Load Image
Advertisement

பெட்ரோல் போட புது டெக்னிக் பண்ணுது டிராபிக் போலீஸ்... திருடர்களுக்கு டிரெஸ் வாங்கிக்கொடுக்குது க்ரைம் போலீஸ்!

அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை காண, சித்ரா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாள். பில்லியனில் அமர்ந்திருந்த மித்ரா, ''நம்ம புது கலெக்டரை பார்த்து விவசாயிங்க, 'நீங்க ரொம்ப நல்லவரு'ன்னு சொன்னதுல, கலெக்டர் ரொம்ப குளிர்ந்து போயிட்டாராம் தெரியுமா?,'' என்று கேட்டு, சித்ராவைத் திகைக்க வைத்தாள்.

வண்டியை ஓட்டிக் கொண்டே, ''இது எப்ப நடந்துச்சு...!,'' என்று ஆச்சரியமாகக் கேட்டாள் சித்ரா.

''சமீபத்துல நடந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்துலதான். உங்களுக்குதான் தெரியுமே... சில விவசாயிங்க காரசாரமா பேசுவாங்க...சிலபேரு அப்பாவியா பேசுவாங்க...சில பேரு மனவேதனையை கொட்டுவாங்க,''என்று மித்ரா நீட்டி முழக்க, குறுக்கிட்ட சித்ரா, 'தெரியும்...தெரியும் மேட்டருக்கு வா' என்றாள். மேட்டரை விளக்கினாள் மித்ரா...

''புது கலெக்டருக்கு முதல் கூட்டமே ஏடாகூடமா ஆயிரக்கூடாதுன்னு, அக்ரி ஆபீசர்ஸ் ரொம்ப மெனக்கெட்டு இருக்காங்க. விவசாயிகளும் ஸ்மூத்தாதான் பேசியிருக்காங்க. கலெக்டரும் மத்தியானம் 2:00 மணி வரைக்கும், பொறுமையா எல்லா பிரச்னையையும் கேட்டிருக்காரு. மொபைல் போனை கூட உதவியாளர்கிட்ட குடுத்துட்டாராம். அதுலதான் குளிர்ந்து போயி விவசாயிக பாராட்டிருக்காங்க!''

''பரவாயில்லையே...அப்ப யாராலயும், கலெக்டரை டென்ஷன் ஆக்க வாய்ப்பில்லைங்கறே... அப்படித்தானே,'' என்றாள் சித்ரா.

''கரெக்ட். ஆனா, நம்ம கார்ப்பரேஷன் கமிஷனர் உச்சகட்ட டென்ஷன்ல இருக்கார்,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''ஏன்...என்னாச்சு,''''ரிசர்வ் சைட்டை ஆக்கிரமிச்சு, ஒரு லேடி அதிகாரி வீடு கட்டியிருக்காங்க. இது சம்பந்தமா துறை ரீதியா என்கொயரி நடந்துக்கிட்டு இருக்கு. அவரை சஸ்பெண்ட் பண்ணி, துறைரீதியா ஆக் ஷன் எடுத்திருக்கணும்!,

''ஆமா...அதைத்தானே முதல்ல செய்யணும்...ஸ்வீட்கடைக்காரரே ஸ்வீட்டை காலி பண்ணலாமா?,'' என்று கேட்டாள் சித்ரா.

''சரியா சொன்னீங்க...ஆக் ஷன் எடுக்க வேண்டிய டவுன் பிளானிங் ஆபீசர்ஸ், அவுங்க மேல இருக்குற பயத்துல, கைகட்டி வேடிக்கை பார்க்கறாங்க. ஆனா, இந்தவிவகாரத்தை கையில எடுத்துருக்கற கார்ப்பரேஷன் உயரதிகாரிகள், இது பத்தி விசாரிக்கிறாங்க. இந்த அதிகாரிங்க மேல, அந்த ஆக்கிரமிப்பு லேடி கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்களாம், இதை கேள்விப்பட்டுதான் கமிஷனர் கோபத்துல டென்ஷன் ஆயிட்டாராம்!,''

''கோர்ட் உத்தரவால முன்னாள் முதல்வர் ஜெ., பிரண்ட் சசி மேடம் ரொம்பவே குழப்பத்துல இருக்காங்களாம்!'' என்று சம்பந்தம் இல்லாமல் திடீரென மாநில அரசியலுக்குத் தாவினாள் சித்ரா.

அதைப் புரிந்து கொண்ட மித்ராவும் தன் பங்கிற்கு, உள்ளூர் அரசியல் விவகாரத்தை ஆரம்பித்தாள்...

''அவர் மட்டுமா...நம்மூரு முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் ஆதரவாளர்களும், முதல்வர் ஸ்டாலின் செய்கையால குழம்பி போயிருக்காங்களாம்,''

''ஏன்...என்னாச்சு,''

''முந்தா நாள் கோவைக்கு சி.எம்.,வந்தார்ல...அப்போ, உடம்பு சரியில்லாம ஓய்வுல இருக்குற கார்த்திக்கைப் பார்க்க, அவர் வீட்டுக்கு முதல்வர் போறதா ஒரு தகவல் பரவுச்சு. உடனே அந்த ஏரியாவுல போலீஸ் செக்யூரிட்டியும் போட்டுருக்காங்க. ஆனா, முதல்வர் வராததால, கார்த்திக் முகாம் குழம்பிப்போயிருக்கு. ஏன் வரலைன்னு காரணம் தெரியாம, கட்சிக்குள்ள ஏதேதோ 'டாக்ஸ்' ஓடுது!''

''என்னதான் இருந்தாலும், மாவட்டச்செயலாளர்ங்கிற மரியாதைக்காவது, ஒரு எட்டு வந்திருக்கலாம்னு, ஆதரவாளர்கள்லாம் பேசிக்கறாங்க. ஏன்னா, ஒன்றரை மணி நேரம் லீ மெரிடியன் ஓட்டல்ல, கட்சிக்காரங்க, கவுன்சிலர்ங்க கூட ரிலாக்சா பேசிட்டுதான் சி.எம்.,பிளைட் ஏறுனாராம்,''

''கட்சிக்காரங்களோட ஒன்றரை மணி நேரம் பேசிட்டு இருந்ததுக்குப் பதிலா, சிட்டிக்குள் நாலு ரோடு போயிருந்தா, ஊரு என்ன லட்சணத்துல இருக்குன்னு தெரிஞ்சிருக்கும். இந்த ரோடு, டிராபிக் பிரச்னையினாலயே, நம்ம ஊருல இருக்குற ஒரு பெரிய எக்யூப்மென்ட் கம்பெனியோட கார்ப்போரேட் ஆபீசை, பெங்களூருக்கு மாத்தப் போறாங்களாம். ஏன்னா, கோவைக்கு வர்றதுக்கே வெளிநாட்டுக்காரங்க ரொம்பவே யோசிக்கிறாங்களாம்!''

''அடக்கொடுமையே! ஏற்கனவே நம்ம ஊருல இருந்து, வெளிநாட்டுக்குப் போறதுக்கு பிளைட் கனெக்டிவிட்டி இல்லைன்னு பல பன்னாட்டுக் கம்பெனிங்க வராம இருக்காங்க. இதுல ரோடுன்னாலயும் இப்பிடி கம்பெனிங்க ஊரைக் காலி பண்ணுனா கோவையோட எதிர்காலம் என்ன ஆகுமோ?''

சூடாகப் பேசி, கோபத்தை வெளிப்படுத்திய சித்ரா, பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வண்டியை நிறுத்தி, இரண்டு வாட்டர் மெலன் ஜூஸ் ஆர்டர் செய்தாள்.போலீஸ் வாகனத்தைப் பார்த்த மித்ரா, ஜூஸ் குடித்துக் கொண்டே, வேறு மேட்டரை ஆரம்பித்தாள்...

''அறுபது கோடி ரூபா மதிப்புள்ள தியேட்டரை, ஆறு கோடி கடன், வட்டியைக் காமிச்சு, ஆட்டையைப் போட டிரை பண்ண விவகாரம், போலீஸ்காரங்களுக்கு தொடர்ந்து குடைச்சலா இருக்காம். இந்த விவகாரத்துல ரீசன்டா ஒரு காமெடி சம்பவம் நடந்துருக்கு,''

''என்ன காமெடி,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.

''பூட்டிக்கிடக்கற தியேட்டர்ல, திடீர்னு ஏதோ உடைக்கிற சத்தம் கேட்டுருக்கு. ஏரியாக்காரங்க பயந்து போலீசுக்கு இன்பார்ம் பண்ணியிருக்காங்க. ஏற்கனவே இந்த விவகாரத்துல ஒரு கொலை நடந்துருக்கறதால, அலறியடிச்சு போலீஸ்காரங்க ஓடி வந்திருக்காங்க,''

''சூப்பரு...அப்புறம்!,''

''உள்ளே போய் பார்த்தா, திருடனுங்க மூணு பேரு, அங்க உள்ள பழைய இரும்பை திருட டிரை பண்ணிட்டு இருந்திருக்காங்க. பார்க்க பிச்சைக்காரங்களை விட மோசமா இருந்தாங்களாம். கோர்ட்டுக்கு இப்படியே கூட்டீட்டுப்போனா ஜட்ஜ் திட்டுவார்னு, அவங்கள பிடிச்சுக் குளிக்க வச்சு, புது டிரெஸ் வாங்கிக்குடுத்து, மறுநாள் கூட்டீட்டு போயிருக்காங்க,'' என்று மித்ரா கூற, வாய் விட்டு சிரித்த சித்ரா, அதையொட்டி அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...

''க்ரைம் போலீஸ்காரங்க, திருடங்களுக்கு டிரஸ் வாங்கிக் கொடுக்குறாங்க...ஆனா ஆர்.எஸ்.புரம் டிராபிக் போலீஸ்காரங்க, பெட்ரோல் போடவே காசில்லாம, புதுசா ஒரு டெக்னிக்ல இறங்கீருக்காங்களாம்!''

''அதென்னக்கா புது டெக்னிக்?''

''அதுதான் அவுங்களோட மாமூல் டெக்னிக்காம்...யாராவது டிராபிக் விதிமீறல் சம்பந்தமா பிடிபட்டாங்கன்னா, அவங்ககிட்ட அபராதத்தை பொருளா வாங்கிக்குவாங்களாம். அதுலதான் பெட்ரோல் பங்க்காரங்க மாட்டுனா, 'பங்க்'க்கு போயி வண்டிக்கு புல்டேங்க் நிரப்பிட்டு வந்துருவாங்களாம்,''

''ரொம்ப காலமா டேரா போட்டுட்டு இருந்த போலீஸ்காரங்களை, வேற ஏரியாவுக்கு மாத்துன போலீஸ் கமிஷனர் காதுக்கு, இந்த மேட்டர் இன்னும் போகலை போலிருக்கு!,'' என்றாள் மித்ரா.

ஜூஸ் குடித்து விட்டு, இருவரும் மீண்டும் வண்டியில் பயணமானார்கள்.

அப்போது மித்ரா,''கோவையில நடந்த ரவுடி கொலை விவகாரத்துல, கொலை பண்ணுன கூலிப்படைக்கு ஆதரவா வக்கீல் ஒருத்தர் தீவிரமா செயல்படுற தகவல் கிடைச்சிருக்கு. மேட்டர் கன்பர்ம் ஆனதும், அவரை துாக்க போலீஸ்காரங்க பிளான் பண்ணியிருக்காங்க,'' என்றாள்.

''கவுண்டம்பாளையத்துல மாமூல் வசூலிக்கறவங்களையும் துாக்கினால் நல்லா இருக்கும்,'' என்றாள் சித்ரா.

''யாரு...என்னாச்சு,''''அங்க இருக்கற கடை, ஷாப்பிங் காம்பிளக்ஸ்னு எதையும் விட்டு வைக்காம, கார்ப்பரேஷன் சுகாதாரத்துறை அதிகாரிங்க சில பேரு, புரோக்கர்ங்க உதவியோட செம வசூலாம். மாசாமாசம் அஞ்சாயிரத்துல இருந்து பத்தாயிரம் ரூபா வரைக்கும் அழணுமாம். தரலைன்னா ஏதாவது கேஸ் போட வேண்டியிருக்கும்னு மிரட்டல் வேறயாம்,'' என்றாள் சித்ரா.

''வசூல்னு சொன்னதும் ஞாபகம் வருது. நம்ம மாவட்ட சுகாதாரத்துறையில டாக்டர், நர்ஸ் அப்பாயின்ட்மென்டுல செம துட்டு விளையாடுதுன்னு, ஏகப்பட்ட புகார் வருது. ஆனா, எந்த ஆக் ஷனும் இல்லை,'' என்றாள் மித்ரா.

''அது தெரிஞ்சதுதானே...யாரு துட்டு வசூல் பண்றதாம்?,''

''அவர் சுகாதாரத்துறை உயர் அதிகாரிக்கு ரொம்ப நெருக்கமான ஒரு ஸ்டாப். இதெல்லாம் அந்த உயர் அதிகாரிக்கு தெரியுமா, அல்லது தெரியாதது போல கமுக்கமா இருக்காரான்னு தெரியலை,''

''காணாமப் போன மாவட்ட ஊராட்சித் தலைவரை, போலீஸ்காரங்கதான் கண்டுபிடிக்கணும்,'' என்று அடுத்த மேட்டருக்கு 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.

''யாரு அவரு,''''அன்னுார்காரர் இவர். இதுக்கு முன்னால தி.மு.க., ஒன்றிய செயலாளரா இருந்தாரு. போன வருஷம் கட்சியில இருந்து டெம்பரரியா துாக்குனாங்க. இதனால 'மூட் ஆப்' ஆன இவர், எந்த அரசு நிகழ்ச்சியிலும் கலந்துக்காம, எங்கேயோ 'ஆனந்தமா' பொழுதை கழிக்கறாரு. ஜனங்க வலை போட்டு தேடறாங்க,''

''கட்சி மேல இருக்கற கோபத்தை, ஜனங்க மேல காட்டறது என்ன நியாயம்?,'' என்றாள் மித்ரா.

''பால் பாக்கெட் போடற நிறுவனம் மட்டும், ஜனங்களுக்கு எதிரா செயல்படலாமா,'' என்று பொடி வைத்து பேசினாள் சித்ரா.

''ஏன்...என்னாச்சு?,''

''பச்சாபாளையத்துல இருக்கற அந்த நிறுவனத்துலருந்து, பால் பாக்கெட்டுகள் வீடுகளுக்கு லேட்டா வர்றதா ஒரு புகார் வந்துச்சே...ஞாபகம் இருக்கா,''

''ஆமா...!,''

''லேட்டுக்கு அங்க இருக்கற பாக்கெட் மெஷின்தான் காரணம்னு சொன்னாங்கள்ல...அது இல்லையாம்,''

''அப்புறம்,''

''பிரைவேட் பால் விற்பனைக்கு ஹெல்ப் பண்ணத்தான், இப்படி அடிக்கடி மெஷின் மேல பழியை போடறதா தகவல். இதுக்கு இடையூறு செய்றவங்க மேல ஏதாவது பழி போட்டு, கட்டாய மாறுதல் செஞ்சிர்றாங்களாம்,''

''குழந்தைங்க குடிக்கற பால்ல கூடவா இப்படி விளையாடுவாங்க...இவங்கள்லாம் எப்பதான் திருந்துவாங்களோ,'' என்று கவலையாக பேசினாள் மித்ரா.

''இதே மாதிரித்தான் உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட்ல இருக்குற பல கடைகள்ல, வெயிட் மெஷின்ல 200 கிராம் வரைக்கும் ஏதோ டெக்னிக்கலா 'பிராடு' பண்ணி, எடையைக் குறைச்சிர்றாங்களாம்!''

''அதெப்பிடி குறைக்கிறாங்களாம்?,''

''அதாவது எடைத்தட்டுக்கு 700 கிராம் வெயிட் இருந்தா, அதே அளவு குறைச்சுதான் 'ஜீரோ' செட் பண்ணனுமாம். ஆனா, 500 கிராம் மட்டும் குறைச்சிட்டு, அந்த 200 கிராம் மீன்ல எடையைக் குறைச்சிர்றாங்களாம்!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மருத்துவமனை வந்து விட, ''பப்ளிக் எக்சாம் டூட்டி போடற விஷயத்துல நம்ம மாவட்ட சி.இ.ஓ., ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காராம். டூட்டி லிஸ்ட் லீக் ஆயிரும்னு, அவரே தயாரிக்கறாராம்,'' என்று இன்னொரு மேட்டரையும் சொல்லிக் கொண்டே வண்டியை பார்க் செய்தாள் சித்ரா.

இருவரும் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தனர்.



வாசகர் கருத்து (1)

  • Kalyanaraman - Chennai,இந்தியா

    காசு கொடுத்தா ஓட்டு போடும் வாக்காளர்கள் இருக்கும்பாேது ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை? இதில் ஓட்டு போடாத 40-45% வாக்காளர்கள் வேறு. மக்கள் திருந்தினால்தான் ஆட்சியாளர்கள் திருந்துவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement