தர்யா என்றால் சுதந்திரமாக பாய்ந்து செல்லும் நதி என்று அர்த்தம் இருக்கிறதாம்
தர்யா என்ற இந்தப் பெண்ணும் அப்படித்தான் தனி ஒருவளாக உலகை சுற்றிப்‛பார்க்க' கிளம்பிவிட்டார்
இதில் என்ன ஆச்சர்யம் உலகில் எத்தனையோ பெண்கள் தனியாக உலகைச் சுற்றி வந்து கொண்டுதானே இருக்கின்றனர் என்று நீங்கள் நினைக்கலாம்
அவர்களில் இருந்து இவர் வித்தியாசப்படக் காரணம் இவருக்கு பார்வை இல்லை என்பதுதான்
ஆர்மேனியாவைச் சேர்ந்த இந்த 22 வயது பெண் கடந்த உலக ஊனமுற்றோர் தினத்தன்று ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தார்,அந்த நிகழ்ச்சி ஊனமுற்றவர்களை பரிதாபமாக பாருங்கள் என்று வேண்டுகோள் விடும்படியாக இருந்தது
இது தர்யாவிற்கு பிடிக்கவில்லைஊனம் என்பது உண்மையில் ஒரு பரிசு, இதைத்தாண்டி சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வேட்கையும் உணர்வும் உந்துதலும் ஒவ்வொரு ஊனமுற்றவர்களுக்கும் அதிகமாகவே உண்டு ஆகவே பார்வை இல்லாத தர்யா கிழே விழுந்துவிட்டாள் என்று பரிதாபப்படவேண்டாம் தர்யா தானாகவே எழுந்துவிடுவாள் அதுமட்டுமல்ல திரும்ப இது போல விழமாட்டாள்.
ஊனமுற்றவர்கள் தங்கள் ஊனத்தை ஊனப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு சிறப்புத்திறன் கொண்டிருப்பர் அந்த சிறப்புத்திறனுக்கு வாய்ப்பு கொடுங்கள் அது போதும் அவர்கள் வானளவில் வளர்வர் உயர்வர் என்ற எண்ணம் கொண்ட தர்யா இந்த எண்ணத்தை தனக்குள் வைத்துக் கொள்ளாமல் உலகம் முழுவதும் சென்று பரப்புரை செய்யவேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தார்.
அதுவரை பார்த்துவந்த பள்ளிவேலைக்கு பைபை சொல்லிவிட்டு பயணத்தை துவங்கிவிட்டார்,பெற்றோர்களுக்கு தெரியும் தர்யாவிற்கு தேவை அனுமதியில்லை ஆசிதான் என்று ஆகவே மனமார்ந்த ஆசிகளை வழங்கி வழியனுப்பினர்.
கடந்த 2022,டிசம்பரில் ஊரைவிட்டு கிளம்பியவர் ஈரான், துருக்கி,பாக்கிஸ்தான் சென்றுவிட்டு தற்போது நம் இந்தியாவின் காஷ்மீரில் முகாமிட்டுள்ளார்.
நான் கடந்து வந்த பாதையில் சந்தித்ததெல்லாம் அன்பு உள்ளங்களை மட்டுமே, எனது செலவிற்காக நான் கொண்டுவந்த பணத்தை எடுத்து செலவு செய்யவே விடமாட்டேன் என்கிறார்கள். ஊனமுற்றவர்கள் தங்களின் பிரதிநிதியாக என்னைக் கொண்டாடுகின்றனர்.அவர்களின் குரலாக எனது குரல் ஒலிப்பதாக பெருமைப்படுகின்றனர்.
அன்புக்கு மிகுந்த சக்தி உண்டு அது எதையும் சாதிக்கும் ஆனால் அதை பகிர்ந்து கொள்வதில்தான் எவ்வளவு தயக்கம் எத்தனை தடைகள்
வாழ்வது ஒரு முறை அந்த வாழ்க்கையை ரசிக்கவேண்டாமா? போரும் மனித உரிமை மீறல்களும் மனித குலத்திற்கே பெரும் அவலம் அல்லவா
பொதுவாகவே பயணம் என்பது பல விஷயங்களை கற்றுத்தரும் அதிலும் லட்சியத்துடனான எனது பயணத்தில் நிறையவே கற்றுக்கொள்கிறேன்
இந்தியா என்ற வார்த்தையே இனிமையானது கலையும் கலாச்சாரமும் நிறைந்த இந்த மண்ணையும் மனிதர்களையும் ஆர்வமுடன் சந்திக்க வந்துள்ளேன்
எனது சந்திப்புகள் நிச்சயம் சந்தோஷம்தரும் என்கிறார் நம்பிக்கையுடன்...
-எல்.முருகராஜ்
அமுதார்யா என்னும் ஒரு நதி ஆபிகானில் இருக்கு மத்திய ஆசியாவில் ஓடும் நீளமான நதிகளில் ஒன்று