தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள, காட்டு நாயக்கர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன்: எங்க அப்பாவும் யானை பாகன் தான். எனக்கு விவரம் தெரிந்தது முதல், யானை தான் உலகம். 10 வயதிலேயே அப்பாவுக்கு உதவியாக வேலைக்கு வந்தேன். 18 வயதில், 'அண்ணா' என்ற யானைக்கு காவலாக பணியில் சேர்ந்தேன்; அப்புறம், அதே யானைக்கு பாகனாகவும் மாறினேன்.
குட்டி யானைகள் என்றால், ரொம்ப இஷ்டம். தாயைப் பிரிந்த குட்டி யானையை, எப்படியாவது தாயுடன் சேர்க்கத் தான் போராடுவோம். குட்டியை கண்டுபிடிச்ச ஏரியாவை சுற்றிலும், பால் கொடுக்கிற பருவத்தில், பெண் யானை இருக்கான்னு தேடி அலைவோம்.
தாய் யானை கிட்ட குட்டியை கொண்டு போனால், குட்டி நம்ம கூடவே திரும்ப ஓடி வரும். அதைப் பார்த்த மற்ற யானைகள் நம்மை விரட்டும்; பெரும் போராட்டமாக இருக்கும். ஒரு வழியாக, குட்டி யானையை தாயுடன் சேர்த்து விட்டால், அதில் கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, மின்சாரம் பாய்ந்து இறந்து போன, ஒரு யானையோட குட்டி, தாயை பிரிஞ்சு தவிக்குதுன்னு என்னை கூட்டிட்டுப் போனாங்க.
ஊருக்குள்ள வந்த குட்டி யானையை நாய்கள் கடிச்சு குதறியதில், உடம்பு முழுக்க காயம். அந்த மூன்று மாத குட்டி யானை பிழைப்பதே கஷ்டம் என்று சொல்லி விட்டனர்.
அதனால் அங்கேயே, 10, 15 நாட்கள் தங்கி, குழந்தை மாதிரி கூடவே இருந்து பார்த்து, கொஞ்சம் சரியானதும் முதுமலைக்கு கொண்டு வந்தோம். குட்டி யானை பிழைக்காதுன்னு பராமரிக்க யாருமே முன்வரவில்லை.
சரி, நாமே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். ரகு என்று பெயர் சூட்டி, நானும், என் மனைவி பெள்ளியும், 24 மணி நேரமும் கவனிக்க ஆரம்பித்தோம்.
யானை குட்டி கத்தும் போதெல்லாம், பால் கொடுக்க வேண்டும். என்னையும், என் மனைவியையும், தாய், தகப்பனாகவே நினைத்து பிடிவாதம் பிடிக்கும்.
காயம் சரியாகி, புல் சாப்பிட ஆரம்பித்த பிறகு தான், எந்தத் தொந்தரவும் இல்லை. நாங்களும் குழந்தை மாதிரியே ரகுவை பார்த்துக் கொண்டோம்; அதுவும், மனுஷக் குழந்தை மாதிரி தான் நடந்துக்கும்.
பொம்மனின் மனைவி பெள்ளி: ரகுவை கூட்டிட்டு வரும் போது தான், முதல் முறையாக, யானை சம்பந்தமான வேலைக்கு போனேன். ஆரம்பத்துல தான் கொஞ்சம் பயம் இருந்தது; பாசத்தோட பழகுனா, ஆயிரம் மடங்கு பாசத்தை நம்ம மேல காட்டும். மடியில படுக்க வச்சு தான், குட்டி யானைக்கு பாலுாட்டி இருக்கோம்.
வயிற்றுப் போக்கு, வாந்தின்னு எந்தச் சங்கடமும் இல்லாம, கட்டுன சீலையில துடைச்சு சுத்தம் பண்ணுவேன். சுடுதண்ணி வச்சு தான் குளிப்பாட்டுவோம். எங்க மேல எப்போதும், குட்டிங்க பால் வாசம் தான் அடிக்கும்.
உண்மைதான். அதுவும் யானைகளை அதன் இயற்கையான இருப்பிடத்தில் (காட்டில்) பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம். எத்தனை கவலைகள் இருந்தாலும், யானைகளை பார்த்தல் மனம் குளிர்ந்துவிடும்.