துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய துயரம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இதுவரை 20 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் பல ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
அந்த நாடுகளில் இதுவரை இல்லாத நிலநடுக்கம் இது
அவர்களின் அழுகுரல் உலகெங்கும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
நிலநடுக்கத்தில் சிக்கிய தன் சிறிய சகோதரனை காக்க பதினெட்டு மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியின் புகைப்படம்தான் தற்போது உலக நாடுகளை உலுக்கியெடுத்து வருகிறது.குளிர் உடம்பை நடுங்கவைக்கும், கட்டிடத்தையுமா நடுங்கவைக்கும்? என்று நடுங்கும் கட்டிடத்தை பீதியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பல அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போல மடமடவென சரிந்துவிழுந்தது.
உயிர்தப்பினால் போதும் என்று கட்டிடத்தைவிட்டு வெளியேறி தப்பியவர்களைவிட கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு உயிர்விட்டவர்களே அதிகம்
சிரியாவின் ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து கிளம்பிவந்த விசும்பல் சத்தம் யாரோ உயிருடன் உள்ளே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை தந்தது.மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளை கவனமாக அகற்றிவிட்டு பார்த்தபோது பேராதிர்ச்சி காத்திருந்தது.சரிந்துவிழுந்த கட்டிடத்தின் இடிபாட்டில் பத்துவயது பெண்ணும் ஐந்து வயது பையனும் சிக்கியிருந்தனர்.அந்த சிறுவனின் தலையை கோதியபடி அவன் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறியபடி இருந்தாள் ஒரு சிறுமி.
நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 17 மணி நேரத்திற்கு பின்னான காட்சி அது என்பதால் அந்த குழந்தைகள் இருவரும் பசி பட்டினி வேதனையுடன் 17 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்பது உறுதியானது.
இடிபாடுகளை மிக்ககவனமாக அகற்றினர் அந்த நிலையிலும் ‛என் தம்பியை முதலில் காப்பாற்றுங்கள் உங்களுக்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று அந்தச்சிறுமி இடிபாடுகளை அகற்றியவர்களிடம் கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டிருந்தாள்.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவருமே பத்திரமாக காப்பாற்றப்பட்டனர் சிறிய காயங்களுடனும் பெரிய மனஅழுத்தங்களுடனும் மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சிறுமியின் பெயர் மரியம் என்பதும் அவளது தம்பியின் பெயர் இலாப் என்பதும் பின்னர் தெரியவந்தது, அவர்கள் உயிர்தப்பிய சந்தோஷத்தை அனுபவிக்க அவர்களால் முடியவில்லை காரணம் அவர்கள் எந்த இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார்களோ அதே இடிபாடுகளில் சிக்கி அவர்களின் பெற்றோர்கள் பலியாகியிருந்தனர்.
இது போன்ற அவலம் ஒவ்வொரு கட்டிடத்தின் உள்ளும் வெளியும் இன்னமும் இருக்கிறது
அவர்களது துயரம் விரைவில் துடைக்கப்படவேண்டும் இதுதான் நம் பிரார்த்தனை
-எல்.முருகராஜ்
நெஞ்சை பதர வைக்கும் சம்பவம் .அந்த நாடும் ஸிரியாவும் விரைவில் சாதாரண வாழ்வுக்கு திரும்ப வேண்டும்