வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விதிப்பில் ஐந்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டுக்கும், நாட்டிற்கும், கடினமான உழைப்பை தரும் நடுத்தர மக்களுக்கும் பயன் தருவதாக வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய வரிவிதிப்பு முறையில், 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை. அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பழைய வரி விதிப்பு முறையில், மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு 50 ஆயிரம், ஓய்வூதியதாரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிரந்தர வரிக்கழிவு வழங்கப்படுகிறது. புதிய வரிவிதிப்பு முறையிலும் இந்த நிரந்தர வரிக்கழிவு தொடரும்.
மொத்தம், 15.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளம் வாங்குவோருக்கு 52 ஆயிரத்து 500 ரூபாய் நிரந்தர வரிக்கழிவு வழங்கப்படும்.
மேலும், 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான வருமான வரி மீதான அதிகபட்ச கூடுதல் வரியும் 37 சவீதத்திலிருந்து, 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், புதிய வருமான வரி விதிப்பில், அதிகபட்ச வருமான வரி, 42.7 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக குறையும்.
'மார்ஜினல் ரீலீப்'
மொத்தம் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி எதுவும் செலுத்த தேவையில்லை என்பது தான், இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்கள் கொண்டாடக்கூடிய அறிவிப்பு இது.
ஆனால், ஏழு லட்சத்து ஒரு ரூபாய் வருமானம் இருந்தாலும், 26 ஆயிரத்து, 104 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இந்த குறைபாடு, இரு சபைகளின் விவாதத்திற்கு பின், பார்லிமென்டில் பட்ஜெட் ஏற்றுக்கொள்வதற்கு முன் 'மார்ஜினல் ரீலீப்' என்ற முறை மூலம் நிவர்த்தி செய்யப்படும் என்று முழுமையாக நம்பலாம்.
புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு எல்.ஐ.சி., - பி.பி.எப்., மருத்துவக்காப்பீடு போன்ற சேமிப்புகளுக்கான 80சி, 80டி போன்ற வரிக்கழிவுகள், வீட்டுக்கடன் வட்டிக் கழிவு போன்ற வரிச்சலுகைகளைப் பயன் படுத்த முடியாது.
இனி, வருங்காலத்தில், புதிய வரி விதிப்பு திட்டம் தான் தொடர வாய்ப்புள்ளது. பழைய வரித்திட்டம் இல்லாமல் போகும். இதனால் அரசு, மக்களை சேமிப்புக் கலாசாரத்திலிருந்து செலவு கலாசாரத்திற்கு மாற்றுகிறது என்ற பார்வையும் வைக்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில், புதிய வரி விதிப்பு முறையில், வருமான வரி குறையும் என்பதால், மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். அந்தப் பணத்தை எப்படி செலவு செய்யலாம்; எப்படி சேமிக்கலாம்; எதில் முதலீடு செய்யலாம் என்பதை மக்களே முடிவு செய்யலாம்.
'அரசாங்கத்தின் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய தனிநபர்களை துாண்ட வேண்டிய அவசியம் இல்லை. முதலீடு குறித்து முடிவு எடுக்க மக்களுக்கு சுதந்திரமான வாய்ப்பு வழங்க வேண்டும்' என்றார்.
'டொமஸ்டிக் சேவிங்ஸ்'
மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வெளியான வருமான வரி விலக்கு மாற்றங்கள், நடுத்தர மக்களிடம் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.
வருமானவரி விலக்கு பெற பி.பி.எப்., - என்.எஸ்.சி., தபால் நிலைய டிபாசிட் போன்ற திட்டங்களில் பங்கு பெறுவதை சிறு சேமிப்பாக கணக்கில் கொள்ளலாம்.
இதுவே, நீண்ட கால முதலீடு என்ற வகையில், பங்குகள், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது, நிலம், கட்டடங்களில் முதலீடு செய்வது ஆகியவற்றை சொல்லலாம். இதற்கெல்லாம் வரிச் சலுகை இல்லை.
ஆனால், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது.
அதனால், அரசாங்கம் ஊக்குவிக்கும் சேமிப்புத் திட்டங்களை விட, வரிவிலக்கு எதிர்பார்க்காமல் நீண்ட கால முதலீடு திட்டங்களை மக்கள் நாடி வருகின்றனர். அதை சமீபத்திய புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.
'டொமஸ்டிக் சேவிங்ஸ்' எனப்படும் வழக்கமான சேமிப்பு முறைகளில், 2010 - 2011ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 36.09 சதவீதமாக இருந்த இந்த சேமிப்பு, 2022- - 23ல், 27 சதவீதமாக குறைந்துஉள்ளது.
அதே சமயம், பங்குச்சந்தைகள், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதை பொறுத்தவரை, பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்டு வர்த்தகம் செய்வதற்காக பயன்படும் 'டிமேட் அக்கவுன்ட், டிசம்பர் 2021ல் 8.39 கோடி ரூபாயாக இருந்தது.
முதலீடு செய்ய விருப்பம்
இந்த டிமேட் கணக்கு, ஜனவரி 2023ல், 11.01 கோடியாக அதிகரித்துஉள்ளது. குறுகிய காலத்தில், இதில் 30 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி இருப்பது தெரிகிறது.
இதிலிருந்து, சேமிப்பு பாதையில் இருந்து முதலீட்டு பாதையை நோக்கி மக்கள் பெருவாரியாக ஆர்வத்துடன் செல்வதை அறிய முடிகிறது.
இன்னொருபுறம் பார்த்தால், எஸ்.ஐ.பி. என்று சொல்லப்படும் 'சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'படி, பங்குச்சந்தை, மியுச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது மாதம் 13 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து வருகிறது.
சமீப காலமாக, ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த அக்டோபர் மாதம், 13 ஆயிரத்து 40 கோடி ரூபாயாக இருந்த எஸ்.ஐ.பி., கடந்த ஜனவரி மாதம் 13 ஆயிரத்து 856 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், 'டெட் பண்டு' என்று சொல்லக்கூடிய, நிலையான, நிரந்தர வருவாய் தரக்கூடிய, சேமிப்பு, டிபாசிட் திட்டங்களில் பணம் போடுவது குறைந்து கொண்டே செல்கிறது.
நம் நாட்டில் மாறி வரும் இந்த பொருளாதார வானிலை கற்பிக்கும் பாடம் என்னவென்றால், வரிக்கு பிறகு மக்கள் கையில் புழங்கும் பணத்தை, அரசாங்கம் பரிந்துரைக்கும் சேமிப்பு திட்டங்களில் போட்டு, வரி விலக்கு பெறுவதை விட, சுதந்திரமாக முடிவெடுத்து, 'ரிஸ்க்' சற்று இருந்தாலும் அதிக வருவாய் ஈட்டும் பங்குச்சந்தைகள், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள் என்பதை சொல்கிறது.
அது உங்கள் இஷ்டம்
அதை முன்னிட்டு தான், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய பட்ஜெட்டிலும், 'வருமான வரியை குறைத்து விட்டோம்.
கையில் இருக்கும் பணத்தை செலவழிப்பீர்களோ அல்லது சேமிப்பு, முதலீட்டில் போடுவீர்களோ அது உங்கள் இஷ்டம்' என்று, முடிவை மக்களிடமே மத்திய அரசு விட்டுவிட்டது என்றே கூறவேண்டும்.
வரிச்சுமை குறைக்க, தங்களுக்கு ஏதாவது அறிவிப்பு வராதா என்று நடுத்தர மக்கள் கடந்த பல வருடங்களாக எதிர்பார்த்து வந்தனர். 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தனர்.
தற்போதைய, உலக பொருளாதார சூழ்நிலையில், நேரடி வரி வருமானத்தை பெருமளவிற்கு இழப்பதற்கு, மத்திய அரசு தயாராக இல்லை. இருந்தபோதும், 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு விலக்கு அளித்திருப்பது ஆறுதல் அளிக்கும் நிவாரணமே.
மத்திய அரசு தந்திருக்கும் இந்த வரிவிலக்கு, நடுத்தர மக்களுக்கு ஆறுதலையும், நாடு முழுவதும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் பாரம்பரிய பழக்கமான, சேமிப்பு கலாசாரத்தை நீர்த்து போகச்செய்து, மேற்கத்திய நாடுகள் பின்பற்றும், நுகர்வு கலாசாரம் அல்லது செலவு கலாசாரத்துக்கு மக்கள் மாறி விடுவரோ என்று பலதரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
முடிவு நம்ம 'சாய்ஸ்'
நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத புதுமையான பட்ஜெட் என்றனர். சில தரப்பில், இது புரியாத பட்ஜெட் என்றனர். பலர், இது தேர்தலுக்கான பட்ஜெட் என்றனர்.
அவரவர் தளங்களில் பட்ஜெட் குறித்து யோசித்தாலும், ஒரு பொதுஜனமாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது, நம் உழைப்பின் மூலம் கிடைத்த வருவாயை, வரிக்காக நாம் துாக்கி கொடுக்க தேவையில்லை. உங்கள் உழைப்பின் வியர்வை, 'கரன்சி'யாக உங்கள் கையில் இருக்கும்.
அதை, செலவு செய்து தீர்க்கப்போகிறோமா அல்லது முதலீடு செய்து வருமானம் பெருக்கப்போகிறோமா அல்லது சிறுகச்சிறுக சேமித்து வைத்து வருங்காலத்திற்கு திட்டமிடப் போகிறோமா என்பது தான் நாம் எடுக்க வேண்டிய முடிவு.
இந்தியாவில் சேமிப்பு என்பது கலாசாரமாகி விட்ட ஒன்று. வரிச்சலுகை இருந்தாலும் இல்லாவிட்டாலும், சேமிக்கும் குணமும் தன்மையும் மாறி விடாது. சேமிப்பு, முதலீடு அற்ற, திட்டமிடப்படாத நுகர்வு, செலவு கலாசாரம், பேரிடர் காலங்களில் நம்மை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி விடும்.
வருமானத்திற்கேற்ற செலவு, வருங்காலத்திற்கான சேமிப்பு, நிதி திட்டமிடல் நமக்கு நிதானமான, நிம்மதியான வாழ்க்கையை தரும். முடிவு நம்ம விருப்பம்.
அமெரிக்காவில் வசிக்கும் நடுத்தர மக்கள், இரண்டு, மூன்று 'கிரெடிட் கார்டு' வைத்திருப்பர். அங்கே, பல பகுதிகளில், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சம்பளம் வழங்கப்படுகிறது. வருமானத்திற்கேற்ப வாழ நினைக்காமல், அத்தனைக்கும் ஆசைப்படுவர்.
செலவு செய்துவிட்டு, அந்த கடனை அடைக்கவும், அதற்கான வட்டியை கட்டவும், புதுப்புது கடன் வாங்குவர் அல்லது பணி பொறுப்புகளை சுமப்பர்.
நம் நாட்டில் இதற்கு முன் அப்படி இருந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளாக, நடுத்தர மக்களும், குறைந்த வருவாய் பிரிவினரும் கூட, கடன் அட்டைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
மாதத்தவணை முறையில் கல்யாணத்தைக் கூட நடத்தி விடலாம் என்ற நிலைக்கு வாழ்வியல் மாற்றங்கள் வந்து விட்ட பிறகு, ஆடம்பர மோகம் பெருகி, 'அகலக்கால் வைப்பது' என்ற ஆபத்தில் பலர் சிக்கிக் கொள்கின்றனர்!
- ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர்
இது உண்மையில் நல்ல முடிவு. உன் வாழ்க்கை உன் கையில்.