மஹாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு, ௨௦௧௯ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.,வும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில், இந்த கூட்டணி அமோக வெற்றியும் பெற்றது. ஆனாலும், முதல்வர் பதவி விவகாரத்தில், இரு கட்சிகளிடையே மோதல் உருவாகி, கூட்டணி உடைந்தது.
இதனால், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, சிவசேனா ஆட்சியை பிடித்தது; உத்தவ் தாக்கரே முதல்வரானார். உத்தவ் தலைமையிலான, இந்த மகா விகாஸ் அகாதி அரசுக்கு, கடந்த ஆண்டு நெருக்கடி ஏற்பட்டது.
சிவசேனா கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில், 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். ஷிண்டேவுக்கு நிறைய எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருந்ததால், கட்சி இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது; மாநில முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.
இதையடுத்து, உத்தவ் அணியினரும், ஷிண்டே அணியினரும் தாங்களே உண்மையான சிவசேனா என, தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இரு தரப்பினர் தரப்பிலும் அளிக்கப்பட்ட கடிதங்களை பரிசீலித்த தலைமை தேர்தல் ஆணையம், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா. அந்த அணிக்கே, சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் சொந்தம் என்று அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, உத்தவ் அணியினருக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அவரது தலைமையிலான அணியின் எதிர்காலம் என்னாகுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, உத்தவ் தாக்கரே அரசு அமைத்தது முதல், சிவசேனா கட்சியில் பிரச்னை தலை துாக்கத் துவங்கியது. உத்தவ்வால் நியமிக்கப்பட்டவர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கும், முதல்வருக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டதும், அவர்களை திருப்திப்படுத்தினால் மட்டுமே, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்திக்க முடியும் என்ற நிலைமையும் உருவானது.
எம்.எல்.ஏ.,க்கள், தங்களது தொகுதி பிரச்னைகளை முதல்வரிடம் தெரிவிக்க முடியாத நிலைமை உருவானது. அதே நேரத்தில், கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எந்த நேரத்திலும், உத்தவ் தாக்கரேவை சந்திக்க அனுமதி தரப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மூத்த தலைவரும், சிவசேனா அமைச்சராக இருந்தவருமான ஏக்நாத் ஷிண்டேவை எந்நேரமும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்கலாம் என்ற நிலைமை உருவானது. அவர்களின் குறைகளை ஷிண்டேவும் காது கொடுத்து கேட்கத் துவங்கினார்.சிவசேனா கட்சியை துவக்கிய பால்தாக்கரேயின் உண்மையான சீடர்களுக்கு, ஷிண்டே ஆபத்பாந்தவராக தென்பட்டார். அதனால், அவரின் பின்னால் கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுக்க, கட்சி உடைந்தது. இது தான் சரியான தருணம் என, நேரம் பார்த்துக் கொண்டிருந்த பா.ஜ.,வும், வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது.
தற்போது சிவசேனா கட்சியின் பெயர், சின்னம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சொந்தம் என, அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், அது தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில், '2019 சட்டசபை தேர்தலில், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பெற்ற ஓட்டுகளில், 76 சதவீதத்தை ஷிண்டே அணி எம்.எல்.ஏ.,க்கள் பெற்றுள்ளனர். உத்தவ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 23.5 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளனர்' என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, வரும் நாட்களில், தமிழகம் உட்பட, தேசிய அளவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், சிவசேனா தொண்டர்களின் உண்மையான ஆதரவு, மக்களின் ஆதரவு, உத்தவ்வுக்கு உள்ளதா அல்லது ஷிண்டேக்கு உள்ளதா என்பது, 2024ல் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது தெரியவரும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!