ராஜகோபால்
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்,காந்திய வழியில் வளர்ந்தவர்,அகிம்சை முறையை பின்பற்றுபவர்.
இப்போது 74 வயதாகும் ராஜகோபால் கடந்த 50 வருடங்களாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
சம்பல் கொள்ளையர்கள் சரணடைந்தபின் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்டார்
விவசாயமும் கல்வியும் மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை அந்தப்பாதைக்கு திருப்பினார்
இதை அடுத்து நாட்டில் உள்ள பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின் அறியாமை போக்கி அவர்களின் நில உரிமைகளுக்காக போராடினார்.இவரது போராட்டம் என்பது பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு பேரணியாக பல கிலோமீட்டர் துாரம் காந்திய வழியில் நடைபயணம் செல்வது பின் சம்பந்தப்பட்ட அரசியல் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தி நிலங்களை பெற்றுத்தருவது ஆகும் இப்படி இதுவரை பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட எளியவர்களின் நிலங்களை பெற்றுத்தந்துள்ளார்.
இந்த நில மீட்பு பிரச்னை இந்தியா முழுவதும் பீடித்துள்ள பிரச்னையாக இருப்பதை உணர்ந்து இதற்காகவே ‛ஏக்தா அறக்கட்டளையை' உருவாக்கி அதன் செயல்பாடுகளை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றார்.இந்த அறக்கட்டளை தொய்வின்றி செயல்பட நாடு முழுவதும் பயணம் மேற்கொள்பவர்.
இது தவிர ஏழை எளிய மக்களின் சமூக கலாச்சாரங்களை மேம்படுத்தும் ‛செசி' அமைப்பின் செயலாளராக மதுரை மாவட்டத்தில் கடவூர் கிராமத்தில் இருந்து வருகிறார்,இவரது மணைவி ஜில்கார்ட் அமைப்பின் உறுப்பினராகவும் இவருக்கு உறுதுணையாகவும் இருந்துவருகிறார்.
ராஜகோபால் காந்திய வழியை வலியுறுத்தி பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார் இவரைப்பற்றி மற்றவர்களும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளனர்.
ராஜகோபாலின் கடந்த ஐம்பதாண்டு கால காந்திய செயல்பாடுகளை பாராட்டும் விதத்தில் ஜப்பானின் நிவானோ அறக்கட்டளை அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது.இது இந்திய மதிப்பிற்கு ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.
கடந்த 19 ந் தேதி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது ,இளைஞர்கள்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து அவர்களை நாம் காந்திய வழிக்கு கொண்டுவருவதற்கு இந்த விருதும் பரிசும் பயன்படும் என்றார்,மகத்தான மனிதருக்கு கிடைத்துள்ள மகத்தான பரிசு பல மகத்தான விளைவுகளை ஏற்படுத்தட்டும் வாழ்த்துக்கள்
-எல்.முருகராஜ்
காந்தி அவர்கள் வழியில் ஒரு மாமனிதர்... வாழ்க, வளர்க அவர் தொண்டு.....🙏