சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த சாலை, கால்வாய் பணிகளுக்கான துவக்க விழாவில், சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில், சாலைகள் தரமாக இருந்தால் தான், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் தர வேண்டும் என, கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். கால்வாய்கள் அதிகமாக கட்டப்படுகின்றன. ஆனாலும், தண்ணீர் செல்லாமல் தேங்கி, கொசு உற்பத்தியாகிறது.
'கால்வாய்கள் சரியாக கட்டப்படவில்லை என்றால், ஒப்பந்ததாரர்கள் யாராக இருந்தாலும் பணம் தரப்படாது. அதிகாரிகள் எந்த தொகுதியில் கவனம் செலுத்தவில்லை என்றாலும், என் தொகுதியில் தனி கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'காஞ்சிபுரம், செங்கல்பட்டுன்னு ரெண்டு மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சரா இருந்துட்டு, தன் சொந்த தொகுதியில் மட்டும், அதிகாரிகளை கவனம் செலுத்த சொல்றாரு... அமைச்சர் சரியான சுயநலவாதியா இருக்காரே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர் ஆமோதித்து தலையாட்டினார்.
பொதுவெளியில் சொல்வதற்கெல்லாம் எந்த மதிப்பும் கிடையாது 'வரவேண்டியதை' ஒழுங்காக தன்னிடம் சேர்க்கும் வரை பில் பாசாகக்கூடாது என்ற மறைமுக எச்சரிக்கைதான் இது