Load Image
Advertisement

ஷாமனிசம் என்றால் என்ன?

ஷாமனிசத்தின் சில அம்சங்கள் பற்றியும், அதில் உள்ள பழக்கவழக்கங்கள் யோக விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் பெறாததன் காரணம் குறித்தும் சத்குரு விளக்குகிறார்.

அமெரிக்க பூர்வக்குடி கலாச்சாரங்களில் ஷாமனிசப் பாரம்பரியம்



சத்குரு: ஷாமனிசம் குறித்து ஒரு முழு பாரம்பரியமே, குறிப்பாக அமெரிக்க பூர்வக்குடி கலாச்சாரங்களில் இருக்கிறது. ஒரு அமெரிக்க பூர்வக்குடி ஷாமன் எவ்வாறு தன்னைத் தானே ஒரு கழுகாக மாற்றினார், அல்லது ஒரு ஈயாக, ஒரு ஓநாயாக, வேறு வடிவமாக மாற்றினார் என்பது குறித்து, இன்றும்கூட பெரும்பாலானவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவை வெறும் கதைகள் அல்ல. ஒருவர் தான் விரும்பும் உருவத்திற்கு தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் சாத்தியம் வெகுவாக இருக்கிறது. ஒருவர் வேறு உருவத்திற்கு மாறுவது என்பது நாம் கேள்விப்படாத ஒன்றல்ல. கிட்டத்தட்ட உலகின் எல்லா பகுதிகளிலும் இது இருக்கிறது.

ஒரு ஷாமன் ஒரு கழுகாகவோ, ஓநாயாகவோ மாறுவது குறித்து நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஏனெனில் இந்த இரு உருவங்களும் அவர்களின் வழக்கத்தில் உள்ளவை. இது குறித்து யோக கலாச்சரத்தில் அறியப்படாமல் இல்லை, ஆனால் இது ஒதுக்கிவைக்கப்பட்டது. ஏனெனில் இது ஆன்மிகம் அல்ல - அமானுஷ்யம். இங்கு, நமது அமானுஷ்ய விஞ்ஞானிகள் - அவர்களை நான் விஞ்ஞானிகள் என்றுதான் கூறுவேன், அவர்கள் அத்தகையவர்தான் - தங்களை ஒரு பறவையாகவோ, மிருகமாகவோ மாற்றிக்கொள்வதில்லை. ஏனெனில் அதில் அபாயம் உள்ளது. நீங்கள் மற்றொரு உருவம் கொள்ளும்போது, இப்போது இருக்கும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அது தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

ஷாமனிக் பழக்கவழக்கங்களில் உள்ள அபாயங்கள்



இதை விளக்கும்விதமாக, யோக கலாச்சாரத்தில் ஒரு பிரபலமான நிகழ்ச்சி உண்டு. தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு பெரும்ஞானி, சுந்தரநாதர். ஒருநாள் அவர் காட்டில், மூலன் என்ற இடையர், பாம்பு கடித்ததால் இறந்து கிடப்பத்தைக் கண்டார். மூலன் இறந்தபோது, அவரிடத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு, அன்போடு இருந்த பசுக்கள், அந்த இடத்தை விட்டு அகல மறுத்து, தங்கள் தாயை இழந்ததைப் போல கதறி அழுதன. இந்த சூழலைப் பார்த்த சுந்தரநாதர் மிகவும் நெகிழ்ந்து போனார்.

கருணையின் மிகுதியால், அந்த பசுக்களை இவ்வாறு சோகத்தில் விட்டுவிடக்கூடாது என்று நினைத்தார். எனவே அவர் ஒரு மரப்பொந்துக்குள் சென்று, அங்கு தன் உடலை விட்டுவிட்டு இடையரான மூலனின் பிணத்துக்குள் நுழைந்தார். இது பரகாய பிரவேசம் என்று அறியப்படுகிறது. மூலனின் உடலில் இருந்த சுந்தரநாதர் எழுந்து அமர்ந்தபோது, அவரைக் கண்ட பசுக்கள் மிக மகிழ்ச்சி கொண்டன. அவர் அந்த பசுக்களை வீட்டுக்கு ஓட்டிச்சென்றார்.

ஆனால், அவர் அந்த வீட்டை விட்டு விலகுவது கடினம் என்பதையும், சில சமூக பொறுப்புகள் இருப்பதால் மறுபடி காட்டுக்குச் செல்ல முடியாது என்பதையும் அறிந்திருக்கவில்லை. தன் கணவர் தன்மேல் சிறிதுகூட விருப்பம் கொள்ளாதது குறித்தும், வீட்டுச் சூழ்நிலைகளில் பங்குகொள்ளாமல் இருப்பது குறித்தும் அறிந்த மூலனின் மனைவி திகைத்துப் போனார். இதனால் அவர் காட்டுக்குத் திரும்புவது தாமதமானது. பின்னர் இரவில் அவர் அந்த காட்டை அடைந்தபோது தன் உடலை யாரோ தகனம் செய்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ வழிப்போக்கர்கள் மரப்பொந்தில் இருந்த பிணத்தைக் கண்டு, ஒரு பிணத்தைக் கண்டால் அதை தகுந்தமுறையில் தகனம் செய்யவேண்டும் என்ற அந்தப் பகுதியின் கலாச்சாரத்தின்படி, அந்தப் பிணத்தை தகனம் செய்துவிட்டிருந்தனர்.

இப்போது அவர் மூலனின் உடம்பில் சிக்கிக்கொண்டு விட்டார். திரும்பி கிராமத்திற்கு சென்ற அவர், மூலனின் வாழ்க்கையோடு எந்தவிதத்திலும் தன்னால் ஈடுபட முடியாது என்றும் அறிந்தார். ஆடு மாடுகள், மனைவி, சுற்றியிருக்கும் சமூகம் எதுவும் அவர் வாழ்வில் தேடி அடைய விரும்பும் விஷயங்களாக இல்லை. எனவே அவர் தன் கண்களை மூடி அமர்ந்தார். வருடத்தில் ஒரே ஒருநாள் மகாசிவராத்திரி அன்று மட்டும் தன் கண்களை அவர் திறப்பார். தன் கண்களை திறக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஞானத்தின் முத்து ஒன்றை வெளிப்படுத்துவார். அதுவே அவர் கண் மூடி அமர்ந்திருக்கும்போது அவரை பராமரித்த மக்களுக்கு அவர் அளிக்கும் பரிசு.

இந்தியாவின் தாந்த்ரீக விஞ்ஞானிகள்



இந்த அபாயம் இருக்கும் காரணத்தினால், யோக கலாச்சாரத்தில் உள்ள தாந்த்ரீக விஞ்ஞானிகள் மற்ற வகையான முறைகளை உருவாக்கினர். அவர்கள் தாங்களாக வேறு உருவங்களை எடுப்பதில்லை. மாறாக, அவர்கள் மற்ற உருவங்களைத் தேர்ந்தெடுத்து அவை ஒரு குறிப்பிட்ட வகையில் அவர்களுக்காக செயல்புரியுமாறு செய்தனர். பொதுவாக இதற்கு கோழிக் குஞ்சைதான் அவர்கள் பயன்படுத்தினர். அந்த கோழிக்குஞ்சு இளையதாக துடிப்போடு இருக்கவேண்டும். அந்த கோழிக்குஞ்சின் உயிரை விடுவித்து, உங்களுக்காக குறிப்பிட்ட செயல்களை செய்ய அந்த உயிரை அவர்கள் உபயோகிப்பர். கோழிக்குஞ்சின் உருவத்தை அவர்கள் எடுப்பதற்கு பதிலாக, அந்த கோழிக்குஞ்சை செயல்கள் புரிய வைப்பர்.

(உருவத்தை மாற்றி புரியும்) அதே காரியங்களை கையாள, (அதற்கு பதிலாக) அவர்கள் மிக அதிநவீன நுட்பமான வழிமுறைகளை உருவாக்கினர். தாந்த்ரீக விஞ்ஞானத்தில் பல அம்சங்கள் உள்ளன. நாம் சில குறிப்பிட்ட காரியங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென விரும்பினால், நம்மால் அதை செய்யமுடியும். ஆனால் அத்தகைய காரியங்களை இங்கு நாம் அனுமதிப்பதில்லை. ஏனெனில் அதில் எந்த பயனும் இல்லை. இதனால் நிகழக்கூடிய ஒரே விஷயம் என்னவெனில், நீங்கள் மேலும் அபாயகரமான அளவுக்கு அறியாமையில் தள்ளப்படுவீர்கள். உங்களால் உடல்களை மாற்றமுடியுமெனில், நீங்கள் வாழ்க்கை செயல்முறையில் இப்போது இருப்பதைவிட இன்னும் அதிகமாக சிக்கிக்கொள்வீர்கள். வெறுமனே அதன் சக்தியே பல வழிகளில் உங்களை அழித்துவிடும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement