Load Image
Advertisement

உண்மையான அன்பு என்பது என்ன? ஒரு ஆழமான புரிதல்

உண்மையான அன்பின் அர்த்தம் குறித்து எப்போதும் வியப்படைகிறீர்களா? நிபந்தனையற்ற அன்பு என்பது இருக்கிறதா என்று அறிந்துகொள்ளவேண்டுமா? காலம் கடந்து நின்றாலும் இன்றைக்கும் பொருத்தமான ஒரு தலைப்பைப் பற்றி சத்குரு தனது ஆழ்ந்த புரிதலை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

காதலில் வீழ்வது

சத்குரு: காதலில் வீழ்வது என்ற பொருளில், “ஃபாலிங் இன் லவ்” என்ற ஆங்கிலப் பதம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் காதலில் எவரும் எழுவதும் இல்லை, உயர்வதும் இல்லை. நீங்கள் காதலில் வீழ்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதில் சிறிதளவேனும் மறைந்துபோக வேண்டும். உங்களின் ஒட்டுமொத்தமும் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் உங்களின் ஒரு பகுதியாவது அழியவேண்டும். அப்போதுதான் அங்கே ஒரு காதல் உறவு இருக்கிறது. மற்றொருவருக்காக, உங்கள் தன்மையின் ஒரு துளியையாவது அழித்துக்கொள்வதற்கு நீங்கள் விருப்பத்துடன் இருக்கிறீர்கள். உங்களைவிட வேறொருவர் மிக அதிகமாக முக்கியத்துவம் பெறுகிறார் என்பதே அதன் பொருள். துரதிருஷ்டவசமாக, “காதல்” என்று பெரும்பாலானவர்கள் கூறுவது எதுவோ, அது பரஸ்பர நன்மை திட்டமாகத்தான் இருக்கிறது.

ஒருநாள் சங்கரன்பிள்ளை பூங்காவுக்குச் சென்றார். அங்கே இருந்த ஒரு கல்மேடையில், அழகான பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள். அதே கல்மேடை மீது அவரும் சென்று அமர்ந்தார். சில நிமிடங்கள் கழித்து, சங்கரன்பிள்ளை அவளுக்குச் சற்று நெருக்கமாக நகர்ந்தார். அவள் விலகி நகர்ந்தாள். மீண்டும், சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, அவளுக்கு மேலும் நெருக்கமாக நகர்ந்தார். அவள் விலகினாள். அவர் மறுபடியும் சற்று பொறுத்திருந்து, மேலும் நெருக்கமாகச் சென்றார். இதற்குள் அவள் நகர்ந்து நகர்ந்து மேடையின் விளிம்புக்கே சென்றிருந்தாள். அவர் அவளைச் சென்றடைந்து, அவரது கைகளை அவள் மீது வைத்தார். அவள் அவரை உதறித் தள்ளினாள். சிறிது நேரம் அவர் அங்கேயே அமர்ந்திருந்து, பிறகு அவள் முன் மண்டியிட்டு, அங்கிருந்த மலர் ஒன்றைப் பறித்து, அவளிடம் கொடுத்து, “நான் உன்னைக் காதலிக்கிறேன். என் வாழ்வில் யாரையுமே நான் நேசித்திராத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்,” என்று கூறினார்.

அவள் உருகினாள். இயற்கையின் போக்கில் அவர்களுக்குள் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. மாலை நேரம் கடந்துகொண்டிருந்தது; சங்கரன்பிள்ளை எழுந்து,“நான் போகவேண்டியுள்ளது. எட்டு மணி ஆகிவிட்டது. என் மனைவி காத்திருப்பாள்,” என்றார்.

அவள், என்னது? நீங்கள் செல்கிறீர்களா? என்னை காதலிப்பதாக இப்போதுதானே கூறினீர்கள்!”

“ஆமாம், ஆனால் நேரமாகிவிட்டது, எனக்குப் போகவேண்டியுள்ளது.”

பொதுவாக, நமக்கு வசதியான, இலாபகரமான வரையறைக்குள் நாம் உறவுகளை உருவாக்கியுள்ளோம். மக்களுக்கு உடல்ரீதியான, உளவியல்ரீதியான, உணர்ச்சிரீதியான, பொருளாதாரரீதியான மற்றும் சமூகரீதியான தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளை நிறைவுசெய்துகொள்வதற்கு சிறந்த வழிகளுள் ஒன்று, 'நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறுவது. “காதல்” என்ற பெயரில் அழைக்கப்படும் இது, ஒரு மந்திரம் போலாகியுள்ளது: திறந்திடு சீஸேம். அதைச் சொல்வதன் மூலம் உங்களுக்கு வேண்டியதைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒருவிதத்தில் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதாகவே இருக்கின்றன. இதை நீங்கள் புரிந்துகொண்டால், அன்புடன் இருப்பதை உங்கள் இயல்பான தன்மையாகவே வளர்த்துகொள்வதற்கான ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், மக்கள் வசதி, சௌகரியம் மற்றும் நல்வாழ்வுக்காகஉருவாக்கியுள்ள உறவுகளை உண்மையாகவே அன்பின் உறவுகள் என்று நம்பிக்கொண்டு தங்களையே முட்டாளாக்கிக்கொண்டு இருக்கின்றனர். அந்த உறவுகளில் காதலின் அனுபவமே இல்லை என்று நான் கூறவில்லை, ஆனால் அது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கிறது. “நான் உன்னை நேசிக்கிறேன்' என்பது எவ்வளவுதான் சொல்லப்பட்டாலும் அது ஒரு பொருட்டில்லை, ஒரு சில எதிர்பார்ப்புகளும், தேவைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், விஷயங்கள் பிளவுபட்டுவிடும்.

நிபந்தனையில்லாமல் எப்படி நேசிப்பது
அன்பைப் பற்றி நீங்கள் பேசும்போது, அது நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். உண்மையில் நிபந்தனை அன்பு மற்றும் நிபந்தனையற்ற அன்பு என்ற ஒரு விஷயமே இல்லை. அது என்னவென்றால், அங்கே நிபந்தனைகளும் உண்டு மற்றும் காதலும் உண்டு. ஒரு நிபந்தனை இருக்கும் கணமே, அது வெறும்வியாபாரத்துக்குச் சமமானதுதான். அது ஒரு வசதியான வியாபாரமாக இருக்கலாம், அது ஒரு நல்ல ஏற்பாடாக இருக்கலாம் - வாழ்வில் பலரும் தலைசிறந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கக்கூடும் - ஆனால் அது உங்களை நிறைவு செய்யாது, அது உங்களை வேறொரு பரிமாணத்துக்கு நகர்த்திச் செல்லாது. அது வெறும் வசதி மட்டுமே.

“நேசம்” என்று நீங்கள் கூறும்போது, அது சௌகரியமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான நேரங்களில், அது வசதியாக இருப்பதில்லை. அது வாழ்க்கை முழுவதுக்குமானது. நேசிப்பது மகத்தான ஒரு விஷயம் அல்ல, ஏனென்றால் அது உங்களை முழுமையாக விழுங்குகிறது. நீங்கள் காதலில் இருக்கவேண்டும் என்றால், நீங்கள் என்பது அங்கே இருக்கக்கூடாது. ஒரு நபர் என்ற நிலையில் நீங்கள் வீழ்வதற்கு விருப்பத்துடன் இருக்கவேண்டும், அப்போதுதான் அது நிகழமுடியும். அன்பின் செயல்முறையில் உங்களது ஆளுமையானது வலிமையாக வைக்கப்பட்டிருந்தால், அது ஒரு வசதியான சூழலாக மட்டும்தான் இருக்கிறது, அவ்வளவுதான். ஒரு வியாபாரம் என்பது என்ன மற்றும் உண்மையான ஒரு காதல் உறவு என்ன என்பதை நாம் அடையாளம் காண்பது அவசியம். ஒரு காதல் உறவு எந்தக் குறிப்பிட்ட நபருடனும் இருக்கவேண்டியதில்லை. குறிப்பாக எவருடனும் இல்லாமல், ஆனால் வாழ்வுடன் நீங்கள் மகத்தான ஒரு காதல் உறவு கொள்ளமுடியும்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் என்ன செய்யவில்லை என்பதெல்லாம், உங்களைச் சுற்றியுள்ள சந்தர்ப்பசூழலைச் சார்ந்திருக்கிறது. நமது செயல்பாடுகள் வெளிச்சூழலின் தேவைக்கேற்றவை. உங்களுக்கு வெளியில் நீங்கள் செய்வது எப்போதும் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால் அன்பு என்பது ஒரு உள்தன்மை - உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது நிச்சயம் நிபந்தனையற்றதாக இருக்கமுடியும்.

நன்றிப்பெருக்கு
நீங்கள் என்ன தருகிறீர்கள் என்பதை விரல்விட்டு எண்ணாமல், ஆனால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தினால், நீங்கள் இயல்பாகவே நன்றிப்பெருக்கில் இருப்பீர்கள். “நான் எவ்வளவு செய்துள்ளேன்!” என்ற இந்த முட்டாள்தனத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் யாரிடமிருந்தும், எதையும் எதிர்பார்க்கவில்லை என்றால், நீங்கள் எளிதாக வாழ்வீர்கள். யாரோ ஒருவரிடமிருந்துநீங்கள் எதையாவது எதிர்பார்த்தால், அல்லது அவர்கள் உங்களை நேசிக்கிறார்களா, இல்லையா என்று உங்களையே நீங்கள் கேட்டால், அங்கேதான் இந்த பிரச்சனைகள் எல்லாம் எழுகின்றன. யாரிடமிருந்தும் நீங்கள் எதையும் எதிர்பார்க்காதபோது, அவர்கள் அதைச் செய்தால், அவர்களுக்கு அது அற்புதமாக இருக்கிறது. அவர்கள் செய்யாமல்போனால், என்ன பிரச்சனை இருக்கிறது?
உறவு என்பது ஒருபரிவர்த்தனை. அதை நன்றாக நடத்திக்கொள்வதற்கு, ஒருவிதமான திறமை தேவைப்படுகிறது. இல்லையென்றால், அது அசிங்கமாக மாறக்கூடும். யாரோ ஒருவருடன் ஒருநாள் அவ்வளவு அற்புதமாக இருக்கும் நிலையில், அதே நபருடன் வேறொரு நாள் எவ்வளவு அசிங்கமாக அது மாறக்கூடும் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள்,உறவு என்பது ஒரு பரிவர்த்தனை என்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அதற்கென்று குறிப்பிட்ட அடிப்படை விதிகளும், நிபந்தனைகளும் இருக்கின்றன. இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குள் நீங்கள் நின்றால் மட்டும்தான், உறவை நீங்கள் வெற்றிகரமாக நடத்திச் செல்வீர்கள். “எங்கள் அன்பு நிபந்தனையற்றது” என்பதைப் போன்ற கனவுலகக் கருத்துகள் உங்களுக்கு இருந்தால், என்றைக்காவது ஒருநாள், அது உடைந்துபோகும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement