உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை லோக்சபாவுக்கும், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது சில மாநிலங்களில் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. ஆனாலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக, எந்தவிதமான முறையான சட்ட விதிகளும், இதுவரை உருவாக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையர்கள், மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். 'இந்த நியமனங்களில், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கிறது; வெளிப்படைத்தன்மை இல்லை. மத்திய அரசுக்கு ஆதரவான அதிகாரிகள், ஓய்வு பெறுவதற்கு முன், தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
'இதனால், சட்டசபைகளுக்கு மற்றும் லோக்சபாவுக்கு தேர்தல் நடைபெறும் போது, முறைகேடுகள் நிகழ்ந்தால், அவர்கள் கண்டுகொள்வதில்லை' என்ற குற்றச்சாட்டு, அவ்வப்போது முன்வைக்கப்படுவது வழக்கமாகி விட்டது.
இந்தச் சூழ்நிலையில் தான், 'தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முழு அதிகாரமும், தற்போது, மத்திய அரசின் வசம் உள்ளதை மாற்ற வேண்டும்.
'பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு, சி.பி.ஐ., இயக்குனரை தேர்வு செய்வது போல, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று கோரி, வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி, கே.எம்.ஜோசப் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற அரசியல் சாசன அமர்வு, 'பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, ஜனாதிபதிநியமிப்பதற்கு ஏற்ப, பார்லிமென்டில் சட்டம் இயற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், 'தேர்தல் நடவடிக்கைகளில், நேர்மை மற்றும் புனிதத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும். இவற்றில் அத்துமீறல்களும், அராஜகங்களும் தொடர்ந்தால், அது, ஜனநாயகத்தை புதை குழியில் தள்ளிவிடும்' என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே.
பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழுவினர், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் போது, திறமையான, பாரபட்சமற்ற முறையில் செயல்படக்கூடிய, தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கூடிய நபர்கள், பதவிக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி, அரசியல் சார்புடையவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே, இந்தப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அரசியல் சட்டத்தின், ௩௨௪வது பிரிவில், 'தேர்தல் ஆணையர் நியமனங்களை, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட விதிகளின் அடிப்படையில், ஜனாதிபதி மேற்கொள்வார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், முறையான சட்ட விதிகளை உருவாக்கும்படி, நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும், நம்எம்.பி.,க்கள் வேண்டுகோள் விடுக்க தவறி விட்டனர்.
எனவே, அந்த மிகப்பெரிய தவறானது, சரி செய்யப்படும் வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, விரைவில் விரிவான சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம்.
அதேநேரத்தில், தேர்தல் ஆணையர்கள் நியமனங்களை மட்டுமின்றி, அரசியல் சட்ட ரீதியான அந்தஸ்து உள்ள பதவிகளான, ஆடிட்டர் ஜெனரல் மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட பலவற்றுக்கும், பிரதமர் உள்ளிட்டோர் இடம்பெறும் குழு வாயிலான தேர்வு முறையை பின்பற்றுவது அவசியம்.
அப்படி செய்யும் போது, தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்புகளின் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்படுவோர், அரசியல் சார்பற்று நேர்மையாக செயல்படுவர். இவற்றின் வாயிலாக, அந்த அமைப்புகளின் பெருமையும், செயல்பாடும்மேம்படும்.
இந்த நிலையில், உச்ச நீதிபதிகள் மட்டுமே அடங்கிய கல்லிஜியம் சக நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது நியாயமா? அது வெளிப்படையற்ற, நேர்மைக்கு புறம்பான வழிமுறை ஆகாதா? இந்த கேள்விகளுக்கு உச்ச நீதி மன்றம் பதில் அளிக்குமா ?