பழமை மாறாமல் மூலிகைகளைச் சேர்த்து மண்ணை குழைத்து, வீடுகளை கட்டிக் கொடுத்து வரும், கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ்: பழங்காலத்தில் கட்டப்பட்ட மண் வீடுகளுக்குள் நுழைந்தாலே, இயற்கையான குளிர்ச்சியை உணர முடியும்.
சிமென்ட் பயன்பாட்டுக்கு வந்த பின், பழமை மறக்கப்பட்டு, எங்கு பார்த்தாலும், 'கான்கிரீட்' வீடுகளாக மாறி விட்டன.
தஞ்சாவூர் எங்களின் பூர்வீகம். கேரளாவில் செங்கன்னுார் கோவில், ஆரன்முழா கோவில் போன்றவற்றை நிர்மாணிக்க, ௧௦௦ ஆண்டுகளுக்கு முன் கொச்சி, திருவிதாங்கூர் ராஜாக்கள், எங்கள் முன்னோரை அழைத்து வந்தனர்; அதன்பின், எங்கள் குடும்பம் இங்கேயே தங்கி விட்டது.
மூலிகை மண் வீடு கட்டுவது எனக்கு பிடித்தமானது. நடிகர் மோகன்லாலுக்கு மூலிகை மண் வீடு கட்ட உள்ளேன். வயநாட்டில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மண் வீடு, இப்போதும் உறுதியாக இருக்கிறது.
அதைப் பார்த்த பின்னரே, மண் வீட்டின் மீது ஈடுபாடு வந்தது. வெறும் மண் மட்டுமின்றி, அதனுடன் மூலிகை சாறுகளை கலந்து கட்டத் துவங்கினேன். கேரளாவில் எட்டு, தமிழகத்தில் ஒன்று என, இதுவரை ஒன்பது மூலிகை மண் வீடுகளை கட்டியிருக்கிறேன்.
கருங்கற்களால் அஸ்திவாரம் அமைத்த பின், மண்ணுடன் திரிபலா கஷாயம், சுண்ணாம்பு, ராமிச்சம், பச்சைக் கற்பூரம், வெந்தயம், சந்தனம், பழ மரங்களின் தோல் என, 64 வகையான மூலிகைகளை இடித்துச் சேர்ப்போம்.
அதனுடன், கோமியம், சாணம் சேர்த்து, மூலிகை சாறுகளை கலந்து, காலால் மண்ணை மிதித்து குழப்பி பக்குவத்துக்கு கொண்டு வந்த பின், காய வைத்து செங்கல் செய்வோம்; சுட்டால் மூலிகைகளின் தன்மை மாறிவிடும் என்பதால், அப்படியே காய வைத்து சுவர் எழுப்புவோம்.
வீட்டின் மேல்பகுதியில், மரத்தால் சீலிங் அமைத்து, அதற்கு மேல் ஓடு பதிப்போம். மண்ணால் செய்யப்பட்ட ஓடுகள் வாயிலாக தரை அமைப்போம். இந்த வேலைகளை செய்வதற்காகவே என்னிடம், 45 பணியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த மூலிகை மண் வீட்டில் 'ஏசி, பேன்' தேவையில்லை. மின்விசிறியின் காற்று, நம் உடலின் ஈரத்தன்மையை எடுப்பதால், துாங்கி விழித்த பின் எனர்ஜி குறையலாம்.
ஆனால், இயற்கையான மூலிகை மண் வீட்டில், துாங்கி எழுந்ததும் சோர்வு முழுமையாக நீங்கி, புத்துணர்வு ஏற்படும்.
வீடு கட்டுவதற்கான, 1,300 மூலிகைகளை, என் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்த்து வருகிறேன்.
அவற்றை குமரி மாவட்டத்தின் மருந்து வாழ் மலையில் இருந்து எடுத்து வந்து வளர்க்கிறேன். 10 ஏக்கர் நிலம் வாங்கி மூலிகை வனம் ஏற்படுத்தி, அதன் நடுவில் மண் வீடு கட்டி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
மிக்க நன்று. இவரை எவ்வாறு தொடர்பு கொள்வது?