Load Image
Advertisement

லஞ்ச மாசு முதல்ல ஒழிங்க ;மா.சு., டாக்டர்களிடம் பறிக்கிறாங்க காசு

பாரதியார் பல்கலைக்குச் செல்வதற்காக டூ வீலரில் சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர். வடகோவை சிந்தாமணி ரவுண்டானாவில், குறுக்கும், நெடுக்குமாக வந்த வண்டிகளைக் கடந்து கொண்டிருந்த போது, பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா பேச்சை ஆரம்பித்தாள்...

''மித்து! லாலி ரோடு ஜங்ஷன், புரூக்பீல்ட்ஸ் ரெண்டு இடத்துலயும் சிக்னலை எடுத்துட்டு, போலீசும், ஹைவேஸ் ஆபீசர்களும் சேர்ந்து பண்ணுன மாற்றங்கள் ரொம்பவே நல்லாத்தான் இருக்கு. ஆனா, இந்த சிந்தாமணி சந்திப்புலதான் ஏகப்பட்ட குளறுபடியா இருக்கு. அதுலயும் புரூக்பீல்ட்ஸ்ல இருந்து வர்ற வண்டிங்க, இந்த இடத்தைக் கடக்குறதுக்கு பெரும்பாடு பட வேண்டியிருக்குல்ல!''

சித்ரா சொன்னதைத் தலையாட்டி ஆமோதித்த மித்ரா, அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...

''ஆமாக்கா! இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் மாத்தி யோசிக்கணும். அதேபோல, கவுலி பிரவுன் ரோட்டுல இருந்து போற வண்டிகளை, லாலி ரோடு சந்திப்புக்கு நேரா அனுப்பாம வேற ரூட்ல திருப்பி அனுப்புறாங்களே. அந்த ரோட்டுல கார்ப்பரேஷன் போட்ருக்கிற ஒவ்வொரு வேகத்தடையும் ஏகப்பட்ட கார்களை பதம் பார்த்துட்டு இருக்கு. அதோட உயரத்தையும் குறைக்கணும்!''

மித்ரா முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சித்ரா...

''டிராபிக் டி.சி., பண்ற மாற்றங்களெல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனா ஆத்துப்பாலம் மாதிரி ஏரியாவுல, முன் கூட்டியே பிளான் பண்ணாம, டிராபிக்கைத் திருப்பி, டிரையல் பாக்குறதெல்லாம் தேவையில்லாத வேலை. அன்னிக்குக் காலையில, சுந்தராபுரத்துல இருந்து ஆத்துப்பாலத்தை கிராஸ் பண்றதுக்கே ஒன்றரை மணி நேரமாயிருச்சு!''

''அதை விடுங்கக்கா...மத்த ஊர்கள்ல போலீஸ்காரங்க ஆயிரம், லட்சம்னு மாமூல் வாங்குறாங்க. நம்ம சிட்டி போலீஸ்காரங்க சில பேரு, 50 ரூபாயையும் புடுங்கி மானத்தை வாங்கிருக்காங்க.போன வாரம் காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்ட்ல, பஸ்சுக்காக காத்திருந்த காலேஜ் பசங்ககிட்ட போலீஸ்காரங்க 'ரேண்டமா' கஞ்சா சோதனை பண்ணிருக்காங்க...போன், பர்ஸ் எல்லாத்தையும் செக் பண்றோம்ங்கிற பேர்ல, பஸ்சுக்கு வச்சிருந்த 50 ரூபாயைக் கூட லவட்டிட்டாங்களாம்.. அந்த பையன் பிரண்ட்ஸ்கள்ட்ட காசு வாங்கி, பஸ்ல வீடு போயிருக்கான்!

'' இதை செக் பண்ற போலீஸ், டவுன்பஸ்கள்ல அப்பாவி ஜனங்கள்ட்ட நகை, பணம் திருடுற ஆளுகளை ஏன் பிடிக்க மாட்டேங்கிறாங்கன்னு தெரியலை. போன ஒன்றரை மாசத்துல மட்டும், பஸ்கள்ல 20க்கு மேல திருட்டு கேசு பதிவாயிருக்கு. அஞ்சு பேரைப் பிடிச்சு, 40 சவரன் மீட்ருக்காங்க. ஆனா சிட்டிக்குள்ள இன்னும் ரெண்டு திருட்டு கோஷ்டி சுத்துறதா பேசிக்கிறாங்க!''

''நம்ம மேற்கு மண்டல ஐ.ஜி., பத்தி ஒரு இன்ட்ரஸ்டிங் ஆன மேட்டர்க்கா...திருக் குறள்ல அவருக்கு அறிவும் ஆர்வமும் அதிகம். எந்த மெசேஜ் போட்டாலும் பொருத்தமா ஒரு குறளை தேர்வு பண்ணி, அதுக்கு தமிழ், இங்கிலீஷ் விளக்கமும் போடுவாரு. அவருக்கு 'பேஸ்புக்'ல பெரிய ரசிகர் வட்டாரமே உருவாகியிருக்கு. 16 ஆயிரம் பேர், 'பாலோ' பண்றாங்க. அவர் கலந்துக்கிற எந்த நிகழ்ச்சின்னாலும் சுடச்சுட போட்டோ போட்ருவாரு அந்த அட்மின்!''

''அப்பிடியே பேரூர் போலீஸ்ஸ்டேஷனுக்கு, 'கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க்கு அணி'ன்னு நேர்மையப் பத்தி ஒரு குறள் போடச் சொல்லு...அங்க இருக்குற இன்ஸ்மேடம் பேருக்கேத்தது மாதிரி, செம்ம வசூலாம். இடப்பஞ்சாயத்து, வீடு காலி பண்றது, நம்பர் லாட்டரின்னு எல்லாத்துலயும் சொர்ணாக்கா ஸ்டைல்ல கலெக்சன் தட்டி எடுக்குறாராம்!''

''அதை விட முக்கியமா அவர் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்குக்கா...நம்ம ஊர்ல சில காலேஜ்கள்ல முக்கியமான பொறுப்புல இருக்குற சில பேரு, நீட் தேர்வுல தோத்துப்போற பணக்காரப் பசங்களைப் பிடிச்சு, வெளிநாட்டுக்கு அனுப்புறோம்கிற பேருல, லட்சக்கணக்கா பணம் வாங்கி மோசடி பண்ணிட்டு இருக்காங்க. இவுங்களுக்கு சிட்டி, ரூரல்ல இருக்குற சில போலீஸ் ஆபீசர்ஸ் சப்போர்ட் பண்ணி காசு பண்றாங்க!''

''அப்பிடின்னா இதை கமிஷனர், ஐ.ஜி., ரெண்டு பேருமே கவனிக்கனும்...வடவள்ளி ஸ்டேஷனை சிட்டிக்குள்ள சேர்க்கவும் ரெண்டு பேரும் சேர்ந்து முயற்சி எடுக்கணும்...ஏன்னா இந்த வருஷம் தைப்பூசம் நாலாம் தேதியா, அஞ்சாம் தேதியான்னு ஒரு குழப்பமாயிருச்சு. நாலாம் தேதி தைப்பூசத் தேருக்கு கூட்டமே இல்லை; அன்னிக்கு 575 போலீஸ் போட்ருந்தாங்க. ஆனா மறுநாள்தான் கூட்டமே அதிகமாயிருந்துச்சு!''

''ஆமாக்கா...அஞ்சாம் தேதி மட்டும் ஆறு லட்சம் பேர் வந்ததாச் சொல்றாங்க, பயங்கர டிராபிக் பிரச்னையா இருந்துச்சு...போலீசையே பார்க்க முடியலையே!''

''அதேதான்...அன்னிக்கு வெறும் 100 போலீஸ் மட்டும் பந்தோபஸ்துல இருந்தாங்க. எங்களுக்கு பாஸ் தரலைன்னு ஏகப்பட்ட வி.ஐ.பி.,ங்க வாக்குவாதம் பண்ற நிலைமையாயிருச்சு. ரூரல்ல வேற புகாரும் நிறைய வருது...காரமடை, மேட்டுப்பாளையத்துல கேரளா மன்னார்காடு கஞ்சா தாராளமா புழங்குதாம். சூலுார், கருமத்தம்பட்டி ஸ்டேஷன்கள்ல புரோக்கர்கள் அதிகமாயிட்டாங்களாம்!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, தி.மு.க.,கொடி கட்டிய கார், படுவேகத்தில் கடந்து சென்றதைப் பார்த்ததும், அவளே வேறு 'டாபிக்'கிற்குச் சென்றாள்...

'பொறுப்பு' மினிஸ்டர் கிட்ட அரசு விழா பிரஸ்மீட்ல அரசியல் கேள்வி கேட்டாலும், 'இங்க அரசியல்பேசக்கூடாது'ன்னு சொல்லிட்டே அழகா அரசியல் பேசுவாரு. ஆனா இப்போ ஈரோட்டைப் பத்திக் கேட்டாலே எஸ்கேப் ஆயிடுறாரு!''

''அக்கா! அவர் மேல இன்டஸ்ட்ரிக்காரங்க எல்லாம் கடும் அதிருப்தியில இருக்காங்க. இங்க பொறுப்புக்கு வந்ததும் சி.எம்.மைக் கூப்பிட்டு வந்து மீட்டிங் போட்டு அசத்துனாரு. அப்போ சொன்ன எதையுமே செய்யாம, சொல்லாத சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வுன்னு போட்டுத் தாக்கீட்டாங்களேன்னு கொந்தளிக்கிறாங்க!''

''ஓ...அதனாலதான் 'பில்டு இன்டெக்' கண்காட்சிக்கு வர்றேன்னு சொன்ன ரெண்டு மினிஸ்டர்களும் வரலையா...அவுங்க வரலைன்னா பரவாயில்லை... இந்த மேயரும் கூட வரலை...கடைசியில கார்ப்பரேஷன் கமிஷனர்தான் வந்து திறந்து வச்சிட்டுப் போயிருக்காரு. நிஜமாவே பில்டிங் இன்டஸ்ட்ரிக்காரங்க ரொம்பவே அப்செட் ஆயிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்!''

''கார்ப்பரேஷன்னதும் ஞாபகம் வந்துச்சு...அங்க இருந்த பி.ஆர்.ஓ., பாரதி தாசனை வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சிருக்காங்க. புது பி.ஆர்.ஓ.,வும் வரலை...அதனால நியூஸ் கொடுக்க ஆளில்லாம, அ.தி.மு.க.,ஆட்சியில ராத்திரியோடு ராத்திரியா போஸ்ட்டிங் போட்ட 54 ஜூனியர் அசிஸ்டெண்ட்கள்ல ஒருத்தரை வச்சு பிரஸ் ரிலீஸ் போடுறாங்க...!''

மித்ரா முடிக்கும் முன் இடையில் புகுந்த சித்ரா, ''புது கலெக்டர் எப்பிடி மித்து?'' என்று கேட்க, அதற்குப் பதில் சொன்னாள் மித்ரா...

''புது கலெக்டரைப் பத்தி விசாரிச்சுசொல்றேன்க்கா...நம்ம பழைய கலெக்டர் சமீரன், போறதுக்கு முன்னாடி தன்னோட பேச்சுலயும், செயல்லயும் பலரையும் கலங்க வச்சுட்டாரு தெரியுமா... பிரஸ்சை கூப்பிட்டு நன்றி சொன்னது மட்டுமில்லாம, டிரான்ஸ்பர் வந்த பிறகு பேசுன நிகழ்ச்சிகள்ல 'நான் கோவையை ரொம்ப நேசிச்சேன்'ன்னு 'டச்சிங்'கா பேசி உருக வச்சிருக்காரு!''

''அது மட்டுமில்லை மித்து! புது கலெக்டர் ஞாயித்துக்கிழமை பொறுப்பேற்க வந்தப்போ, கலெக்ட்ரேட்ல வாசல்ல வந்து காத்திருந்து, அவரை வரவேற்றாராமே....இதெல்லாம் யார் பண்ணுவா...நிஜமாவே சமீரன் வேற லெவல்தான்!''

''உண்மைதான்...ஆனா அவருக்கும் இந்த விவசாயிகள் சங்கத்துக்கும் ஏதோ தேவையில்லாம முட்டிக்கிச்சு. கலெக்டர் மாறுற வரைக்கும் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்துக்கே வர மாட்டோம்னு விவசாயிகள் சங்கம் கந்தசாமி சொன்னாரு. இப்போ கலெக்டர் மாறிட்டதால, கூட்டத்துக்கு வருவாரு போலிருக்கு. எங்க தலைவர் சபதம் நிறைவேறிருச்சுன்னு சங்கத்துக்காரங்க சந்தோஷப்படுறாங்க!''

''கலெக்டர் மாறுனதுல அவுங்க சந்தோஷப்படுறாங்க...ஆனா மத்த மாவட்டத்துல எல்லாம் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை முடிச்சிட்டாங்க. இங்க கலெக்டர் மாறுனதால, இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. எக்ஸாம் வேற நெருங்கிருச்சு. இனி எப்போ தொடங்கி, எப்போ முடிக்கப் போறாங்கன்னு பசங்களும், பேரன்ட்ஸ்சும் பல்லைக் கடிக்கிறாங்க!''

''பல்லுன்னு ஞாபகப்படுத்துனதுக்கு தேங்க்ஸ்க்கா... நம்ம மாவட்டத்துல ஜி.எச்., கள்ல போஸ்ட்டிங் போடுறதுக்காக பல் டாக்டர்கள் பணி நியமன அறிவிப்பு வெளியிட்டாங்க. நிறையப்பேரு அதுக்கு 'அப்ளை' பண்ணுனாங்க. ஆனா என்னன்னு தெரியாம திடீர்னு அதை நிறுத்துனாங்க. இப்போ திடீர்னு எட்டுப் பேருக்கு 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' கொடுத்திருக்காங்க!''

''இடையில என்ன நடந்துச்சாம்?''

''என்ன நடந்திருக்கும்...ஒரு போஸ்ட்டிங்குக்கு எட்டு லட்ச ரூபாய் வரைக்கும் வாங்கிட்டுதான், போஸ்ட்டிங் போட்ருக்கிறதா ஒரு தகவல் ஓடுது. இதுல பாதிக்கப்பட்ட ஒருத்தர், ஆர்.டி.ஐ.,யில கேள்வி கேட்ருக்காரு. ஆனா ஹெல்த் டிபார்ட்மென்ட்ல தகவல் தராம இழுத்தடிக்கிறாங்களாம். மினிஸ்டர் மா.சு., உஷாரானா நல்லது. அநேகமா இவ்விவகாரம் கோர்ட்டுக்குப் போகும் போலிருக்கு!''

''மித்து! பாதயாத்திரை போறவுங்களைப் பார்த்ததும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு...பி.ஜே.பி., தலைவர் அண்ணாமலை, கோவையை மையமா வச்சு பாதயாத்திரை போறதுக்கு தயாராயிட்டு இருந்தாருல்ல...அதுக்குள்ள வானதி பழநிக்கு பாதயாத்திரை போயிட்டாங்க; பாலாஜி உத்தமராமசாமி மருதமலைக்குப் போயிட்டாரு. மாறிமாறி யாத்திரை போயி, அவரோட யாத்திரைக்கு முக்கியத்துவமே இல்லாமப் பண்ணீட்டாங்கன்னு கட்சிக்காரங்களே கண்ணைக் கசக்குறாங்க!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இளநீர்க்கடையைப் பார்த்ததும் வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement