Load Image
Advertisement

பேக்கரியில நடக்குது விதவிதமா 'டீலிங்'... கவுன்சிலரிடம் மினிஸ்டர் விரக்தி 'பீலிங்'


கோர்ட் அருகிலுள்ள பேக்கரி முன், நின்று கொண்டிருந்தாள் சித்ரா. வண்டியில் வந்து மித்ரா இறங்கியதும், இருவரும் பேக்கரியில் அமர்ந்து, ஜூஸ் ஆர்டர் சொல்லி விட்டுக் காத்திருந்தனர். மெதுவாக மித்ராதான் ஆரம்பித்தாள்...

''அக்கா! இந்த பேக்கரியில கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தா, ஏகப்பட்ட 'டீலிங்' பார்க்கலாம். போலீஸ் ஆபீசர்ஸ், வக்கீல்கள், புரோக்கர்கள் எல்லாம் இங்க வச்சுதான், 'டீல்' பேசுவாங்க. அப்புறம் அப்பிடியே, கார் பார்க்கிங் ஏரியாவுக்குப் போயி, கரன்சி, டாக்குமென்ட், நகை எல்லாத்தையும் கைமாத்திக்கிறாங்க. வெறும் 15 ரூபா டீயைக் குடிச்சிட்டு, எல்லா வேலையையும் முடிச்சுக்கிறாங்க!''

ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்த சித்ரா, குறுக்கிட்டுப் பேசினாள்...

''இங்க இல்லைன்னா வேற எங்கேயாவது, இதெல்லாம் பேசத்தானே போறாங்க...இதுல என்ன பிரச்னை?''

''இந்த 'டீலிங்' பேசுற கூட்டத்தை, வேவு பாக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் திரியுது...டீலிங் பேசுறப்போ, வாக்குவாதம் ஆகி, ஆவேசமா பேசிட்டு இருக்குறப்போ, அந்த கும்பல் உள்ளே புகுந்து, இவுங்க வச்சிருக்கிற பணத்தையோ, பொருளையோ கவ்விட்டுப் போயிருதாம். லேட்டஸ்ட்டா இதுமாதிரி ஏகப்பட்ட வேலை நடந்திருக்கு. போலீசுக்கு இந்த கும்பலைத் தெரிஞ்சும் கண்டுக்கிறதில்லையாம்!''

''சில போலீஸ்காரங்களுக்கும், அவுங்களுக்கும் கூட 'டீலிங்' இருக்கலாம். நம்ம போலீஸ்காரங்களுக்கு, யார் யார்ட்ட காசு கேக்கணும்னு, ஒரு வரைமுறையே இல்லாமப் போச்சு!''

சித்ரா முடிப்பதற்குள், மித்ரா, ''அப்பிடி யார்ட்டக்கா காசு கேக்குறாங்க?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள்.

அதற்கு பதிலளித்தாள் சித்ரா...

''வழக்கமா, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொடுக்குறதுக்கு, ஜி.எச்.,லதான் லஞ்சம் கேப்பாங்க. ஆனா, இப்போ போலீஸ்காரங்களே இதுக்கு பெரியளவுல பணம் பறிச்சு, ஜி.எச்.,ல இருக்குற சில டாக்டர்கள் உட்பட, பல பேருக்குப் பிரிச்சுக் கொடுக்குறாங்களாம்!''

''சரியா புரியலைக்கா!''

''இந்த ஆக்சிடெண்ட், தற்கொலைன்னு இயற்கைக்கு மாறான மரணங்கள்ல, இன்சூரன்ஸ் பணத்தை 'க்ளைம்' பண்றதுக்கு, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தேவைப்படும். அதுக்குதான் இப்போ, இன்சூரன்ஸ் தொகையை வச்சு, 10 பர்சன்டேஜ் லஞ்சம் கேக்குறாங்களாம். அதாவது ஒரு லட்சம்னா பத்தாயிரம், ரெண்டு லட்சம்னா 20 ஆயிரம்...இதெல்லாம் ரொம்ப அநியாயம்ல!''

''ஆமாக்கா! கமிஷனர், ஐ.ஜி., ரெண்டு பேரும் இதைக் கவனிச்சு, ரெண்டு போலீஸ்காரங்க மேலயாவது கடுமையா நடவடிக்கை எடுத்தாத்தான், இப்பிடி எரியுற வீட்டுல புடுங்குறது நிக்கும்!''

''சிட்டி லிமிட்ல, சில போலீஸ்காரங்க நடந்துக்கிறது, பொதுவெளியில போலீசுக்கே கெட்ட பெயரை ஏற்படுத்திட்டு இருக்கு....இப்பிடித்தான் போன வாரம் காந்திபுரத்துல ஒரு சலுான்ல, காட்டூர் போலீஸ் ஸ்டேஷன்ல, ரைட்டரா இருக்குற ஒருத்தரு, கட்டிங் பண்றதுக்கு ஒருத்தர் சீட்டுல உட்கார்ந்திருக்கிறப்பவே, தன்னோட மகனுக்கு முதல்ல முடி வெட்டணும்னு, சலுான்காரரை பயங்கரமா மெரட்டிருக்காரு!''

''அடடா....அவரென்ன ரைட்டரா, ராங்கரா?''

''அதுல என்ன கொடுமைன்னா....சீட்டுல உட்காந்திருந்தவரு, கவர்மென்ட் பி.ஆர்.ஓ.,வாம். வெளியூர்ல வேலை பார்க்குற அவருக்கும், அந்த ரைட்டருக்கும் பெரிய தகராறு நடந்திருக்கு. இந்த மேட்டர், ஏ.சி., டி.சி.,வரைக்கும் போயிருக்கு!''

''பாவம்...அவருக்கு என்ன அவசரமோ...ஏன்னா, போலீஸ்காரங்களுக்கு வார லீவு கொடுக்கச் சொல்லி, கமிஷனர் ஆர்டர் போட்டும், சில போலீஸ் ஸ்டேஷன்கள்ல, லீவே தர்றதில்லைன்னு சில போலீஸ்காரங்க புலம்புறாங்க. அந்தக் கோபத்தை இப்பிடி வெளிய காமிக்கிறாங்க போலிருக்கு!''

மித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, ஆளும்கட்சி கரை வேட்டியுடன் வந்த சிலரைப் பார்த்த சித்ரா, சில்லென்ற ஜூஸ் குடித்துக்கொண்டே, சூடான அரசியல் மேட்டருக்குத் தாவினாள்...

''மித்து! சி.எம்.,பிறந்தநாள் கூட்டத்துல உதயநிதியைக் கலந்துக்க வச்சு, 81 ஜோடிகளுக்கு அமர்க்களமா கல்யாணம் பண்ணி, ஆளும்கட்சிக்காரங்க அசத்திட்டாங்களே...கூட்டமும் செமயா இருந்துச்சு பார்த்தியா?''

''ஆமாக்கா! ஏற்பாடெல்லாம் பிரமாண்டமாத்தான் பண்ணிருக்காங்க. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு லட்ச ரூபா சீர் கொடுத்திருக்காங்க. காலையிலயும், மத்தியானமும் நாலாயிரம் பேருக்கு அறுசுவை விருந்து போட்ருக்காங்க...எல்லாம் டாஸ்மாக் கலெக்சன் காசுதான்னு நினைக்கிறேன்!''

''இல்லை மித்து....நான் விசாரிச்ச வரைக்கும், இதெல்லாம் செலவு பண்ணுனது, அ.தி.மு.க.,வுல இருந்து சமீபத்துல, தி.மு.க.,வுல இணைஞ்ச காளப்பட்டி ரியல் எஸ்டேட்காரர்தானாம்.

அவர்தான் செலவும் பண்ணி, ஓடியாடி உழைச்சு, ஏற்பாடுகளும் பண்ணிருக்காரு. ஒரு கோடி ரூபாய்க்கு மேல, அவர் செலவு பண்ணுனதா ஒரு தகவல். எதை எதிர்பார்த்து, இதெல்லாம் செய்யுறார்னு கட்சிக்காரங்களுக்கே தெரியலை!''

''ஆனா கூட்டத்துல, அமைச்சரைத்தான் உதயநிதி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டுப் போனாரு...இவர்தான் செலவு பண்ணுனதுன்னு, உதயநிதிக்கு தகவலாவது தெரியுமா, தெரியாதா....?''

''அதான் தெரியலை...மொத்தச் செலவையும் காளப்பட்டிக்காரரே பாத்துட்டாருன்னுதான் தகவல். ஆனா காரமடையில இருக்குற, ஆளும்கட்சி நகர நிர்வாகி ஒருத்தரு, இந்த மீட்டிங் பேரை வச்சு, அந்த ஏரியாவுல பிஸினஸ் பண்ற பல பேர்ட்ட, ஏகப்பட்ட வசூலைப் போட்ருக்காரு. கட்சிக்காரங்களே கொந்தளிக்கிறாங்க!''

''யாரு செலவழிச்சாங்களோ...யாரு வேலை பார்த்தாங்களோ...நம்ம மினிஸ்டர்தான் நல்லா ஸ்கோர் பண்ணிருக்காரு. இனிமேலும் கட்சியில அவர் சொல்றதுதான் வேதவாக்குன்னு நினைக்கிறேன்...!''

அதற்கு சித்ரா...''உதயநிதி பங்ஷனை முதல்ல கோவைப்புதுார் கிரவுண்ட்லதான் நடத்தணும்னு நினைச்சிருக்காங்க. அதுக்காக போன வாரம் புதன்கிழமை, மினிஸ்டர் அங்க போயிருக்காரு. அப்போ குனியமுத்துார் சுண்ணாம்புக் காளவாய் கவுன்சிலர் வந்து, 'என்னண்ணா...நல்லாருக்கீங்களா'ன்னு கேட்ருக்காரு. அதுக்கு மினிஸ்டர் என்ன சொன்னார் தெரியுமா?''

''அதையும் நீங்கதான் சொல்லணும்!''

''உங்களை மாதிரி ஆளுகளையெல்லாம் கவுன்சிலராக்கிட்டு, நான் எப்பிடி நல்லாருக்க முடியும்னு கேட்ருக்காரு. சுத்தியிருந்த கட்சிக்காரங்க எல்லாம் சிரிச்சிருக்காங்க. அந்தளவுக்கு அவர் விரக்தியா இருக்காரு!''

''அப்பிடி என்ன அந்த கவுன்சிலர் மேல கோபமாம்?''

''அந்த கவுன்சிலர், கட்சி நிகழ்ச்சி எதுலயுமே பெருசா கலந்துக்க மாட்டாராம். அவர் மனைவி கோபியில வேலை பாக்குறதால, அங்க போயிருவாராம். கட்சிக்காரங்களுக்கே அவரை சரியாத் தெரியாதாம். ஆனா, மினிஸ்டரோட கோபம், அந்த கவுன்சிலர் மேல மட்டும் இருக்குற கோபமாத் தெரியலை!''

''கவுன்சிலர்கள்ட்ட கேட்டா, 'நாங்க சம்பாதிக்க ஒரு வழியுமில்லை; டாஸ்மாக்லயும், கார்ப்பரேஷன்லயும் ரெண்டு மினிஸ்டர்களோட ஆளுகளே பாத்துக்குறாங்க. எங்களுக்கு எந்த வருமானமும் இல்லைன்னு புலம்புறாங்களே...அது கிடக்கட்டும்...நம்ம மேயரை எங்கேயுமே பார்க்க முடியலையே...?''

''அதைப் பத்தி நானும் விசாரிச்சேன் மித்து! எதுக்கெடுத்தாலும் உடம்பு சரியில்லைன்னு 'எஸ்கேப்' ஆயிர்றாங்களாம். மாசாமாசம் கவுன்சில் மீட்டிங் நடத்தணும்.

போன மாசம் நடத்தலை. ஏன்னு ஆபீசர்கள்ட்ட கவுன்சிலர்கள் கேட்டா, 'சப்ஜெக்ட்டுல மேயர் கையெழுத்து போடலை. அப்புறம் எப்படி கூட்டம் நடத்துறது'ன்னு கேக்குறாங்களாம்!''

''என்னதான் பண்ணப் போறாங்களாம்?''

''ஏகப்பட்ட பைல்கள்ல கையெழுத்துப் போடாம, கெடப்புல வச்சிருக்காங்களாம். இதைக் கண்டிச்சு, எப்போ கூட்டம் நடத்துனாலும், 30 கவுன்சிலர்கள் உள்ளே போகாம வெளியில நிக்கிறதா, முடிவு பண்ணி இருக்காங்களாம்!''

சித்ரா சொல்லி முடித்ததும், 'ஆளும்கட்சி மேட்டரை விடுங்கக்கா...நம்ம ஊரு ஏர்போர்ட்ல, வேலுமணிக்காக இ.பி.எஸ்., ஒரு மணி நேரம் காத்திருந்தாராமே' என்று மித்ரா கேட்க, அதைப் பற்றி விளக்க ஆரம்பித்தாள் சித்ரா...

''அதுவா... ஏர்போர்ட்டுக்கு நைட் எட்டரைக்கு வர்றதா இ.பி.எஸ்., சொல்லிருந்தாராம். ஆனா, ஏழரைக்கே வந்துட்டாராம். தகவல் கேள்விப்பட்டு, எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஜெயராம் ரெண்டு பேரும் போயிட்டாங்களாம்.

ஆனா, வேலுமணி வரலையாம். போன் பண்ணுனதுக்கு, 'டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். நீங்க வெயிட் பண்ண வேண்டாம். பேட்டி கொடுத்துட்டு கிளம்புங்கண்ணா'ன்னு சொல்லிருக்காரு!''

''மரியாதை...மரியாதை...அதுக்கு அவர் என்ன சொன்னாராம்?''

''அதெல்லாம் நல்லா இருக்காது தம்பி. நீ வா...வெயிட் பண்றேன்னு சொல்லி, வேலுமணி வந்ததுக்கு அப்புறம்தான், பேட்டி கொடுத்துட்டுக் கெளம்பிருக்காரு!''

''பரவாயில்லையே...நான் ஒரு பி.ஜே.பி.,மேட்டர் சொல்றேன்...அந்தக் கட்சியில மாவட்டத்துக்குப் பொறுப்பா இருக்கிறவரு, லோக்சபா எலக்சனுக்கு முன்னால, கட்சி நிர்வாகிகளை கொஞ்சம் உற்சாகப்படுத்தணும்னு நினைச்சு, தாளியூர்ல இருக்குற ஒரு ரிசார்ட்டுக்கு குடும்பத்தோட கூப்பிட்டு, தடபுடலா விருந்து வச்சிருக்காரு!''

''நல்ல விஷயம்தான...!''

''அதெல்லாம் நல்ல விஷயம்தான்...ஆனா குடும்பத்தோட விருந்துக்குக் கூப்பிட்டுட்டு, உ.பா.வுக்கும் ரெடி பண்ணி இருந்தாராம். அதுலதான் நிர்வாகிகள் அப்செட் ஆகி, 'குடும்பத்தோட கூப்பிட்டு வந்து, இப்பிடி பாரின் அயிட்டத்தைக் காமிச்சா என்னங்க செய்யுறது'ன்னு புலம்பித் தீர்த்துட்டாங்களாம்!''

''இன்னொரு புலம்பலைக் கேளு...சி.எம்., கோப்பைக்கு மாவட்ட வாரியா போட்டி நடத்துனாங்கள்ல...அதுல ஸ்டூடண்ட்ஸ், டீச்சர்ஸ், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள்னு எல்லாருக்கும் போட்டி நடத்திருக்காங்க.

இதுக்கு கவர்மென்ட் ஸ்கூல், எய்டடு ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் வேலை பாத்திருக்காங்க. ஆனா எய்டடு ஸ்கூல் டீச்சர்ஸ்களால, இதுல விளையாட முடியலையாம். அவுங்கதான் புலம்புறாங்க!''

''அது மாதிரி அரசு ஊழியர்களுக்கு, போன வருஷம் வரைக்கும், புட்பால், பேஸ்கட் பால் போட்டி நடத்திருக்காங்க. இந்த வருஷம் நடத்தலையாம். அதனால, அந்த விளையாட்டுகள்ல ஆர்வமா இருக்கிறவுங்க ஏமாந்து போயிருக்காங்க. அடுத்த வருஷமாவது இதை கரெக்ட் பண்ணனும்!''

''அரசு ஊழியர்கள்னதும் ஞாபகம் வந்துச்சு...அன்னுார் யூனியன்ல இருக்குற சில பஞ்சாயத்துகள்ல, நுாறு நாள் வேலைத் திட்டத்துல, ஒண்ணுக்கு ரெண்டு மடங்கா ஆளுகளைக் கணக்குக் காமிச்சு, ஏகப்பட்ட காசு அடிக்கிறாங்களாம்...கலெக்டர் கொஞ்சம் கவனிச்சா நல்லது!''

சொல்லி முடித்த சித்ரா, 'கூட்டம் வருது. கிளம்புவோம்' என்று எழுந்தாள். இருவரும் பில்லை செட்டில் செய்து விட்டு நடந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement