''தாய் கட்சியிலயே ஐக்கியம் ஆகிட்டாரு வே...'' என்றபடியே, நாளிதழை மடித்து வைத்தார் அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கட்சி விட்டு கட்சி தாவுறதுல சாதனை படைச்ச, 'மாஜி' எம்.எல்.ஏ., மதுரை டாக்டர் சரவணன், சமீபத்துல அ.தி.மு.க.,வுல இணைஞ்சாருல்லா... தன்னோட தீவிர ஆதரவாளரா இருந்த கரு.சுந்தரையும் கூடவே கூப்பிட்டாரு வே...
''ஆனா, சுந்தர் அதுல விருப்பம் இல்லாமலே இருந்தாரு... திடீர்னு என்ன நெனச்சாரோ தெரியல... வைகோ முன்னிலையில, ம.தி.மு.க.,வுல சேர்ந்துட்டாரு... சுந்தரின் அரசியல் வாழ்க்கையே, ம.தி.மு.க., மாணவரணியில தான் துவங்கியிருக்கு வே...
''ஒரு காலத்துல, வைகோவுக்கு உதவியாளராகவும் இருந்திருக்காரு... மாநில அளவுல தொண்டரணி நிர்வாகியாவும் இருந்தாரு... தாய் கட்சியில, மாநில அளவுல பதவி கிடைக்கும்னு நம்பி சேர்ந்திருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆளே இல்லாத கடையில, டீ ஆத்த போயிருக்கார்னு சொல்லும்...'' என சிரித்த குப்பண்ணா, ''பெண் அதிகாரி பேரை சொன்னாலே, ஊழியர்கள் நடுங்கறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார்.
''என்ன விவகாரம்னு விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரி ரொம்பவே கண்டிப்பானவங்க... கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை, தன் மொபைல் போன்ல கவனிச்சுண்டே இருப்பாங்க ஓய்...
''தப்பு செய்ற ஊழியர்கள் மேல உடனடியா நடவடிக்கை பாயறது... இதுவரை, 13 பேர், 'சஸ்பெண்ட்' ஆகியிருக்கா... சமீபத்துல, பக்தர்களோட கட்டண டிக்கெட்டை, 'ஸ்கேன்' செய்யலன்னு, ரெண்டு ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்குல அபராதம் போட்டாங்க ஓய்...
''சிக்னல் சரியா இல்லாததால ஒரு டிக்கெட்டை ஸ்கேன் செய்ய, 15 நிமிஷத்துக்கு மேல ஆறது... அதை சொன்னா, 'மரியாதையா அபராதம் கட்டறியா... இல்ல சஸ்பெண்ட் செய்யவா'ன்னு அதட்டியிருக்காங்க... வேற வழி இல்லாம, ஒன்றரை மாச சம்பளத்தை அபராதமா கட்டியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''கமிஷனுக்கு ஆசைப்பட்டு வாங்கினா இப்படித் தான் ஆகுமுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் பாதுகாப்புக்காக, 180, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தினாங்க... இதுல, 80 சதவீத கேமராக்கள், 'டோட்டலா அவுட்' ஆகிடுச்சாம்... மீதி இருக்கிற கேமராவுல, உருவத்தோட, 'அவுட்லைன்' மட்டும் தான் தெரியுதுங்க... ஆணா, பெண்ணான்னு கூட கண்டுபிடிக்க முடியலங்க...
''எல்லாமே, 'கேரன்டி, வாரன்டி' இல்லாத, சைனா ஐட்டங்களாம்... கேமரா சரியா இல்லாததால, மருத்துவமனை வளாகத்துல நடக்கிற குற்ற செயல்களை கண்டுபிடிக்க முடியாம போலீசார் ரொம்பவே திணற வேண்டி இருக்குதுங்க... போன வருஷம் திருடு போன, 40 ஆயிரம்ரூபாய் மின் மோட்டாரை இன்னும் கண்டுபிடிக்க முடியலங்க...
''டாக்டர்களோட, 'லேப்டாப், ஐ போன்' நோயாளிகளின் நகை, மொபைல் போன்கள்அடிக்கடி திருடு போகுது... 'இந்த ஓட்டை கேமராக்களை மாத்தினா தான் இதுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்'னு மருத்துவமனை ஊழியர்கள் புலம்புறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெரியவர்கள் எழுந்தனர்.