Load Image
Advertisement

மக்கள் வரிப் பணத்தை சூறையாட ஏன் இப்படி துடிக்கிறீர்கள்?: சிந்தனைக்களம்

'எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரம், மக்களின் நேரடி குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே எங்களுக்கும் மாத சம்பளம் வழங்க வேண்டும். தற்போது எங்களுக்கு கூலியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது' என்று சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

அந்த கோரிக்கையை மாநில அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வேறு வைத்திருக்கிறார்களாம்.இந்த கட்டுரை வெளியாவதற்கு முன்னரே, சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சம்பளம் என்றால் என்ன, பென்ஷன் என்றால் என்ன என்பது குறித்து தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, பிரச்னையின் பரிமாணத்தையும், சாதக-பாதக அம்சங்களையும் அலசி ஆராய முடியும்.
நிரந்தர வேலை இல்லாத தொழிலாளர்களுக்கு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வழங்கப்படும் ஊதியத்துக்குப் பெயர், கூலி. அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஊதியத்துக்குப் பெயர், சம்பளம். இந்த சம்பளத்தில், அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி போன்றவையும் அடங்கும்.
இப்படி மாதச் சம்பளம் வாங்கி பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின், அவர்கள் குடும்பம் நிர்கதியாக, நிராதரவாக நிற்க கூடாது என்ற கோணத்தில், அவர்கள் கடைசியாக வாங்கிய அடிப்படை சம்பளத்தில் ஐம்பது சதவீதமும், அதற்கு பஞ்சப்படியும் சேர்த்து கொடுக்கப்படுவதற்கு பெயர் தான், பென்ஷன். இந்த பென்ஷன் தொகை, மத்திய/ மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இப்படி பென்ஷன் வழங்குவதற்கும், சில விதிமுறைகள் உண்டு. ஒரு அலுவலர், அரசு பணியில் சேர்ந்து இருபது ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்போது தான் அவர், பென்ஷன் வாங்க தகுதியுடையவர் ஆகிறார். மேலும் அவர், 33 ஆண்டுகளும் அதற்கு மேலும் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றால் தான், முழு பென்ஷன் பெற தகுதியுடையவர் ஆகிறார்.
இருபது ஆண்டுகள் மட்டும் பணிபுரிந்து நிறைவு பெறுபவருக்கு, அதற்குரிய குறைந்தபட்ச பென்ஷன் தொகை தான் வழங்கப்படும். 'கால் காசு ஆனாலும் கவர்ன்மென்ட் உத்தியோகம் பார்க்கணும்' என்ற சொலவடையே, இந்த பென்ஷன் தொகையை முன் நிறுத்தித் தான் உருவானது.
தவிர, அந்த அரசு அலுவலர் பணிக்காலத்தில், 'லாஸ் ஆப் பே, பிரேக் இன் சர்வீஸ், டிசிப்ளினரி புரொசீடிங்ஸ் பெண்டிங்' அல்லது முடிவுடையாமல் இருக்கக் கூடாது. ஏதேனும் ஒன்று நிலுவையில் இருந்தாலும், பென்ஷன் பெறுவது சிக்கல். இந்த மத்திய/மாநில அரசு அலுவலர்களுக்கு, ஆண்டு தோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு தவிர, நாட்டில் அவ்வப்போது நிலவும் பொருளாதார சூழ் நிலைகளுக்கேற்ப, ஊதிய கமிஷன் என்ற ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதும் ஒரு விதி.
ஆனால், நடைமுறையில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அந்த ஊதிய கமிஷன் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த ஊதிய கமிஷனுக்கு ஓய்வு பெற்ற ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைவராக இருப்பார். அவர் இரண்டு ஆண்டுகளுக்குள் தன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவர் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை எடுத்து கொள்வார்.

பணி நிறைவு பெற்று, பென்ஷன் பெறும் அரசு அலுவலர் இறந்து விட்டால், அவரது மனைவிக்கு அவர் மரணமடையும் வரை குடும்ப பென்ஷன் உண்டு. இப்போது மக்கள் பிரதிநிதிகள் விவகாரத்துக்கு வருவோம். கவுன்சிலர்கள் முதல் எம்.பி.,க்கள் வரை மக்களுக்கு சேவை செய்கிறோம். 'சேவை செய்வோம்' என்ற 'கான்செப்டில்' தான் பதவிக்கு வருகின்றனர்.
இவர்கள் சேவை என்ற 'கான்செப்டு'க்கு சம்பளமும், பென்ஷனும் கேட்டு, அந்த சேவையையே கேலிக்குள்ளாக்கி, களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். முன்னொரு காலத்தில் காமராஜர், சத்தியமூர்த்தி, கக்கன், சாஸ்திரி, தேசாய் போன்ற சாமானியர்கள் மக்களுக்கு சேவை செய்ய பொறுப்புக்கு வந்தனர்; சேவையும் செய்தனர். அதற்காக அவர்கள் மாத சம்பளமோ, பஞ்சப்படி போன்றவையோ, பெற்றதாகவும் தகவல் இல்லை.
இன்றைக்கு காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரையுள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை பதவி வகிப்பவர்களில் யாரும், சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் கிடையாது. அனைவருமே கோடிகளில் உழல்பவர்கள்; செல்வச் செழிப்பில் மிதப்பவர்கள். இவர்கள் சம்பளம் என்று பெறுவதும், பென்ஷன் என்று கேட்பதும், அந்த இரண்டையும் ஏளனம் செய்வது போலுள்ளது.
மத்திய/மாநில அரசு அலுவலர்களின் ஊதிய நிர்ணயம் செய்ய, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஊதியக்குழு அமைத்து, அதன் பரிந்துரையின்படியே, ஊதியங்கள் நிர்ணயிக்கப்படும் என்று பார்த்தோம். ஆனால், இந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய ஊதியத்தை தாங்களே ஒரு தீர்மானம் போட்டு நிறைவேற்றி, உயர்த்தி கொண்டு விடுவர். அதை யாரும் தட்டிக் கேட்கவும் முடியாது; தட்டி பறிக்கவும் முடியாது.
இவர்கள் பெறும் சம்பளமே, தண்டச் சம்பளம் என்று இருக்கும் போது, பற்றாக்குறைக்கு தற்போது, பென்ஷன் வேறு கேட்கின்றனர். எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களுக்கு தற்போது பென்ஷன் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்; எதற்கு என்று தெரியவில்லை. கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு அரசு அலுவலர், முழு பென்ஷன் பெற வேண்டுமென்றால், 33 ஆண்டுகளும் அதற்கு மேலும் பணிபுரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன் பெறுவதற்கே, இருபது ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். ஆனால், ஒரு எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., வெறும் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தால் போதும்; அவருக்கு பென்ஷன். அது மட்டுமல்ல; அவர் ஒவ்வொரு முறை பதவி வகித்து, முடிக்கும் போதும் பென்ஷன்.
அதாவது, சமூக சேவை செய்கிறேன் என்று பதவிக்கு வந்த ஒரு மக்கள் பிரதிநிதி, இரண்டு முறை பதவி வகித்தால் இரண்டு பென்ஷன். நான்கு முறை பதவி வகித்தால் நான்கு பென்ஷன். வேடிக்கையாக இல்லை?. ஒரு முறை பதவியில் அமர்ந்தாலே ஒன்பது தலைமுறைகளுக்கு சொத்து குவிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, பென்ஷன் எதற்கு?
அரசு அலுவலர்களுக்கு பென்ஷன் தருவதை நிறுத்தவே, பல்வேறு உத்திகளை அரசுகள் கையாண்டு கொண்டிருக்கின்றன. அதன் ஒரு கட்டமாக, 01-.04-.2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் கிடையாது என்று ஒரு சட்டம்.
பணியில் சேரும் அவர்களே, அவர்களது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை சேர்த்து வைத்திருந்து, அப்படி சேரும் தொகையையே பென்ஷன் ஆக பெற்றுக் கொள்ள வேண்டும். இது ஒரு வகை. மற்றொரு வகை மேலும் அபாயகரமானது.
அதாவது ஒரு அரசு பணிக்கு ஆள் எடுத்தால் அவர்களுக்கு அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, லொட்டு, லொசுக்கு என்று கொடுக்க வேண்டும். அவர்களையே ஒப்பந்த முறையில் நியமித்து விட்டால், ஒரு குறிப்பிட்ட தொகையை மாத்திரம் ஒவ்வொரு மாதமும் கொடுத்து கொண்டிருந்தால் போதும். ஊதிய உயர்வும் கிடையாது; பணி நியமனமும் கிடையாது; நிரந்தரமும் கிடையாது.
பணியில் நியமித்தால் தானே படிகளுடன் சம்பளமும், ஓய்வு பெற்றவுடன் பென்ஷனும். இன்றைய நிலவரப்படி மத்திய/மாநில அரசு பணிகளில் பல பணிகள் இதுபோன்று ஒப்பந்த அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல்களும், முறைகேடுகளும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களாலேயே நிகழ்ந்தது.

கொரோனா பரவலின் போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள், சமீபத்தில் பணி நிரந்தரம் செய்யச் சொல்லி, போராட்டம் நடத்தியதை நினைவு கூர்ந்து பாருங்கள். அவர்களுக்கு வாய் இல்லையா? வயிறு இல்லையா? குடும்பம் இல்லையா? பிள்ளை, குட்டிகள்தான் இல்லையா?
ஆட்சியாளர்கள், யாரையும் பணிக்கு எடுக்கவும் மாட்டார்களாம்; எடுத்தாலும் ஒப்பந்த (அவுட்சோர்சிங்) முறையில் எடுத்து குறிப்பிட்ட தொகையையே ஊதியமாக கொடுப்பராம்; அப்படி எடுப்பவர்களையும் நிரந்தரம் செய்ய மாட்டார்களாம். இவர்களுக்கு மட்டும், கமிஷன் வேண்டுமாம்; சம்பளம் வேண்டுமாம். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும், தனித்தனியாக பென்ஷனும் வேண்டுமாம்.
கேட்பதற்கு உங்களுக்கே வெட்கமாக இல்லையா அரசியல்வாதிகளே?. மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையை போர்த்தியபடி அமர்ந்து, மாதாமாதம் சம்பளமும், பென்ஷனும் கேட்கிறீர்களே... உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? . சம்பளமும், பென்ஷனும் வேண்டும் என்றால், அவை எந்த வேலையில் கிடைக்குமோ, அந்த வேலையை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே?. மக்களின் வரிப்பணத்தைச் சூறையாட ஏன் இப்படி துடியாய் துடிக்கிறீர்கள்? தவியாய் தவிக்கிறீர்கள்?.வாசகர் கருத்து (11)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  பகுத்தறிவு என்றால் இந்துக்கலிய்ய திட்டுவது என்று பொருள்வேறு பொருள் இருப்பது தெரியாது .

 • g.s,rajan - chennai ,இந்தியா

  நம் நாட்டில் ஜனாதிபதி ,பிரதமர் .பாராளுமன்ற எம்.பி க்கள்.ராஜ்ய சபா எம்.பி க்கள்.எம்.எல். ஏ க்கள் ,தவிர இதர மக்கள் நலனுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து எவ்வளவு செலவு செய்யப்படுகிறது .தெளிவான புள்ளி விவரங்கள் மக்களுக்குத் தேவை ...

 • அப்புசாமி -

  ஜனாதிபதி யிலிருந்து ஆரம்பியுங்க.

 • ஆரூர் ரங் -

  ஒரு காலத்தில் கவுன்சிலர்கள் நகரசபை கூட்டத்திற்கு வந்து செல்லும் குதிரை சவாரி கட்டணம் மட்டுமே படி யாகக் கொடுப்பது வழக்கம். அது ஓரணா முதல் ஐந்து ரூபா வரை இருக்குமாம். இது எப்படி இருக்கு?

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  ஐம்பது ஆண்டுகளாக அரசியல் ,சேவை என்பதை துறந்து வணிகமாகிவிட்ட ஒன்று .பழைய விடுதலை போராட்ட வீரர்கள் தங்கள் சொத்துக்களை நாட்டுக்காக இழந்து ,தியாகியாக செக்கிழுத்து ,= கடும்காவல் தண்டனை அனுபவித்து கடைசி காலத்தில் .ஏழ்மையில் இறந்தார்கள் . இதில் இருந்து தற்கால அரசியல் வாதிகள் கற்றுக்கொண்டது ,அரசியலில் சம்பாதிக்க வேண்டுமே தவிர எதையும் இழக்க கூடாது என்று அதன் விலைவு தான் கமிசன் ,கலெக்சன் .கரப்சன் .இன்று லெட்டர் பேட் கட்சி தலைவர்கள் கூட ஐம்பது லட்சம் சொகுசு காரில் தான் பறக்கிறர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement