Load Image
Advertisement

துருக்கியில் நிகழ்ந்த பூகம்பம்: மற்ற நாடுகளுக்கு பாடமாகும்

மேற்கு ஆசிய நாடான துருக்கியில், இம்மாதம், 6ம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த பூகம்பம், அந்நாட்டை மட்டுமின்றி, அருகேயுள்ள சிரியா நாட்டையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. ரிக்டர் அளவில், 7.8 என பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தாலும், அதன்பின் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிர்வுகளாலும், துருக்கியிலும், சிரியாவிலும் ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுந்ததுடன், பல ஆயிரம் வீடுகளும் இடிந்து நாசமாகியுள்ளன.
இதுவரை, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்வதால், பலி எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என்பது, கவலை தருவதாக உள்ளது. வீடு மற்றும் உடைமைகளை இழந்த, இரு நாடுகளையும் சேர்ந்த ஏராளமான மக்கள், கடும் குளிரில் அவதிப்படும் நிலைமையும் தொடர்கிறது.

உருக்குலைந்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு பல்வேறு நாடுகளும் நேசக்கரம் நீட்டியுள்ளன. 'ஆப்பரேஷன் தோஸ்த்' என்ற பெயரில், இந்தியாவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மீட்புப் படையினரை அனுப்பியுள்ளதோடு, மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளது.
பூகம்பம் எப்போது நிகழும்; எந்த பகுதிகளில் நிகழும்; எப்படிப்பட்ட சேதத்தை ஏற்படுத்தும் என்பதை கணிப்பது சாத்தியமில்லாதது. நம் நாட்டிலும் அவ்வப்போது பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. 2001ம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பம், 20 ஆயிரம் பேரை பலி வாங்கியது. ஜப்பான் போன்ற நாடுகள், அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படுபவை என்பதால், அங்கெல்லாம் பூகம்பத்தை தாங்கும் வகையிலான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதனால், பூகம்பம் மற்றும் நில அதிர்வுகள் நிகழும் போது, பெரும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியா உட்பட பல நாடுகளில், எப்போதாவது தான் பூகம்பம் நிகழ்கின்றன என்பதால், அதன் பாதிப்புகளை பற்றி முன்னரே கவலைப்படுவதில்லை.
இருந்தாலும், துருக்கியில் நிகழ்ந்த பூகம்பம், உலக நாடுகள் பலவற்றையும் சிந்திக்க வைத்துள்ளது. பூகம்பம் தாக்கினால் அதிலிருந்து தப்பிக்க எப்படிப்பட்ட இடர் தவிர்ப்பு உத்திகளை பின்பற்ற வேண்டும்; பாதிப்புகளை குறைக்க எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.பூகம்பம் காரணமாக, பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் நகரும் போது, உயரமாக கட்டப்பட்ட கட்டடங்களும் நகரும் வகையில், அவற்றின் கட்டுமானங்களும், வடிவமைப்புகளும் மாற்றப்பட வேண்டும். அப்படி செய்தால், ஆயிரக்கணக்கில் உயிர்கள் பலியாவது தவிர்க்கப்படும். ஆனால், பூகம்ப பாதிப்புகளை தாங்கும் வகையில் கட்டடங்களை கட்டுவதற்கு கடுமையான செலவுகள் ஏற்படலாம்.
இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி, ஒவ்வொரு நாட்டு அரசும், இந்த விஷயத்தில் குறிப்பிட்ட அளவுக்கு உதவ முன்வர வேண்டும். ஜப்பான் நாட்டில், சமீபத்திய ஆண்டுகளில் நிலநடுக்கங்கள், பூகம்பங்கள் நிகழ்ந்தாலும், அதனால், வானளாவிய கட்டடங்கள் பாதிக்கப்படாத வகையில், அவை கட்டப்பட்டு வருகின்றன. அதற்கேற்ற வகையில், கட்டுமான விஷயங்களில், அந்நாட்டு அரசு அடிக்கடி மாற்றம் செய்து வருகிறது. கட்டட குறியீடுகளை தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறது.
பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும் போது, ரயில்கள் தானாகவே நின்று விடும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பெரிய கட்டடங்களில் உள்ள, 'லிப்ட்'கள் தானாகவே மூடிக் கொள்வது, எரிவாயு, மின்சாரம் அணைக்கப்படுவது, குடிநீர் நிறுத்தப்படுவது போன்றவை நிகழும்.அத்துடன், நிலநடுக்கத்தை சமாளிக்கும் வகையில், பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை மற்ற உலக நாடுகளும் பின்பற்ற முனைந்தால், உயிர்பலிகள் நிகழ்வதை தவிர்க்கலாம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement