Load Image
Advertisement

அ.தி.மு.க., செல்வாக்கை மீட்டெடுப்பாரா பழனிசாமி?

அ.தி.மு.க., பொதுச் செயலராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்தவுடன், அந்த இடத்தை பிடிக்க திட்டமிட்டார், அவரின் நெருங்கிய தோழியான சசிகலா. ஆனால், சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனை விதித்ததால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், அவரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமி, 2017ல் முதல்வராக பதவியேற்றார். இதன்பின், சசிகலா குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டு, தர்மயுத்தம் நடத்தி வந்த பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டார். பொதுச் செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இரட்டை தலைமையும் கட்சியில் உருவானது. ஆனாலும், ஒவ்வொரு விஷயத்திலும், பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்ததும், கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்னை தலைதுாக்க ஆரம்பித்தது.

இந்தப் பிரச்னை, கடந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்ததால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில், இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமியை தேர்ந்தெடுத்து, சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிரடியாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன், இதே பொதுக்குழுவில், பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்கள் சிலரும், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில், இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 'பழனிசாமி தரப்பினர் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும். அவர் இடைக்கால பொதுச் செயலராக தேர்வானதும் செல்லும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அ.தி.மு.க., கட்சியானது, பழனிசாமி வசமாகியுள்ளது. அ.தி.மு.க.,வில் இனி ஒற்றைத் தலைமையே நீடிக்கும் என்ற நிலைமையும் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்கள் சிலரும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2017ல் முதல்வராக பழனிசாமி பதவியேற்றதும், அவரது தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என, எதிர்க்கட்சியினர் பலரும் ஆருடம் கூறி வந்தனர்.ஆனால், அந்தக் கருத்தை எல்லாம் தவறு என்றாக்கி, ஆட்சி அதிகாரத்தில் நான்கு ஆண்டுகளாக நீடித்த பழனிசாமி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் என, அனைவரையும் அரவணைத்து சென்றதன் வாயிலாக, தன் ஆளுமையை நிரூபித்ததுடன், தன் தந்திரமான நடவடிக்கைகளால்,கட்சியையும் இப்போது தன் வசமாக்கியுள்ளார்.
பன்னீர்செல்வம் தரப்பினரால் தொடுக்கப்பட்ட, சட்டரீதியான சவால்களை துணிச்சலுடன் சமாளித்து, வெற்றிக்கொடி நாட்டி விட்டார். ஆனாலும், இது ஆரம்பமே. அ.தி.மு.க., பொதுச் செயலராக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், சர்வ வல்லமை படைத்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து குரல் கொடுக்கவே பலரும் அஞ்சினர். பல நேரங்களில், அவர்கள் சர்வாதிகாரியாகவே செயல்பட்டனர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட தலைவர்களின் வாரிசாக பழனிசாமி தன்னை நிரூபிக்க வேண்டும் எனில், அவர் இன்னும் நிறைய சாதனைகள் படைக்க வேண்டும். பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். கட்சியின் நிர்வாகிகளை இதுவரை அரவணைத்து சென்றது போல, இனியும் செய்வதோடு, தவறு செய்வோரை கண்டிப்புடனும் கையாள வேண்டும். அதனால், சில தரப்பில் எதிர்ப்புகள் உருவானாலும், அதை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும்.
முதல்வராக பதவியேற்ற பின், கட்சியில் தன் அரசியல் அடித்தளத்தை வலுவாக்கியதன்வாயிலாக, தற்போது கட்சியின் எதிரிகளை முறியடித்து, பொதுச் செயலராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார் பழனிசாமி. அதேபோல, வரும் நாட்களில் உருவாகும் பிரச்னைகளையும் எதிர்கொண்டு, தமிழகத்தில் அ.தி.மு.க.,வே முதன்மையான கட்சி என்பதை நிரூபித்துக் காட்டுவார் என, நம்புவோமாக!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement