ராணிப்பேட்டை நகரில், 'காமன் சர்வீஸ் சென்டர்' என்ற, மத்திய அரசின் பொதுச் சேவை மையத்தை நடத்தி வரும் சுதா:
எங்கள் மையத்தில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்து தருகிறோம்.
அத்துடன், மத்திய அரசின் கடனுதவியில், குடிசை தொழிலாக இயற்கை நாப்கினும் தயாரித்து வருகிறோம்.
விருப்பப்படும் பெண்களுக்கு, இயற்கை நாப்கின் தயாரிப்பு குறித்து கற்றுத் தந்து, அவர்களை முதலாளியாக்கி அழகு பார்க்கிறோம்.
உடலுக்கு குளிர்ச்சியையும், வெப்பத்தையும் ஏற்படுத்தாமல், சீரான சீதோஷ்ணத்தில் ஒவ்வாமையும் ஏற்படுத்தாத வாழை நார், தேங்காய் நார் மற்றும் பருத்தி துணி போன்ற மூலப் பொருட்கள் வாயிலாக, நாங்கள் இயற்கை நாப்கின் தயாரிக்கிறோம்.
'பேக்கிங்' பிரியாமல் இருக்க, ஒட்டுவதற்கு மரப்பிசினை பயன்படுத்துகிறோம். விற்பனைக்கு தயாரான நாப்கின்களை பேக் செய்யும் உறையும், காகிதத்தில் தான் தயாரிக்கப்படுகிறது.
எங்களின் இந்த தயாரிப்பு பூவையருக்கும், பூமிக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற லட்சியமும், 1 லட்சம் ரூபாய் முதலீடும் இருந்தால் போதும்... யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலில் இறங்கலாம்.
முதலீடு செய்ய பணம் இல்லாவிட்டால், மத்திய அரசின், 'முத்ரா' கடனுதவி திட்டத்தின் கீழ், வங்கிகளின் கடன் பெற வழிகாட்டுகிறோம்.
மூலப் பொருட்கள் அனைத்தையும், மத்திய அரசின் பொதுச் சேவை மையமே, பல்வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து, பதப்படுத்தி, மிகக் குறைந்த விலைக்கு தருகிறது.
இதற்கான இயந்திரங்களையும், மத்திய அரசே பிரத்யேகமாக தயாரித்து வழங்குவது தனிச்சிறப்பு.
ஒரு இயந்திரத்தின் வாயிலாக, நாள் ஒன்றுக்கு, 5,௦௦௦ நாப்கின்கள் தயாரிக்க முடியும்; அத்துடன், 10 பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம். மாற்றுத்திறனாளிகளும், அதிகம் படிக்காதோரும் இந்த தொழிலில் ஈடுபடலாம்.
நமக்கு எல்லா செலவுகளும் போக, 20 சதவீதம் லாபம் கிடைக்கும்.
இயற்கை நாப்கின்கள் தயாரிக்க தனிப்பட்ட பெண்களோ, மகளிர் குழுக்களோ ஆர்வமாக முன்வந்தால் செய்முறை, இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் கொள்முதல் உட்பட தயாரிப்பு முறைகளையும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சொல்லித் தருகிறோம்.
உழைத்து முன்னேறத் துடிக்கும் பெண்கள், இயற்கை நாப்கின்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால், அவர்கள் முதலாளிகளாவது நிச்சயம்.
*****************
ஹிந்து மதம் பற்றி மாணவியருக்கு சொல்லித் தருகிறேன்!
ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் கான்பெராவில், மாணவியர் பலருக்கு பரதநாட்டிய வகுப்புகள் எடுத்து வரும், பல் மருத்துவரான அபிராமி:
சிறு வயதிலேயே நடனம் கற்றுக் கொண்டேன். பல் மருத்துவத் துறையிலும் பட்டம் பெற்றேன். கணவர் ஆஸ்திரேலியாவில் இருந்தார். இந்தியாவில் நான் பெற்ற பல் மருத்துவச் சான்று, ஆஸ்திரேலியாவில் செல்லாது என்பதால், அடிலைடு நகரம் சென்று, மீண்டும் பல் மருத்துவம் படித்தேன். பின், நாங்கள் கான்பெரா நகரில் குடியேறினோம்.
அதற்குள் என் மகளும், நடனம் கற்றுக் கொள்ளும் வயதுக்கு வந்து விட்டாள். அவள் மற்றும் அவளுடைய சினேகிதிகள் என, ஏழு மாணவியருடன் ஆரம்பிக்கப்பட்டது தான் எங்களின், 'அபிநயா நாட்டியப் பள்ளி!' இன்று, 70 மாணவியருடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில், ஆணும் பெண்ணும் வேலைக்கு போகின்றனர். வேலை முடிந்து வந்ததும், வீட்டு வேலைகள் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும்.
எல்லாரும் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் உற்றார், உறவினர்கள் உண்டு; இங்கு அப்படி யாருமில்லை. அதனால், இங்கு பெண்கள் குழுவாக வந்து அரட்டை அடித்து விட்டு, நடனம் ஆடிச் செல்வர். அவர்கள் பொழுது போக்கிற்காக ஆடினாலும், நடனம் தான் அவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தருகிறது. எங்கள் நடனக் குழுவினருடன், ஆஸ்திரேலியா முழுதும் சுற்றி வந்திருக்கிறேன். ஆஸ்திரேலியா பார்லிமென்டில், என் மாணவியருடன் பலமுறை நான் நாட்டியமாடியதை வாழ்நாளில் மறக்கவே முடியாது.
தீபாவளி, பொங்கல் மற்றும் சில கலாசார விழாக்களிலும் நடனம் அமைத்து ஆடியுள்ளேன். இதை, அமைச்சர்கள், பார்லிமென்ட் உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டினர்.ஹிந்து மதத்தில் உள்ள வெவ்வேறு கடவுள்கள் பெயரில் நடனம் அமைத்து, மாணவியருக்கு ஹிந்து மதம் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறேன். இன்றைய இளைஞர்களை பார்த்து
மிகவும் அனுதாபப்படுகிறேன்... காரணம், அவர்கள் இரண்டு கலாசாரத்திற்கும் இடையே அகப்பட்டு விழிக்கின்றனர். இந்த கலாசார மாற்றத்திற்கு, வீட்டில் உள்ளவர்கள் தான் வழி காண வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!