நம் நாடு, பன்மொழிகளைக் கொண்டது. நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டா-வது பிரிவில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள, 22 மொழிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால், பேசப்படும் 99 மொழிகளைத் தவிர, மொழி அடிப்படையிலான சிறிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே பலவித மொழிகளும், தாய்மொழியும் பேசப்படுகின்றன.
தாய்மொழி கல்வி
இதுவே இந்திய சமூக அமைப்பின் தனிச்சிறப்பு. ஏனெனில் அனைத்து மொழிகளையும், நாங்கள் மதிக்கிறோம். மொழியே நம்மை இணைக்கிறது.
வெளியில் இருந்து பார்க்கும்போது நாம், மொழியால் வேறுபட்டிருந்தாலும், ஒற்றுமை உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம். நாம் வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுகிறோம்.
-இந்த ஆண்டின் சர்வதேச தாய்மொழி தினம், கடந்த 21ல் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள், கல்வியில் மாற்றத்திற்கான தேவை, பன்மொழிக் கல்வி என்பதாகும்.
'யுனெஸ்கோ'வின் கொள்கையில் இடம் பெற்றுள்ளபடி, தாய்மொழியை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இது அனைத்து மட்டங்களிலும், கல்வியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் வளமான மொழியியல், கலாசாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதையே, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துகிறார்.
தேசியக் கல்விக் கொள்கை
தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, பயிற்று மொழி என்னவாக இருக்கும் என்பதே பலரது விவாதமாக இருந்தது.
உண்மையில், 'கல்வி கற்பதற்கான ஊடகம்தான் மொழியே தவிர, அதுவே முழுக் கல்வியும் அல்ல' என்ற ஓர் அறிவியல் உண்மையை, நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் பெரும்பாலும் அதீத புத்தக அறிவை மட்டுமே எண்ணி இந்த மேன்மையை உணரத் தவறுகின்றனர்.
எந்த மொழி, குழந்தைகளால் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அந்த மொழியிலேயே நாம் கற்பிக்க முன்வர வேண்டும்.
பன்மொழியை முன்னெடுத்துச் செல்வதும், கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு உதவும் மொழியின் வல்லமையை எடுத்துச் சொல்வதுமே, தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் சிறப்பு அம்சங்கள்.
தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட பன்மொழிக் கல்வியே, நமது கல்விக் கொள்கையின் முக்கிய அம்சம்.
தாய்மொழியே கல்வித்துறையின் மாற்றத்திற்கு வித்திடுவதில் முக்கியமானது, ஏனெனில் அதுதான் நம் அடையாளம். அதேநேரத்தில், நம் தொன்மை வாய்ந்த கலாசாரப் பாரம்பரிய அடையாளத்தையும் இழக்கக் கூடாது.
குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்பதற்கு ஆதரவு அளிக்கும் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை ஊக்குவிக்க வேண்டும்.
அப்போதுதான் குழந்தைகள் தாய்மொழியைக் கற்றுக் கொள்வதோடு, மற்ற மொழிகளையும் பள்ளிகளில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
பன்மொழித் தன்மை கொண்ட இந்தியா, பள்ளிக் கல்விக்கானப் பாடத்திட்டத்தில் பல மொழிகளையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அவ்வாறு பல மொழிகளைக் கற்றுக் கொள்வது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்றுக் கருதக்கூடாது.
மும்மொழி கொள்கை
ஏனெனில், ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்பது, அவர்களது கற்பனை வளத்தை மேம்படுத்துவதுடன், இலக்கிய அறிவையும் வளர்ப்பதாக, பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, தாய்மொழியில் ஆரம்பக்கல்வி கற்கும் குழந்தைகளுக்கு, வேறு (இரண்டாவது) மொழியில் ஆரம்பக் கல்வியைப் பெறும் குழந்தைகளைவிட அடிப்படைக்கல்வி பலமானதாக அமைகிறது.
தாய்மொழி அல்லாத மொழியில் கல்வி கற்பது, பலக் குழந்தைகளைத் தாய்மொழியே தெரியாத நிலைக்குத் தள்ளுவதுடன், அவர்கள் படித்த மொழியிலும் குறைந்த அறிவாற்றலையே அளிக்கிறது.
பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொள்வோரைப் பொறுத்தவரை, மொழியே முக்கியக் காரணியாக இருக்கிறது.
மொழியின் பன்முகத்தன்மையைக் கருத்தில்கொண்டு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட, பன்மொழிக்கல்வியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகளுக்குக் கிடைக்கும். அதேநேரத்தில், தற்போதுள்ள மூன்று மொழிக் கொள்கை, தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
ஒருமைப்பாடு
அந்த மூன்று மொழிகளில், தாய்மொழி, உள்ளூர் மற்றும் மாநில மொழியும் அடங்கும். தாய்மொழியைத் தவிர மற்ற இரண்டு மொழிகளை, மாணவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தேர்வு செய்து கொள்ளலாம்.
இதற்காக உயர்தரம் வாய்ந்த புத்தகங்களை அவரவர் தாய்மொழியில் வழங்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மற்றொரு இந்திய மொழியைக் குழந்தைகள் கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது. ஏனெனில், இந்தியாவின் அனைத்து மொழிகளும், பாரதீய பாஷ பரிவார் என்ற ஒருமொழிக் குடும்பத்தையேச் சேர்ந்தவை.
இந்தியாவின் செம்மொழிகளைக் கற்றுக் கொள்வது, இலக்கியத்தின் தொன்மையை உணர உதவுவதுடன், இந்திய அறிவாற்றல் முறைகளின் வளமையையும் வழங்கும்.
இந்திய மொழிகளில் கல்வியைக் கற்றுக் கொள்வது, அதன் வேர்களைப் புரிந்துகொள்ள உதவுவதுடன், இந்தியாவின் கலாசார ஒருமைப்பாட்டிற்கும் வலிமை சேர்க்கும். ஏனெனில், கலாசாரமும், மொழியும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை.
ஊக்குவிப்பு
தாய்மொழி மூலம் ஆரம்பக் கல்வியை ஊக்குவிக்கவும், இந்திய மொழிகளை முன்னிறுத்துவதற்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற மத்திய அரசின் கொள்கையை உணர்த்துவதாக அமையும்.
இந்தியாவின் தாய்மொழிகள் மூலம் கல்வியை வழங்குவதற்கு ஆதரிக்கும், அனைத்து வழிகளையும் முன்னெடுப்போம்.
தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஈக்களாய் மொய்த்த ஈரோட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கல்வியைவிட கல்லா புரிந்த பாஷை