காகிதங்கள், சாக்லெட், வண்ண பலுான்கள், சில பூக்கள் ஆகியவற்றை வைத்து, மனதை இணைக்கும் வகையில் பரிசு பொருட்கள் தயாரித்து வழங்கி, பல துறையினரின் விருப்ப பட்டியலில் இருக்கிறார், இளம்பெண் தொழில் அதிபர் ஸ்ருதி ஜெயசந்திரன். நம் நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:
உங்களை பற்றி?
சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் விஷுவல் கம்யூனிகேஷன். சின்ன வயதிலிருந்தே கைவினைப்பொருட்களில் ஆர்வம். இதனால் 19 வயதில், 'தி பிக் பாக்ஸ் தியரி' என்ற பெயரில் வீட்டிலேயே துவங்கிய என் நிறுவனம், நிறைய பாடங்களை கற்று, எட்டு ஆண்டுகளை கடந்துள்ளோம்.
தொழிலில் கற்ற பாடம்?
வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. சுற்றத்தாரால் எதிர்பாராத பாடத்தை கற்றேன். சிறந்த நண்பர்கள் கூட முதுகில் குத்தினர். இளம் வயதிலேயே தொழிலில் இறங்கியதை விளையாட்டாக நினைத்தனர். அதில் ஜெயிக்கவும், நண்பர்களால் பல சறுக்கல்களை சந்தித்தேன். மூன்று ஆண்டுகள் போராடி கடந்தேன்.
தொழிலில் முக்கியம்?
நேர மேலாண்மையும், தரமும். அதனால் தான் முதல்வர், திரையுலகினர், பல துறைகளைச் சேர்ந்தோரிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளேன். என் முதல் கார்ப்பரேட் வாடிக்கையாளர் 'சாம்சங்' தான். ஆறு ஆண்டுகளாக தொடர்கின்றனர். தவிர, தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். எதையும் அறிந்து, புரிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.
உங்களுடைய ஸ்பெஷல்?
வழக்கமான பூங்கொத்து போன்று அல்லாமல், எந்த நபருக்கு, யாரால் வழங்கப்படுகிறது. அவர்களின் பின்புலம், ரசனைகளை அறிந்து, அதற்கேற்ப பரிசு பொருட்களை வடிவமைக்கிறோம்.
தமிழக முதல்வரை கவர்ந்தது?
அமைச்சர் ஒருவரிடமிருந்து, தமிழக முதல்வருக்கு தர வேண்டிய பரிசு என, ஆர்டர் வந்தது. பூங்கொத்து, பரிசு பொருட்களை தினம் பார்ப்பவர் என்பதால், 2 அடி உயரத்தில் வாசனை மலர்கள், சாக்லெட், போட்டோ பிரேம் போன்றவற்றை வைத்து வித்தியாச பரிசு கொடுத்தோம். அதை பார்த்ததும், முதல்வரே அதுகுறித்து விசாரித்துள்ளார். நயன்தாரா - விக்னேஷ்சிவனுக்கும் நாங்கள் கொடுத்த பரிசு கவனம் பெற்றது.
காதலர் தின ஸ்பெஷல் பரிசு?
காதலர்கள் மட்டுமின்றி, அன்பை அனைவரும் பகிர்வோம் என, 'டச், பீல், டேஸ்ட்' போன்ற பல உணர்வுகளை உடைய பரிசுகளை உருவாக்க உள்ளோம். பரிசு பெறுபவர் விரும்பும் படம், சாக்லேட், வாசனை திரவியம், மறக்க முடியாத வீடியோ என அனைத்தையும் ஒன்றிணைத்து பரிசாக வழங்க உள்ளோம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!