உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில், 'ஆஸ்கார் விருது' மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெறும். ௨௦௨௨ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான, 95வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான, ஆர்.ஆர்.ஆர்., திரைப்படத்தில் இடம் பெற்ற, 'நாட்டு... நாட்டு' என, துவங்கும் பாடல், சிறந்த திரைப்பட பாடலுக்கான பிரிவில், ஆஸ்கார் விருதை வென்றது.
அதேபோல, சிறந்த ஆவணக் குறும்பட பிரிவில், நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த, கார்த்திகி கான்சால்வஸ் இயக்கி, குனித் மோங்கா தயாரித்த, தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற படம் விருதை வென்றுள்ளது. இரண்டு இந்திய தயாரிப்பு படங்கள், ஆஸ்கார் விருதை பெற்றதன் வாயிலாக, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருதுகள் வழங்குவது, 1927ல் துவங்கப்பட்டது. இருப்பினும், இந்த விருதில், தங்க முலாம் பூசப்பட்ட சிலையை வழங்குவது, 1929ல் தான் துவங்கியது. இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருது பெற்ற முதல் நபர் மற்றும் முதல் பெண் பானு அத்தையா; இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர்.
கடந்த 1982ல் வெளியான, காந்தி என்ற வரலாற்று திரைப்படத்திற்காக, இவர் ஆஸ்கார் விருது பெற்றார். பாலிவுட்டில் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் உள்ள பிரபலங்களுக்கு, இவர் சிறப்பாக ஆடை வடிவமைத்து தந்துள்ளார்.
இவருக்கு பின், இந்திய சினிமாவில் மிகவும் பாராட்டப்பட்ட நபரான, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் சத்தியஜித் ரேக்கு, வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது, 1992ல் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், 2009ம் ஆண்டில், இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லம் டாக் மில்லினர் என்ற ஹிந்தி படத்தில் இடம் பெற்ற, 'ஜெய் ஹோ' என்ற பாடலுக்காகவும், சிறந்த பின்னணி இசைக்காகவும் என, இரு ஆஸ்கார் விருதுகளை பெற்றார். இதே படத்திற்காக, குல்ஜார், ரசூல் பூக்குட்டி என்ற இருவருக்கும், ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான், தெலுங்கு சினிமாவான, ஆர்.ஆர்.ஆர்., என்ற படத்தில் இடம் பெற்ற, 'நாட்டு ... நாட்டு' என்ற பாடலுக்காக, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுஉள்ளது. அத்துடன், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படமும், இந்த விருதை வென்றுள்ளது.
முதலில், இந்தியா சார்பில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படாத, ஆர்.ஆர்.ஆர் படத்தை, அதில் பங்கேற்கச் செய்ய, படத்தின் இயக்குனர் ராஜமவுலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். உலகம் முழுதும், பல முக்கிய இயக்குனர்கள் மற்றும் திரையுலகினருக்கு, படத்தை திரையிட்டு காண்பித்து வந்தார். அந்த முயற்சிகளின் பலனாக, இன்று ஆஸ்கார் விருதை வென்றுள்ளது, அந்தப் படத்தின், 'நாட்டு... நாட்டு' பாடல்.
ஆர்.ஆர்.ஆர்., மற்றும் எலிபென்ட் விஸ்பரர்ஸ் படங்கள், ஆஸ்கார் விருதை வென்றதன் வாயிலாக, இந்திய சினிமாவின் தரமும், பன்முகத்தன்மையும், மேலை நாட்டவரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாலிவுட்டில் தயாரிக்கப்படும் படங்கள் தான் சிறந்தவை என்பது முறியடிக்கப் பட்டு, இந்தியாவின் தென் மாநிலங்களிலும் சிறப்பான படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக, சத்யஜித் ரே மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களே, கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று வந்தன. அதுவும், தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு வித்தியாசமான படங்களுக்கு, இந்த விருது கிடைத்துள்ளது, இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும். பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உந்துதலை, தென் மாநில திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கும் ஏற்படுத்தும்.
அத்துடன், இந்திய திரைப்பட துறையை சர்வதேச மயமாகவும் மாற்றும். இந்த விருது, தென்மாநில திரைப்பட துறையினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!