பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் நீதித் துறையின் சிறப்பான முயற்சி
உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பார்க்கும் வசதி, நாட்டின், 74 வது குடியரசு தின கொண்டாட்டங்கள் நிகழ்ந்த, இம்மாதம், ௨௬ம் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது. முதல் கட்டமாக, 13 பிராந்திய மொழிகளில், 1,268 தீர்ப்புகள் வெளியாகி உள்ளன.
அதாவது, ஹிந்தியில், 1,091; ஒடியா, 21; மராத்தி, 14; அசாமி, நான்கு; கன்னடம், 17; மலையாளம், 29; பஞ்சாபி, நான்கு; தமிழ், 52; தெலுங்கு, 28; உருது, மூன்று என்ற ரீதியில், 13 மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளன.
இதற்காகவே, 'இ - எஸ்.சி.ஆர்.,' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 34 ஆயிரம் பழைய தீர்ப்புகள், மின்னணு முறைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரையிலான தீர்ப்புகளை, இனி பிராந்திய மொழிகளில் பார்க்கக் கூடிய வசதியும் உருவாகிறது.
'தற்போதைக்கு, 13 மொழிகளில் மட்டுமே, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பார்க்க முடியும் என்றாலும், விரைவில், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள, 22 மொழிகளிலும் தீர்ப்புகளை பார்க்கும் வசதி அறிமுகமாகும்' என, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உண்மையில், ஆங்கில மொழியின் நுணுக்கங்கள் மற்றும் சிக்கல்களை நன்கு அறிந்திராத வழக்கறிஞர்களால், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால், நீதிமன்றத்தின் உத்தரவுகளை, அவர்கள் தவறாகப் படிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ நேரிடுகிறது.
அதனால், ஒவ்வொருவரும் நன்கு அறிந்த பிராந்திய மொழிகளில், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் போது, அவற்றின் சாராம்சங்களை நன்கு புரிந்து, அடுத்து வரும் வழக்குகளில், நன்கு வாதாட முடியும், ஆணித்தரமான வாதங்களை முன்வைக்க முடியும் என்பதில் மாற்றமில்லை.
பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடும் முடிவை, பிரதமர் நரேந்திர மோடியும் ஆமோதித்துள்ளார். மருத்துவம் மற்றும் பொறியியல் பாடப்புத்தகங்களை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்யும் பணியில், மத்திய அரசும், பல மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், நீதித்துறையின் தீர்ப்புகளையும், மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், அணுகக்கூடிய வகையிலும் வெளியிட முற்பட்ட உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதியின் செயல் பாராட்டுக்குரியதே.
நீதித்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆண்டு செப்டம்பரில், உச்ச நீதிமன்றம், தன் அரசியல் சாசன அமர்வின், வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப தொடங்கியது. இதன் வாயிலாக, நீதிமன்ற நடவடிக்கைகளை, மக்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவானது.
சட்டக் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், அங்கு படிக்கும் மாணவர்களும், நீதிபதிகள் முன்வைக்கப்படும் பிரச்னைகளை, விவாதங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், நீதிமன்றங்களின் செயல்பாடுகளுக்கு உத்வேகம் கொடுப்பதாகவும், அது அமைந்தது.
அந்த வரிசையில், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வெளியிடுவது, சட்டத் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு தரப்பினருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில், தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யும் போது, அவற்றின் சாராம்சங்கள் மாறாமல் சரியாகவும், விரிவாகவும், தெளிவாகவும் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், தேவையான ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மொழி பெயர்ப்புகளை சரிபார்த்து வெளியிட ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
இந்தியா பல மொழிகள் பேசும் மக்கள் நிறைந்த நாடு. அப்படிப்பட்ட நிலையில், மக்களின் இன்னல்களை, அசவுகர்யத்தை குறைக்கும் வகையில், பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிட முயற்சி எடுத்த நீதித்துறையின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியதே.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!