Load Image
Advertisement

வீட்டு கடன் ஒரு சேமிப்பு என்ற கருத்து சரியா?

சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறித்த முன்மொழி, குறிப்பாக, மக்களின் சேமிப்பில் புதிய வருமான வரி திட்டத்தின் தாக்கம் குறித்து, நிறைய விவாதங்களை ஈர்த்துள்ளது.
புதிய வரி திட்டத்தில் பழைய திட்டத்தைப்போல எந்த கழிவினையும் அனுமதிக்காததால், சேமிப்பிற்கு ஊக்கம் இல்லாமல் போகும் என்றும், அதனால் மக்களின் சேமிப்பு குறையும் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

நிதித்துறை செயலாளர்டி.வி.சோமநாதன், 'வீட்டுக் கடன் என்பது, 'மேக்ரோ' பொருளாதார அம்சத்தில் சேமிப்பு அல்ல, மாறாக, சில விஷயங்களுக்கு (நிதி பயன்படுவதில்) அழுத்தம்கொடுப்பது' என்று கூறியுள்ளார்.
இந்த கூற்றை மறுத்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வீட்டுக் கடன் தொடர்பான தனது கோட்பாட்டை, நிதித்துறை செயலர் மறு ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

உபரி நிதி



அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'வட்டி செலுத்துதல் மற்றும் கடனின் தவணைகள் உண்மையில் ஒரு செலவாகும், ஆனால், இது ஒரு சொத்தாக மாற்றப்படும் செலவாகும், இது ஒரு சேமிப்பு ஆகும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, வீட்டுக் கடன் என்பது ஒரு சேமிப்பாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சேமிப்பு என்றால் என்ன?



சேமிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கால பகுதியில், ஒரு நபர் தன் நுகர்வோர் செலவினங்களை, அவரின் வருமானத்தில் இருந்து கழித்த பின் எஞ்சியிருக்கும் பணத்தைக் குறிக்கிறது.
எனவே, சேமிப்பு என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்கான அனைத்து செலவுகள் மற்றும் பொறுப்புகளுக்காக செலவிட்டபின்இருக்கக்கூடிய நிகர உபரி நிதியை குறிக்கிறது.
இது ரொக்கமாகவோ அல்லது வங்கிகளிலோ அல்லது வேறு ஏதாவது முதலீட்டிலோ இருக்கலாம். முதலீட்டில், இழப்பிற்கான சாத்தியமும் உண்டு.
உதாரணமாக ஒருவருக்கு 3 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாகவும், 2.70 லட்சம் ரூபாய் ஆண்டு செலவாகவும் இருந்தால், அந்த நபரின் சேமிப்பு, 30 ஆயிரம் ரூபாய்.
இந்த சேமிப்பு பணமாகவோ அல்லது வங்கியில் டிபாசிட்டாகவோ அல்லது வேறு ஏதாவது முதலீட்டிலோ இருக்கலாம்.

வங்கிகள் எப்படி கடன் கொடுக்கின்றன?



ஒரு வங்கி, கடன் அளிப்பதற்கு முன், வங்கிக்கு கடன் வழங்கக்கூடிய ஆதாரங்கள் தேவை. அந்த ஆதாரங்கள், பொதுமக்கள் சேமிப்பில் இருந்து கிடைக்கும் டிபாசிட்டிலிருந்து திரட்டப்படுகிறது.
எனவே, வங்கிகள் பொதுமக்களின் சேமிப்பிலிருந்து பெற்ற டிபாசிட்டில் ஒரு பகுதியை, கடனாக வழங்குகின்றன. வங்கிகளுக்கு பாதுகாப்பு கருதி முழு டிபாசிட்டையும் கடன் கொடுக்க முடியாதவாறு பண இருப்பு விகிதம் மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் போன்ற நிபந்தனைகள் உண்டு.
ஒரு வங்கி, வீட்டுக் கடன் வழங்கும்போது, கடன்காரருக்கு அவரது பெயரில் வீட்டு சொத்தை வாங்க உதவுகிறது. வங்கிகள் முழு வீட்டின் மதிப்பையும் கடனாக வழங்காது.
வீடு வாங்குபவர் வீட்டிற்கான சொத்து மதிப்பில், 'மார்ஜின்' என்று சொல்லப்படும் ஒருபகுதியை சொந்தமாக முதலீடு செய்ய வேண்டும்.
உண்மையில் அவருக்கு வீடு ஒரு சொத்தாகவும், அவர் வங்கியில் வாங்கிய கடன் திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பாகவும் அமைகிறது. அவர் செலுத்திய, 'மார்ஜின்' பணமும் அவருக்கு ஒரு சொத்தே.
எனவே, பின்வரும் வரிசையில் இந்த பரிவர்த்தனைகள் மக்களின் வருமானம், மக்களின் சேமிப்பு, வங்கியில் டிபாசிட், வங்கியில் இருந்து கடன், கடன் பெற்றவருக்கு சொத்தும், கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பும் என்ற வரிசையில் அமைகின்றன.
கடனை திருப்பி செலுத்துவதும், சேமிப்பும் ஒன்றல்ல. கடன் வாங்கியவர், கடனைத் திருப்பி செலுத்த துவங்கும் போது, மீண்டும் வங்கியின் கடன் வழங்கும் திறன், அதே அளவிற்கு உயரும். ஆனால் இது, டிபாசிட் அதிகரிப்பதால் அல்ல.
வாங்கிய கடன் திருப்பி செலுத்தும்போதெல்லாம், அது வங்கிக்கு அதே பணத்தை மீண்டும் கடன் கொடுக்க வழி செய்கிறது. ஆனால், இதில் வங்கியின் டிபாசிட் ஏறுவதில்லை.
வங்கியின் டிபாசிட் ஏறாத போது, இது புதிய சேமிப்பு அல்ல என்பதையும், புரிந்து கொள்ள முடியும். வங்கிகள் புதிதாக பெறும் டிபாசிட்களுக்கு தக்கவாறு அதிகமாகும் பண இருப்பு விகிதம், கடன் திரும்ப பெறுவதால் கிடைக்கும் நிதிக்கு பொருந்தாது என்பதையும், புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல கடன் வாங்குபவருக்கு திருப்பி செலுத்துவது, சேமிப்பு அல்ல.

மறுசுழற்சி



அதிகபட்சமாக அவர் சேமிப்பில் இருந்து திருப்பி செலுத்துகிறார் என்று மட்டுமே சொல்லலாம். அதாவது, அவரது சேமிப்பை உபயோகித்து அவரது கடனை குறைக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இதை அவருடைய கடனில் குறைவு என்றோ அல்லது அவரது, 'நெட் ஒர்த்' எனப்படும் நிதித் தகுதியில் முன்னேற்றம் என்றோ கூட சொல்லலாம்.
ஆனால், கடனால் சேமிப்பு அதிகரிக்கும் என்றோ அல்லது கடனே சேமிப்பு என்று கூறுவதோ பொருத்தமல்ல.
கடனை திருப்பி செலுத்துவது வங்கிகளின் மேலும் கடன் வழங்கும் நிலையை மேம்படுத்தினாலும், அது டிபாசிட்டை அதிகரிக்காது. எனவே, அதை சமூகத்தின் சேமிப்பு என்று கூற முடியாது.
இது வங்கிகளால் ஏற்கனவே சேமித்து திரட்டப்பட்ட நிதியை மறுசுழற்சி செய்வதாகும்.
வீட்டுக் கடனைத் திருப்பி செலுத்துவதை சேமிப்பாக கருதினால், அது மற்ற வேறு எந்த கடனைத் திருப்பி செலுத்துவதற்கும் பொருந்தும் என்பதை புரிந்து கொண்டால், கடனால் சேமிப்பு வளரும் என்பதில் உள்ள பிழை விளங்கும்.

எஸ்.கல்யாணசுந்தரம் ஓய்வு பெற்ற வங்கியாளர்



வாசகர் கருத்து (10)

  • R Manickam - City state Singspot,சிங்கப்பூர்

    பெரும்பாலும் வளர்ச்சியுற்ற நாடுகளில்கூட (சிங்கப்பூர் போன்ற) நடுத்தர வருமானம் கொண்டோருக்கு PF linked கடன் வசதி மூலமாக வீடடு அமைப்பு வசதி உண்டு. ஆனால் கோவிட் 19 காலத்தில் மக்களுக்கு வருமானம் இல்லாததால் கடன் திரும்பச் செலுத்தும் காலத்தை தள்ளிப் போட்டது. இது போன்ற சலுகைகள் எதிர் பார்க்கலாம். ஆனால் அரசே முழு உதவி செய்ய இயலாது.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    வீட்டுக்கடனில் இருந்து கடன் வாங்கியவர்கள் மீளவே முடியாது, ஒரு புறம் அசையாத சொத்து என்ற போதிலும் பலர் வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டித் தான் சேமிக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்ந்து எகிறிக் கொண்டே செல்வதால் பலருக்கு கடன் கழுத்தை நெரிக்கிறது.வருமானம் நிலையாக இருக்கும் அல்லது குறையும், மேலும் வருமானம் முற்றிலும் இல்லை என்ற சூழலில் எதிர்பாராத செலவுகள் வந்தால் இன்னும் நெருக்கடிதான். தனியார் நிறுவனங்களில் நிரந்தரமற்ற சூழலில் வேலை பார்க்கும் நபர்கள் படும் பாடு திண்டாட்டம் தான். வேலை இல்லையேல் வாங்கிய கடனை எப்படிக் கட்டுவது, அசலை எப்படிக் கட்டுவது? அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வருமானம் நிலையாக இருப்பதால் எப்படியும் ஓரளவு சமாளித்து விடுவார்கள்,ஆனால் மற்றவர்களின் நிலை பரிதாபம்தான்.வெளிநாடுகளில் அதிகம் சம்பாதிப்பவர்கள் தங்களுடைய வருமானத்தை வீடுகளில் ,காலி மனைகளில் முதலீடாகப் போட்டு விடுவார்கள்.மற்றபடி நிரந்தரமற்ற ஊதியம் பெறுபவர்கள் வீட்டுக்கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் திணறுகின்றனர்,வட்டிக்கு மேல் வட்டி கட்டி கந்து வட்டிக் கடனைக் கட்டுவது போல் தொடர்ந்து பல வருடங்களாக கடனைக் கட்டிக்கொண்டே ஆயுசு முழுக்க அல்லல் படுகின்றனர்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    யாருக்கோ வாடகை கொடுப்பதை நீண்டகால அடமானக்கடனுக்குத் தவணையாக செலுத்துவது பல நாடுகளில் சர்வசாதாரணம். வேலையிழப்பு வந்தால் பிரச்சினை. மற்றப்படி கடனில் இருந்து கொண்டே சொந்த வீட்டை அனுபவிக்கலாம். சிறிது திட்டமிடுதல் இருந்தால் நல்லது - அதாவது கடனை விரைவாகக்கட்டுவது போன்றவை.

  • Radhakrishnan -

    மேலும், கடனால் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டு, அந்த வாடகையை EMI செலுத்த பயன்படுத்துவது என் சேமிப்பை பாதுகாக்கும்.

  • Radhakrishnan -

    வாங்கியக் கடனை திருப்பி செலுத்துவது வாடிக்கையாளருக்கு சேமிப்பு இல்லை தான். ஆனால் அப்படி வாங்கிய வீட்டின் எதிர்கால விலை மதிப்பு (Appreciation Value) தான் சேமிப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement