சென்னை நீலாங்கரையில் நடந்த, தென்சென்னை மத்திய மாவட்ட காங்., தலைவர் முத்தழகன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், 'லஷ்மண் ஸ்ருதி' இன்னிசை கச்சேரி நடந்தது.
மணமகனின் தந்தை முத்தழகன், நடிகர் ரஜினி நடித்த, நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும், 'உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே...' என்ற பாடலை பாடினார். அப்போது, மணமக்களை வாழ்த்த வந்த, பா.ம.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, ரஜினி பட பாடலை ரசித்துக் கேட்டார்.
இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர், 'ஒரு நேரத்தில் ரஜினியின், பாபா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர், இன்று அவரது படத்தின் பாடலை மெய்மறந்து ரசிக்கிறாரே' என்று முணுமுணுத்தார்.
மற்றொருவர், 'அட அரசியல்வாதிகள் அப்படி தாங்க... அரசியலுக்காக சினிமாக்காரங்களை எதிர்ப்பாங்க... வீட்டிற்கு போனதும், 'டிவி'யில அதே நடிகரோட படத்தை மணிக்கணக்குல உட்கார்ந்து பார்ப்பாங்க...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.
கேட்டால் கட்சி வேறு, ரசனை வேறு என்பார்கள்