Load Image
Advertisement

லஞ்ச முதலைகளுக்கு விஜிலென்ஸ் வேட்டை தகவல் கசிவால் விட்டுட்டாங்க கோட்டை!

ரயிலில் வரும் தோழியை வரவேற்பதற்காக, ரயில்வே ஸ்டேஷன் முதல் நடைமேடையில் சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர். ரயில் வருவதற்கு நேரமிருந்ததால், சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு, இருக்கையில் அமர்ந்தனர்.

புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, பேச்சை ஆரம்பித்தாள் சித்ரா...

''மித்து! ஒரு வழியா நம்ம ஊர்ல மெட்ரோ பிராஜெக்ட்டுக்கு 9 ஆயிரம் கோடி, தமிழ்நாடு பட்ஜெட்ல அறிவிச்சிட்டாங்க. செம்மொழிப் பூங்காவுக்கு 172 கோடி ரூபாய் ஒதுக்கிருக்காங்க. எழில்மிகு கோவை, தொழிற்பேட்டைன்னு நிறைய அறிவிப்புகள் வந்திருக்கு...சொல்லப் போனா, கோவைக்கு இது கொண்டாட்டம்தான்...இதையும் வெறும் அறிவிப்பா வச்சிருக்காம, இந்த வருஷத்துலயே நிதி ஒதுக்கி வேலைய ஆரம்பிச்சா நல்லாருக்கும்!''

சித்ராவின் கருத்தை ஆமோதித்த மித்ரா, ''நம்ம ஊர்ல ஸ்போர்ட்ஸ் பசங்க நிறையா இருக்காங்க. அவுங்களுக்குஏதாவது புது ஸ்டேடியம் மாதிரி அறிவிப்பாங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. ஒண்ணுமே இல்லை...உதயநிதி வந்து பார்த்துட்டுப் போயும் எதுவுமே நடக்கலையேன்னு வருத்தப்படுறாங்க!''

மித்ரா முடிக்கும் முன், சித்ரா தொடர்ந்தாள்...

''புதுசா அறிவிக்கிறது இருக்கட்டும்...இந்த நேரு ஸ்டேடியமே படு கேவலமா கெடக்குது. அதை சரி பண்ண மாட்டேங்கிறாங்க. மொத்தம் 16 கேட்ல, நாலு மட்டும்தான் இப்போ திறந்திருக்கு.

மத்த எல்லா 'கேட்'டையும் தரை ரேட்டுக்கு வாடகைக்கு விட்ருக்காங்க. கேட் நம்பர்களை மறைச்சு, பெரிய போர்டுகளை வச்சுட்டாங்க. கேலரி மேல ஏறுற படிக்கட்டுல கதவு மாதிரி வச்சு, கடையாக்கீட்டாங்க!''

''உதயநிதி மினிஸ்டரான பிறகும் இதை சரி பண்ணலையா?''

''அதெல்லாம் அவர் நாலெட்ஜ்க்கே போயிருக்காது...முறையா ஒதுக்கீடு பண்ணுன ஒரு கடையோட வாடகை ஒரு லட்சம்னா, இந்த 'கேட்' கடைக்கு வாடகை 20 ஆயிரம் ரூபா மட்டும்தான்...இதுல கொழிக்கிறது அதிகாரிகள்தான். இந்த கடைகளுக்குப் பதிலா, விளையாடுற பசங்களுக்கு ரூம், டாய்லெட் கட்டிக் கொடுத்தாக் கூட நல்லாருக்கும்!''

''பசங்கன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சுக்கா...பிளஸ் 2 எக்ஸாம்ல, நம்ம ஊர்ல 1600 பசங்க, மொழிப்பாடங்களை எழுதலையாம்...முக்கிய பாடங்களுக்கு 'ஆப்சென்ட்' எடுக்குறப்போ, ஸ்கூலுக்கு வராதவங்க தனியா, எக்ஸாம்க்கு மட்டும் வராதவுங்க தனியான்னு பட்டியல் எடுக்குறாங்க. எப்பிடியாவது பத்தாங்கிளாஸ் பரிட்சையில, ஆப்சென்ட்டைக் குறைக்கப் பாக்குறாங்க!''

''ஸ்கூலை விடு...நம்ம பாரதியார் யுனிவர்சிட்டிக்கு, வர்ற 23ம் தேதி, நாக் கமிட்டி வருது. ஏற்கனவே தரப்புள்ளி குறைவா இருக்குறதால, 2016ல இருந்து, தொலைதுார கல்வி மையத்துக்கு அங்கீகாரம் கிடைக்குறது சிக்கலாவே இருக்கு. இப்போ அதை மீட்டெடுக்க, செம்ம 'ட்ரை' கொடுக்குறாங்க. ஆனா...!''

''என்ன ஆனா...ஆவன்னா!''

''யுனிவர்சிட்டியில வி.சி., ரிஜிஸ்ட்ரார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைதுார கல்வி மைய இயக்குனர், பி.ஆர்.ஓ.,ன்னு ஏகப்பட்ட போஸ்ட்டிங் காலியா இருக்கு. அதுதான் ரேங்க் குறையக் காரணம்னே தெரியாம இருக்காங்க. இந்த முறை கமிட்டி வந்தாலும், எதுவும் நடக்காதுன்னுதான் தோணுது!''

சித்ராவின் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த மித்ரா, அதையொட்டிய மற்றொரு தகவலைப் பகிர்ந்தாள்...

''நம்ம ஊருல ஹையர் எஜூகேஷன் டிபார்ட்மென்ட் நிலைமை, கவலைக்கிடமாத்தான் ஆயிட்டு இருக்கு... கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குரகத்துல, லஞ்சம் திடீர்னு பல மடங்கு எகிற ஆரம்பிச்சிருச்சாம்.

அங்க வந்திருக்குற புது லேடி ஆபீசர், செல்வம் சேர்க்குறதை ஒரு கலையாவே பண்றாராம். துட்டு இல்லாம ஒரு பைலும் நகர்றதில்லைன்னு, 'எய்டடு' காலேஜ் புரபசர்ஸ் புலம்புறாங்க!''

''கவர்மென்ட் இன்ஸ்டியூஷன்ஸ் நிலைமை இப்பிடின்னா, பிரைவேட் காலேஜ்கள்ல பிள்ளைங்க படுற பாடு ரொம்ப மோசமா இருக்கு...பணம் கட்டலை, ஒழுங்கா காலேஜ்க்கு வரலைன்னு சொல்லி, நிறைய பிள்ளைங்களோட சர்ட்டிபிகேட்களைத் தராம இழுத்தடிக்கிறாங்க. ஏகப்பட்ட ஸ்டூடன்ட்ஸ் பாதிக்கப்பட்ருக்காங்க. அதுல பார்மசி படிக்கிற ஒரு பொண்ணு கோர்ட்டுக்கே போயிருச்சாம்,''

''கோர்ட்டுல நீதியரசர்கள்லாம் சரியாத்தான் ஆர்டர் போடுறாங்க. ஆனா, அதிகாரிகள் அதை நிறைவேத்த தயங்குறாங்க. ஐகோர்ட் நீதிபதிகள் தடாகத்துக்கு நேர்ல ஆய்வுக்கு வர்றதாச் சொன்ன பிறகும், அங்க இன்னமும் பல செங்கல் சூளைகள்ல இருக்குற வீடுகளுக்கு, 'பவர்கட்' பண்ணாம வச்சிருக்காங்களாம். அவுங்க வந்து பார்த்து என்ன ஆர்டர் போடப்போறாங்கங்கிறதுதான், இப்போ 'ஹாட் டாபிக்'கா இருக்கு!''

''எல்லாம் ஆளும்கட்சி சப்போர்ட் இருக்குங்கிற தைரியம்தான்...சரவணம்பட்டியில ஒரு லேடி, வீட்டை அடமானம் வச்சு பாங்க்ல கடன் வாங்கிருக்காங்க; திருப்பிக்கட்டலை...பாங்க் வக்கீல்கள் வீட்டை ஜப்தி பண்ணப் போயிருக்காங்க. அந்த வக்கீலை ஏ.பி.பி.,ஒருத்தரு, போன்ல கூப்பிட்டு தாறுமாறா திட்டிருக்காரு. அந்த ஆடியோதான் வக்கீல்கள்ட்ட இப்போ வைரலா பரவிட்டு இருக்கு!''

மித்ரா முடிக்கும்முன், சித்ரா குறுக்கிட்டுப் பேசினாள்...

''அதை நானும் கேட்டேன் மித்து... இப்பிடிப் பேசுனா அப்புறம் கோர்ட் உத்தரவுகளை யாரு மதிப்பாங்க....!''

''இப்பல்லாம் எல்லாமே 'டை-அப்' தான்க்கா...விஜிலென்ஸ் டீம், ஸ்டேட் முழுக்க 60 இடங்கள்ல அதிரடி சோதனை நடத்துனதுல, நம்ம ஊர்லயும் ரெண்டு இடத்துல ரெய்டு பண்ணுனாங்க....ஆனா கார்ப்பரேஷன் கிழக்கு மண்டல ஆபீஸ்ல, முக்கியமான ஆபீசரு எப்பிடித் தப்பிச்சாரு தெரியுமா?''

''யாரு...ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல இருந்து, இங்க வந்தாரே...அவரா?''

''அவரேதான்...அவரைத் துாக்கத்தான் 'ஸ்கெட்ச்' போட்ருக்காங்க...வழக்கமா அவர் எப்பவுமே சாயங்காலம் மூணு மணிக்குதான் ஆபீஸ் வருவாராம்...லஞ்சம் வாங்குறதுக்காகவே இரண்டு பெண்களை நியமிச்சிருக்காராம். அதுலயும் ஒரு லேடி, அவருக்கு பி.ஏ.,மாதிரியாம். இவர்ட்டதான், மத்த ஆபீசர்களே பைலைக் கொடுத்து, கையெழுத்து வாங்குவாங்களாம்!''

''அந்த லேடிட்ட இருந்துதான் கணக்குல வராத, 60 ஆயிரம் ரூபா பணம் எடுத்தாங்களோ...!''

''ஆமாக்கா...அவர் தினமும் ஆபீஸ் வந்ததும், அந்தம்மாவைக் கூப்பிட்டு, வசூல் நிலவரம் கேட்டுட்டுதான் கையெழுத்தே போடுவாராம்.

இப்போ அந்தம்மாவைக் காப்பாத்துறதுக்காக, பில் கலெக்டர்களைக் கூப்பிட்டு, 'நாங்கதான் டாக்ஸ் வசூல் பண்றவர்ட்ட 15 ஆயிரம் ரூபா கொடுத்தோம்'னு மிரட்டி எழுதி வாங்கிருக்காராம். அதனால நேர்மையான அதிகாரிகளும், நமக்குப் பிரச்னை வருமோன்னு பயந்து போயிருக்காங்க!''

''இன்னொரு தகவலும் கேள்விப்பட்டேன்...விஜிலென்ஸ் ஆபீசர்கள், ஆர்.டி.ஓ., ஆபீஸ் போனதுமே, கார்ப்பரேஷன் ஆபீஸ்ல எல்லாரும் 'அலர்ட்' ஆயிட்டாங்களாம். நம்ம ஊருல இருக்குற, ஒரு விஜிலென்ஸ் ஆபீசர்தான், ரெய்டு பத்தி முன் கூட்டியே தகவல் சொன்னதா ஒரு தகவல் ஓடுது!''

சற்று இடைவெளி விட்டு சித்ராவே தொடர்ந்தாள்...

''ஈரோட்டுல இருந்து வந்த, 35 ஆயிரம் லிட்டர் பாலை, டைம்க்கு 'ப்ராசஸ்' பண்ணாம கெட்டுப்போனதுல, கோவை ஆவினுக்கு 21 லட்ச ரூபா 'லாஸ்' ஆயிருக்கு...ஆனா சத்தமே இல்லாம கழிவுநீர்க் குழாயில அதை வெளியேத்திருக்காங்க. இப்பிடித்தான் போன வருஷம் 60 லட்ச ரூபா மதிப்புள்ள பால் பொருள்கள் கெட்டுப் போச்சாம். அப்பவும், இப்பவும் 'லாஸ்'க்குக் காரணமான அதிகாரிகள் மேல நடவடிக்கையே எடுக்கலை!''

''நீங்க சொல்றது உண்மைதான்க்கா...குவாலிட்டி கன்ட்ரோலுக்குப் பொறுப்பான ஒரு லேடி ஆபீசர், ஏ.ஜி.எம்.,பொறுப்புல இருக்குற ஒருத்தரு, ரெண்டு பேரும்தான் இதுக்கு முழுக்க முழுக்கக் காரணம்னு சொல்றாங்க. ஆனா ரெண்டு பேர் மேலயும் ஒரு நடவடிக்கையும் எடுக்கலை...இவுங்களை டிஸ்மிஸ் பண்ணனும்னு, பால் ஏஜென்ட்-லேபர் சங்கத்துக்காரங்க போராட்டம் நடத்தப் போறாங்களாம்!''

''போராட்டம்னதும் ஞாபகம் வந்துச்சு...நம்ம ஜி.எச்.,ல கான்ட்ராக்ட்ல இருக்குற துாய்மைப் பணியாளர்கள், சம்பளம் அதிகம் வேணும்னு போராட்டம் நடத்துனாங்கள்ல...அதுல சில பேரு காசு பண்ணுன விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. போராட்டத்தைத் துாண்டிவிட்ட சில பேரு, பேச்சுவார்த்தை நடத்துறப்போ, 'எங்களைக் கவனிச்சா போதும்'னு சொல்லிருக்காங்க!''

''அடக்கொடுமையே...இந்த மக்கள் இன்னும் எத்தனை பேர்ட்ட இப்பிடி ஏமாறப்போறாங்களோ?''

''அதே மாதிரி அவுங்ககிட்ட, ஒரு அமவுன்ட்டை அடிச்சு, அவுங்களை நிர்வாகம் 'ஆப்' பண்ணிருக்கு. ஆனா அதைப் பங்கு போடுறதுல ஏற்பட்ட பிரச்னையில விஷயம், சோஷியல் மீடியாவுல ஒருத்தரை ஒருத்தர் கழுவி ஊத்திருக்காங்க. மொத்த விவகாரமும் வெளிய வந்திருச்சு. பாவம் அந்த லேபர்ஸ்தான் பரிதாபமா நிக்கிறாங்க!''

சித்ரா சொல்லும்போது, தன்னைக் கடித்த கொசுவை கைதட்டி அடிக்க முயற்சித்த மித்ரா, ''அக்கா! ஊருக்குள்ள கொசுத்தொல்லை மறுபடியும் அதிகமாயிருச்சு. டெங்கு கேசும் கூடிக்கிட்டே போகுது. ஆனா நம்ம கார்ப்பரேஷன்ல, கொசு மருந்து பேருக்கும் அடிக்கிறதில்லை,'' என்றாள்.

அவள் முடிப்பதற்குள் தொடங்கிய சித்ரா, ''பெரியநாயக்கன்பாளையம் டவுன் பஞ்சாயத்துல, கொசு மருந்து அடிக்க ரெண்டு மெஷினை வாங்கி, பூஜை போட்டதோட சரியாம்...ஒரு நாள் கூட அதைப் பயன்படுத்தவே இல்லையாம். மக்கள் வரிப்பணம் எப்பிடியெல்லாம் வீணாகுது பாரு!'' என்றாள்.

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தோழி வரும் ரயிலின் வருகை குறித்த அறிவிப்பு வந்ததும், இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு, கோச் நிற்குமிடத்தைப் பார்த்து நடக்க ஆரம்பித்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement