சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சமீபத்தில் நடந்த விழாவில், 2021ம் ஆண்டுக்கான, 'தமிழ்ச் செம்மல்' விருதுபெற்ற பெரம்பலுாரைச் சேர்ந்த இளம் பேராசிரியை செ.வினோதினி:
வயதில் மூத்த அறிஞர்களுக்கு வழங்கப்படும் அரசு விருது, 30 வயதே நிரம்பிய, இளம் பெண்ணான எனக்கு வழங்கப்பட்டது. எனக்கு, கீழடி செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
அங்கு அகழ்வாராய்ச்சியில் கண் முன்னே எடுத்த சிறிய பானை ஒன்றில் உயிரெழுத்தான 'அ' இருந்ததைப் பார்த்தபோது மெய்சிலிர்த்தது.
சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர், 'உலகில் எவருமே தன் தாய்மொழியை விட்டுத் தரமாட்டர். ஆனால், நாம் தான் தொன்மை வாய்ந்த நம் தமிழைப் புரிந்து பேசாமல், இன்னும் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறோம்' என்று சொன்னது என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது.
அதன் பின், நம் தமிழில் உள்ள இலக்கியங்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி, மொழிபெயர்ப்பு குறித்த தேடல்களில் இறங்கினேன்.
தமிழைக் கற்றுக் கொள்ள பல வாய்ப்புகளை தேடி நாம் சென்றதைப் போல தானே, மற்ற மாணவமணிகளும் இருப்பர்...
அவர்களுக்கு நம்மால் முடிந்த, தமிழ் குறித்த பயிற்சிகளை தந்தால் என்ன என்று யோசித்து, பல பள்ளிகள், கல்லுாரிகளுக்குச் சென்று, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி, அவர்களுக்கு என் சொந்த செலவில் பரிசுகளும், சான்றிதழ்களும் அளித்து மகிழ்கிறேன்.
அரசின், 'இளந்தமிழர்' இலக்கியப் பட்டறையில் இணைந்து, தற்போது பெரம்பலுார் மாவட்டத்தின் பொறுப்பாளராக இயங்குகிறேன். தமிழை வளர்ப்பதற்காகவே, 'அகழ்' என்ற அமைப்பைத் துவக்கினேன். அதில் பல இளைஞர்கள் இணைந்தனர்.
மற்றொரு நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து, திருக்குறளின் அதிகாரங்களில் உள்ள குறள்களுக்கு தகுந்த கதைகளை, 133 எழுத்தாளர்களை இணைத்து, 133 நிமிடத்தில் ஒரே நேரத்தில் கையால் எழுதி, உலக சாதனையாக நிகழ்த்தலாம் என்று முடிவு செய்தோம்.
அது பற்றிய அறிவிப்பை வெளியிட்டதும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. புதுச்சேரியில் இருந்து வந்திருந்த அதன் நிர்வாகிகள், கொரோனா காலத்திலும் தளராத எங்கள் முயற்சியைப் பாராட்டி, நேரில் வந்து சான்றிதழ் அளித்து பெருமைப்படுத்தினர்.
'தமிழுக்காக நீ நிறைய நிகழ்ச்சிகள் செய்கிறாய். எனவே, அரசின் தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாமே...' என்று நட்பு வட்டத்தினர் ஊக்குவித்ததால் விண்ணப்பித்தேன்.
நான் முன்னின்று செய்த, திருக்குறள் சாதனை, அரசின் கவனத்துக்கு சென்றதால், அந்த விருதுக்கு நான் தேர்வானது எனக்கு கிடைத்த மாபெரும் பேறு!
அம்மா ஒரு சில தமிழ் தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் தமிழ் பாடம் சொல்லித் தரவேண்டும் என்பது என் கோரிக்கை.அவர்கள் தமிழை மெல்ல சாகடிக்கிறார்கள். செய்தி வாசிப்பது காது கொடுத்து கேட்க முடியாது.