கோவையைச் சேர்ந்த குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்: நீர்நிலைகள் பாதுகாப்பை மக்கள் பங்களிப்புடன், பேரியக்கமாக வளர்த்தெடுத்து உள்ளேன். எங்கள் அமைப்பினர், கொங்கு வட்டாரத்தில் ஏராளமான ஏரிகள், குளங்கள், குட்டைகளை மீட்டெடுத்திருக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோவை மாநகரம் இருக்கிறது என்று தான் பெயர். ஆனால், அடிக்கடி கடுமையான வறட்சி வந்திடும்; மக்கள் குடிநீருக்காக அலைவர்.
அந்த மாதிரியான ஒரு வறட்சி காலம். எங்கள் ஊரை கடந்து, ஒரு காட்டு ஓடை ஓடும். எங்கள் வட்டாரத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் தண்ணீரை, அந்த ஓடையானது, கேரளாவில் உள்ள பாரதப்புழா ஆற்றில் கொண்டு சேர்க்கும்.
நானும், என் நண்பரும் அந்த வாய்க்காலோடு நடந்தோம்; ௫ கி.மீ., தொலைவில் இருந்த தடுப்பணை உடைந்திருந்தது; அதனால், தண்ணீர் தேங்காமல் மொத்தமாக வெளியேறியதை அறிந்தோம்.
இந்த தடுப்பணைக்கு பக்கத்தில், ௩௩௦ ஏக்கரில் இருந்த குறிச்சிக்குளம் என்ற ஏரியும் வறண்டு கிடந்தது. ஏரியில் தண்ணீர் இருந்தால், அருகேயுள்ள கிராமங்களில், 4 அடியில் தண்ணீர் கிடைக்கும் என தெரிய வந்தது.
இந்தப் பிரச்னை மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை ஆவணப் படமாக தயார் செய்து, மாவட்ட கலெக்டரிடம் வழங்கினோம். உடனடியாக, காட்டு ஓடை தடுப்பணையை சீரமைத்தனர்; வாய்க்கால் ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.
இதன் வாயிலாக, எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், பொது வெளிக்கு கொண்டு வந்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால், நிச்சயமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
இதன்பின், சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களை திரட்டி, கருவேல மரங்களை அகற்றுவதை இயக்கமாகவும் முன்னெடுத்தோம்; கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பையும் ஆரம்பித்தோம்.
கோவையை சுற்றிலும், 1,200 சிறு குட்டைகள் இருக்கின்றன. பெரும்பாலான குட்டைகள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய் விட்டன. எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி வருகிறோம்.
இதுவரை, ஒன்பது குட்டைகளை மீட்டு, சீரமைத்துள்ளோம். நீர் நிலைகளில் குவிந்து கிடந்த, 200 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம்.
'மியாவாக்கி' வன முறையில், 25 ஆயிரம் மரங்கள் நட்டிருக்கிறோம்; ஒரு லட்சம் மூலிகை செடிகளை உருவாக்கி வளர்த்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட, ௧.௫ லட்சம் பனை விதைகளை நட்டிருக்கிறோம். 75 பேர் இப்போது எங்கள் அமைப்பில் உள்ளனர். ஒவ்வொரு ஞாயிறன்றும் குறைந்தது, 50 பேரில் இருந்து, 500 பேர் வரை, ஏதாவது ஒரு வேலையை முன்னெடுத்து செய்கிறோம்.
well done all the best... please share atleast phone number.... for.. contact....