஞ்சா வியாபாரி கேட்க, போலீஸ்காரங்க, அப்படியே 'ஷாக்' ஆகிட்டாங்களாம்,''''என்னய்யா, இப்டி சொல்ற''ன்னு கேட்டப்போ, 'ஒரு போலீஸ்காரரு தான் ஒரு கிலோ கஞ்சாவை கொண்டு வந்து கொடுத்து, வித்து கொடுக்க சொன்னாரு. அஞ்சாயிரம் பணமும் வாங்கிட்டு போயிட்டாரு'ன்னு சொல்லியிருக்காரு,' அந்த கஞ்சா வியாபாரி,''''இந்த விஷயம் பெரிய ஆபீசர் கவனத்துக்கு போக, 'ரிப்போர்ட்' கேட்டிருக்காராம். என்ன பண்ண போறார்ன்னு தெரியலையே..'' என்றாள் மித்ரா.''ஒரு சிலர் பண்ற தப்புனால, ஒட்டு மொத்த 'டிபார்ட்மென்ட்'கே கெட்ட பேரு வருது'' என, புலம்பியபடியே, சித்ரா டிவி.,யை 'ஆன்' செய்ய, 'அண்ணாமலை' படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.''மித்து, வெண்ணெய்க்கு பேர் போன ஊரோட யூனியன் ஆபீசில், வேல பார்க்குற ஒரு லேடி ஆபீசர், வீட்டு மனைக்கு அங்கீகாரம் தர்றதுக்கு, 2 ஆயிரம் டிமாண்ட் பண்றாங்களாம். பணம் தரலைன்னா அலைய விடறாராம். அந்தம்மா ரொம்ப வருஷமா அங்க இருக்கிறதால, ரொம்ப துணிச்சலா இந்த மாதிரி வேலையெல்லாம் பண்றாங்கன்னு ஊர் பூராவும் பேசறாங்க..., '' என்றாள் சித்ரா.

சி.எம்., பேர் பாடி...''அக்கா, நாளைக்கு 'கிருத்திகை'. கைத்தமலை கோவிலுக்கு போலாம்...'' என்ற மித்ரா, ''அவிநாசியில, ரேக்ளா போட்டி நடத்தினாங்க. போட்டி நடத்தற இடம் ரொம்ப குறுகலாவும், நிறைய வீடுங்க இருக்கிறதாலேயும், போட்டி நடத்தக்கூடாதுன்னு, போலீஸ் அனுமதி தரலையாம்,''''ஆனாலும், தடையை மீறி, நடத்தி முடிச்சிட்டாங்க. விழா மேடைல, 'முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ரேக்ளா போட்டி'ன்னு, 'பிளக்ஸ் பேனர்' கட்டி வச்சுட்டாங்களாம். இதனால, போலீசார் எதுவும் நடவடிக்கை எடுக்க முடியலையாம். கைகட்டி வேடிக்கை பார்த்தாங்களாம்...'' என்றாள்.''ம்ம்ம்... சி.எம்., பிறந்தநாளை துருப்புச்சீட்டா பயன்படுத்திகிட்டாங்கன்னு சொல்லு'' என சிரித்தாள் சித்ரா.

'பெயருக்கு' கவுன்சிலர்!மோர் காலியாகிடவே, ''மித்து, இன்னொரு டம்ளர் கொண்டு வா'' என்ற சித்ரா, ''மாப்பிள்ளை அவருதான். ஆனா, அவரு போட்டிருக்க சட்டை என்னோடது...'ங்கற கணக்கா தான், நிறைய பெண் கவுன்சிலருங்க நிலைமை இருக்கு'' என்றாள்.''விவரமா சொல்லுங்க,'' என்றவாறு மோர் டம்ளருடன் வந்தாள் மித்ரா.''வார்டு கவுன்சிலரு வர்றதே இல்ல; அவங்கள இதுவரை நாங்க பார்த்ததே இல்லை'ன்னு சொல்லி, ரெண்டு நாளைக்கு முன்னாடி, கார்ப்ரேஷன், 45வது வார்டு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினாங்க. என்ன விவரம்ன்னு கேட்டா, அது லேடிஸ் வார்டாம்,''''கவுன்சிலரோட அப்பா தான், வார்டுக்குள்ள வி.ஐ.பி.,யாம். அவரு எலக்ஷன்ல நிற்கறதுக்கு பதிலாக, தன்னோட மகளை நிக்க வைச்சு ஜெயிக்க வைச்சிருக்காரு. அந்தம்மா, கோவையில 'செட்டில்' ஆகிட்டாங்களாம். அப்பப்போ, கார்ப்ரேஷன் கூட்டம், மண்டல கூட்டத்துக்கு மட்டும்தான் வந்துட்டு போவாங்களாம். அவங்களோட போன் நம்பரை கூட அவங்க அப்பாதான் பயன்படுத்திட்டு இருக்காருன்னா பார்த்துக்கோயேன்,'' என, நிலவரத்தை விளக்கினாள்.''முற்றுகை நடந்துட்டு இருக்கறப்போ, அங்க வந்த தெற்கு வி.ஐ.பி.,யோட வாரிசு, ''முற்றுகை நடக்கிறத யாரும் போட்டோ எடுக்காதீங்க; வீடியோ எடுக்காதீங்க'ன்னு தடுத்திருக்காரு. இதனால, மக்கள் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்களாம், '' என்ற கூடுதல் தகவலையும் சொல்லி முடித்தாள் சித்ரா.

'மரிக்காத' மனிதாபிமானம்!''அக்கா, நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன்'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.''ரெண்டு, மூனு நாளைக்கு முன்னாடி, வடக்கு ஸ்டேஷன்ல வேல பார்த்துட்டு இருந்த, ஆபீசர் ஒருத்தரு, உடம்பு சரியில்லாம இறந்து போயிட்டாரு. அவருக்கு, மூனு மாசமா சம்பளம் வரலையாம். அது சம்பந்தமா பரிந்துரை பண்ண வேண்டிய ஸ்டேஷன் ஆபீசர், கண்டுக்கவே இல்லையாம்,''''இதனால, அந்த அதிகாரியோட குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. இந்த விஷயம் தெரிஞ்ச சிட்டி பெரிய ஆபீசர், ஒரு அமவுன்ட்டை, அந்த போலீஸ் அதிகாரியோட பேமிலிக்கிட்ட கொடுத்து, 'இறுதிச் சடங்கு, மத்த காரியங்களையெல்லாம் பாரு'ங்கன்னு, சொல்லியிருக்காரு,'' என்றாள் சித்ரா.''பரவாயில்லையே. மனிதாபிமானத்தோட நடந்திருக்காரே. அதிகாரிங்க கண்டிப்பு காட்றவங்களா மட்டும் இல்லாம, கனிவு காட்றவங்களாவும் இருந்தா தான், அவங்களுக்கு கீழ வேல பார்க்குறவங்களும் மனசு நிம்மதியாக வேலை பார்ப்பாங்க,'' என யதார்த்தம் சொன்னாள் சித்ரா.

வேண்டாமே வில்லங்கம்''தாராபுரம் ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல வேல செய்யற ஒரு ஆபீசர், 'மொபைல் போன்' மூலமா, மதிய உணவு 'ஆர்டர்' பண்ணிட்டு இருந்திருக்காங்க. அப்போ, அங்க இருந்த ஒருத்தரு, அதை அப்படியே வீடியோவா எடுத்து, 'மக்களை காக்க வைச்சுட்டு, உணவு 'ஆர்டர்' பண்றாங்க'ன்னு சோஷியல் மீடியாவுல கிளப்பி விட்டுட்டாரு. அதை பார்த்து, சோஷியல் மீடியா போராளிங்க கொதிச்சு போய், கண்டபடி விமர்சிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.''இதனால டென்ஷன் ஆன, ஆபீசர், போலீசில் புகார் கொடுக்க, 'வீடியோ' எடுத்து பரப்பிவிட்ட அந்த ஆசாமியை கூப்பிட்டு விசாரிச்சு இருக்காங்க,''''அதில, 'அந்நபர், பர்த் சர்டிபிகேட் கேட்டு, அப்ளிகேஷன் கொடுத்தாராம். ஆனா, அவர் கொடுத்த ஆவணங்கள் சரியில்லாததால, ஆபீசர் ரிஜெக்ட் பண்ணிட்டாங்களாம். இதனால, அந்த ஆசாமி, வீடியோவை பரப்பிட்டாருங்கிற விஷயம் தெரிய வந்துருக்கு. அவரை கண்டிச்சு அனுப்பிட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.''ஏன் தான் இப்டி பண்றாங்களோ... சோஷியல் மீடியாவுல வர்ற எல்லாத்தையும் நம்பவே முடியாது போல. ஆட்களுக்கு ஏத்த மாதிரி பதிவு போட்டுக்கிறாங்க...'' என சலித்துக் கொண்ட சித்ரா, ''போன வாரம், பத்திர பதிவு ஆபீஸ், ஆர்.டி.ஓ., ஆபீசில, விஜிலென்ஸ் போலீஸ்காரங்க 'ரெய்டு' போனாங்க. அப்போ, லைசென்ஸ் வாங்க வர்றவங்கள, வண்டியை ஓட்ட வைச்சு பார்க்குறதுக்காக இருக்கற மைதானத்துல இருந்த ஒரு ரூம்லேயும் சோதனை பண்ணியிருக்காங்க,''''மைதான ஓரமா இருந்த புதருக்குள்ள, ஒரு 'பேக்'கில், 10 ஆயிரம் ரூபா இருந்துச்சு. கொஞ்சம் ஆவணங்கள் இருந்திருக்கு. அத போலீஸ்காரங்க எடுத்துட்டு போயிட்டாங்க. இத கவனிச்சுட்டு இருந்த, அங்க இருந்த சில 'டுபாக்கூர்' பத்திரிகை ரிப்போர்ட்டர்ஸ், அந்த மாதிரி, வேற ஏதாவது 'பேக்' எதுவும் இருக்குதான்னு, மைதானம் முழுக்க ஒரு ரவுண்ட் அடிச்சு பார்த்தாங்களாம்,'' என்றாள் மித்ரா.

'கவுன்டர்' பெட்டிஷன்''அடக்கொடுமையே...'' என்ற சித்ரா, ''மித்து, புகார் கொடுத்தவரை பத்தி எதிர்தரப்பில புகாரை வாங்கி போலீஸ் விசாரிச்ச கதை தெரியுமா...''''இதென்ன புதுசா, இருக்குது. சொல்லுங்க்கா,'' என்றாள் மித்ரா.''வட மாநில தொழிலாளர் பத்தி, சோஷியல் மீடியாவில பரப்புனவங்களை, பீகாரில் போய், போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு வந்தாங்க. ஆனா, சிட்டி லிமிட்டில, ஒருத்தர் தொடர்ச்சியா, பேஸ்புக்கில், வட மாநில தொழிலாளர் பத்தி போஸ்ட் பண்ணிட்டு இருந்திருக்காரு...''''இத பார்த்த ஒரு வக்கீல், திருப்பூருக்கு வந்த டி.ஜி.பி.,கிட்ட பெட்டிஷன் கொடுத்திட்டாரு. ஆனா, புகாரில் குறிப்பிட்ட நபரை கூப்பிட்டு விசாரிக்காம, புகார் கூறியுள்ள நபர்கிட்டயே, வக்கீல் மேல புகாரை வாங்கி, அவரை கூப்பிட்டு விசாரிச்சாங்களாம். இதனால, சம்பந்தப்பட்ட வக்கீல் 'அப்செட்' ஆகி, ஐகோர்ட்டில் 'ரிட்' பைல் பண்ணிட்டாராம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... இதேமாதிரி தான், ஒரு மேட்டர் பி.என்., ஸ்டேஷனில் நடந்தது. இடம் சம்பந்தமாக, அதோடு உரிமயைாளர ஒருத்தர கடத்திட்டு போக ஒரு கும்பல் முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனால, அவரு தப்பிச்சு போய்,எஸ்.பி., கிட்ட பெட்டிஷன் கொடுத்திட்டாரு. எஸ்.பி.,யும், விசாரிங்கன்னு, பெட்டிஷனை பார்வேர்டு பண்ணிட்டாரு...''''ஆனா, போலீசார் பெட்டிஷன் கொடுத்தவரை விட்டுவிட்டு, எதிர்தரப்பு ஆட்களோடு, கைகோர்த்துட்டாங்களாம். குறிப்பாக, அந்த 'லிங்கேஸ்வரர் ஊர்' அதிகாரிக்கு, பல லகரம் கை மாறிடுச்சுன்னு, ஒரு 'டாக்' போலீஸ் மத்தியில உலா வருதுங்க்கா...''''வரவர ரூரலிலுள்ள சில ஸ்டேஷன்களில், கரெப்ஷன் அதிகமாயிட்டே போகுது... பெரிய அதிகாரி சாட்டை எடுத்து சுத்துவாரா?'' என்ற சித்ரா, ''நான் கிளம்பறேன்...'' என்று சொல்லி புறப்பட்டாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement