கரூரில், '100ரூபாய் கடை' என்ற பெயரில் கடை திறந்து, சிறு சிறு பொருட்களை விற்று வரும், தினேஷ்: அப்பா வாடகைக்கு ஆட்டோ ஓட்டியதால், பெரிதாக வருமானம் இருக்காது.
'நீயாச்சும் படித்து, கைநிறைய சம்பாதிக்கிற வேலைக்கு போப்பா'ன்னு என்னை படிக்க வைத்தார். ஐ.டி., கம்பெனியில் பணியாற்ற விரும்பினேன்.
இதற்கிடையில், சிவகார்த்திகேயனின், காக்கிச்சட்டை படத்துக்கு, 'கேரக்டர் ஆர்ட்டிஸ்டா'க தேர்வாகி, படத்தில் நடித்தேன்.
அதன்பின், சினிமா தான் என் கரியர்னு முடிவு செய்து, சென்னைக்கு வண்டி ஏறினேன். ஆனால், நான் நினைத்த மாதிரி சினிமா, 'ஈசி'யாக இல்லை; வாய்ப்பு தேடி களைத்துப் போனேன்.
அதன்பின், முதலில் வருமானத்துக்கு வழி பண்ணனும்னு நினைத்தேன். இந்நிலையில், 2015ல் தீபாவளி வந்தது.
நண்பர் ஒருவரிடம் பத்து நாளைக்கு ஆம்னி வேனை உதவிக்கு வாங்கினேன். நண்பர்களிடம், 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, திருப்பூர் போய் துணிகளை கொள்முதல் செய்து, ஆம்னி வேனில் வைத்து, சாலை ஓரத்தில் விற்பனை செய்தேன்.
கரூர் பஜாரில், நான் விற்பனை செய்யும் விதத்தை பார்த்த, நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 'தீபாவளி வரைக்கும் என் கடையில் வைத்து விற்பனை செய்து கொள்' என்று சொன்னார்.
ஆனால், தீபாவளிக்கு ஏழு நாட்கள் இருக்கும் போதே, சாவியை அவர்கிட்ட திருப்பிக் கொடுத்தேன். மூன்றே நாளில், எல்லாவற்றை விற்று விட்டதை கேட்டு அசந்து போன அவர், தன் கடையை முன்பணம் எதுவும் வாங்காமல், எனக்கு வாடகைக்கு கொடுத்தார்.
துணி விற்றதில், 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. நண்பரின் அப்பாவிடம் கூடுதலாக, 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, 'கரூர் 100 ரூபாய் கடை'யை ஆரம்பித்தேன்.
'டி - சர்ட், கைலி, ஷார்ட்ஸ், கலர் வேஷ்டி, காவி வேஷ்டி, மிடி, சுடி, நைட்டி, ஹேண்ட்பேக், பெல்ட், கிப்ட் டாய்ஸ்'ன்னு, எதை எடுத்தாலும் வெறும், 100 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தேன்.
கடையின் பெயர் வித்தியாசமாக இருந்ததால், ஆரம்பத்தில் இருந்தே வியாபாரம் நல்லா நடந்தது; நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைத்தேன். 2018ல் எனக்கு திருமணமானது.
இன்னொரு பக்கம், சென்னைக்கு போய், பல படங்களில், சின்னச் சின்ன வேடங்களில் நடித்தேன். தொழிலை அதிக நேரம் கவனிக்கிறேன்; அதேநேரத்தில், சினிமாவிலும் அவ்வப்போது நடிக்கிறேன்.
சினிமாவில் கண்டிப்பாக ஒரு நாள், எல்லாருக்கும் தெரியும் முகமாக மாறுவேன். அத்துடன், நுாறு ரூபாய் பொருட்கள் விற்கும், 'கான்செப்ட்'டை தமிழகம் முழுக்க கொண்டு போகும் முயற்சியிலும் இறங்கியுள்ளேன்.
நிறைய ஊர்களில் கடையை திறக்கணும்; அதை நிச்சயம் சாதிப்பேன்.
முயற்ச்சி திருவினையாக்கும்,நல்லது நண்பரே. வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள். எங்கள் ஊரிலும் கடை திறவுங்கள்.