Load Image
Advertisement

கஞ்சா விக்கிறவன், செயின் பறிக்கறவனுக்கு போச்சு வாழ்வு ஆபீசை விட்டு நழுவு... சோப்புப் போட்டு கழுவு!

தோழி இல்லத்தின் புதுமனை புகுவிழாவுக்குச் செல்வதற்காக, 'கிப்ட்'டுடன் கால் டாக்சியில் ஏறினர் சித்ராவும், மித்ராவும்.

வண்டி புறப்பட்டு, குடியிருப்புப் பகுதியைக் கடந்தபோது, அங்கு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரைப் பார்த்து விட்டுமித்ராதான், முதலில் பேச்சை ஆரம்பித்தாள்...

''வரி கட்டலைன்னா, பாதாள சாக்கடை இணைப்பைத் துண்டிச்சிருவோம்னு போட்ருக்காங்க. இந்த ஏரியாவுலதான், பாதாள சாக்கடையே இல்லையே?''

மித்ராவின் கேள்வியை ரசித்த சித்ரா, அதற்குப் பதிலளித்தாள்...

''ஆமா மித்து! கார்ப்பரேஷனை விரிவாக்கம் பண்ணி 12 வருஷம் முடிஞ்சிருச்சு. இன்னமும் பாதாள சாக்கடைக்கு டெண்டரே விடாம வச்சிருக்காங்க...எப்போ டெண்டர் விட்டு, எப்போ வேலையை ஆரம்பிச்சு, எத்தனை வருஷத்துல முடிப்பாங்களோ தெரியலை!''

சித்ரா சொன்னதைக் கேட்ட மித்ரா, தான் சொன்ன மேட்டரையே தொடர்ந்தாள்...

''வரி கட்டுங்கன்னு விளம்பரம் பண்றாங்க...ஆனா புதுசா வரிப் புத்தகம் போடணும்னா அதுக்கும் லட்சக்கணக்குல லஞ்சம் கேக்குறாங்க.

வடக்கு மண்டல ஆபீஸ்ல, டாக்ஸ் கட்ட அப்ளை பண்ணி, நிறைய்யப்பேரு பணமும் கட்டிட்டாங்களாம். ஆனா புத்தகம் போடுற பொறுப்புல இருக்குற ஆபீசர், பேருக்கேத்தது மாதிரி, ஒரு புக்குக்கு 25 ஆயிரத்துல இருந்து 35 ஆயிரம் ரூபா கேட்டு, டிமாண்ட் பண்றாராம்!''

''வரி வசூல்ல பல பிரச்னைகள் ஓடுதுப்பா...கார்ப்பரேஷன்ல அத்தனை வார்டுக்கும் வரி வசூலிக்க ஜூனியர் அசிஸ்டென்ட்களைப் போட்ருக்காங்க.

சானிட்டரி சூபர்வைசர், கிளார்க் எல்லாம் இதை வசூல் பண்ணக்கூடாதுன்னு, கண்டிஷனா கமிஷனர் உத்தரவு போட்ருக்காராம். ஆனா 86வது வார்டுல மட்டும், ஆபீஸ் அசிஸ்டென்ட்டே இந்த வேலை பண்றாராம்!''

''கார்ப்பரேஷன்ல மண்டலங்களுக்குள்ள ஏகப்பட்ட முட்டல் மோதலாயிட்டு இருக்குக்கா...பொது நிதி, ஆரம்பக் கல்வி நிதியில சென்ட்ரல், கிழக்கு ரெண்டு மண்டல ஸ்கூல்களுக்கு மட்டும், பல கோடி ரூபா நிதி ஒதுக்கிருக்காங்களாம்.

ரெண்டு மண்டலத் தலைவர்களுக்கும், ஆளும்கட்சியில செல்வாக்கு இருக்குறதால, அவுங்களுக்கு மட்டும் அதிகமா நிதி ஒதுக்குறதா, மத்த மூணு சேர்மனும் கொதிக்கிறாங்க!''

''ஆளும்கட்சியில செல்வாக்கு இருந்தா, என்ன வேணும்னாலும் பண்ணலாம் போலிருக்கு...தடாகம் ரோட்டுல, ஒரு பிரைவேட் ஸ்கூலுக்கு எதிர்ல கார்ப்பரேஷன் ரிசர்வ் சைட்டை ஆக்கிரமிச்சு வச்சிருந்த டீக்கடையை, சமீபத்துல எடுத்தாங்க.

அட பரவாயில்லையேன்னு பார்த்தா, இப்போ அதே இடத்துல, '43வது வட்ட தி.மு.க.,'ங்கிற பலகையோட, சி.எம்.,படத்தை வச்சு, டீக்கடை நடத்துறாங்க!''

''என்னமோ நீங்கதான், நம்ம சி.எம்., சென்னைக்கு அடுத்தாப்புல, நம்ம ஊரு மேல ரொம்ப அக்கறையா இருக்குறதாச் சொல்றீங்க. ஆனா அவர் நம்ம ஊரைக் கண்டுக்கிறது மாதிரியே தெரியலை...ஊருக்குள்ள ஏகப்பட்ட போஸ்ட்டிங் காலியாக் கெடக்குது...அதனால வேலையும் நடக்காம இருக்கு. அதை நிரப்பக்கூட எதுவும் பண்ண மாட்டேங்கிறாரே!''

மித்ரா பேசும்போதே குறுக்கிட்டுக் கேட்டாள் சித்ரா...

''அவ்ளோ முக்கியமான போஸ்ட்டிங் எதுவும் காலியா இருக்கா?''

''ஆமாக்கா...ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துற டி.ஆர்.ஓ., இல்லை. ஸ்டாம்ப்ஸ் டி.ஆர்.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்காங்க.

டிஸ்ட்ரிக்ட் சப்ளை ஆபீசர் இல்லை. ஆதி திராவிடர் நலத்துறை ஆபீசர், கூடுதலா பாக்குறாரு. பஞ்சாயத்து அசிஸ்டென்ட் டைரக்டர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் போஸ்ட்டிங் அத்தனையும் காலியாத்தான் இருக்கு!''

''மத்தது பத்தித் தெரியலை...நீ சொன்னது மாதிரி, ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துற டி.ஆர்.ஓ., மூணு மாசமா இல்லை. கிட்டத்தட்ட எல்லா நிலத்தையும் எடுத்தாச்சு.

புது டி.ஆர்.ஓ.,வந்தா, ஓனர் யாருன்னு தெரியாத நிலத்துக்கு, கோர்ட்ல பணத்தைக் கட்டிட்டு, எல்லா நிலத்தையும் ஏர்போர்ட் அதாரிட்டிகிட்ட ஒப்படைச்சிரலாம். ஆனா டி.ஆர்.ஓ., இல்லாம அந்த வேலை மாசக்கணக்கா இழுக்குது!''

''அது மட்டுமில்லைக்கா...நம்ம ஊருக்கு மெட்ரோ ரயில் திட்டமே சத்தியமா வராதுன்னு, ஆபீசர்களே அடிச்சுச் சொல்றாங்க. டீட்டெயில்டு பிராஜெக்ட் ரிப்போர்ட்டை வாங்கி வச்சிருக்குற தமிழ்நாடு கவர்மென்ட், அதுல ஒரு முடிவும் எடுக்காம அப்பிடியே கிடப்புல போட்ருக்கு. சென்னையில மெட்ரோ திட்டத்துக்கு, ஆயிரம் ஆயிரம் கோடியா ஒதுக்குறாங்க. இங்க ஒத்தப்பைசா கூட ஒதுக்குறதில்லை!''

''எனக்கும் அப்பிடித்தான் தோணுது மித்து...மெட்ரோ ரயில், பஸ்போர்ட், பொட்டானிக்கல் கார்டன் எல்லாமே, வெறும் அறிவிப்போடவே இந்த ஆட்சியோட அஞ்சு வருஷம் முடிஞ்சிரும் போலிருக்கு...

அன்னுார் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலமெடுக்குற மேட்டர், பெருசா வெடிச்சுச்சு...உடனே விவசாய நிலத்தை எடுக்க மாட்டோம்னு சொன்னாங்க...இப்போ அந்த தொழிற்பேட்டையே வராதுன்னு ஒரே பேச்சா இருக்கு!''

''வராம இருக்கிறதுக்கு வாய்ப்பு நிறையவே இருக்குக்கா...அன்னுார் சிப்காட் மட்டுமில்லை...சூலுார் பக்கத்துல வாரப்பட்டியிலயும், சுத்தியும் விவசாய நிலம் எடுத்தா பிரச்னை வரும்னு, தரிசு நிலத்தை மட்டும் எடுக்க முடிவு பண்ணிருக்காங்களாம். ஆனா அதை மட்டும் எடுத்து, தொழிற்பேட்டையே அமைக்க முடியாது; அதனால அதுவும் வராதுன்னு ஆபீசர்கள் சொல்றாங்க!''

மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, கால் டாக்சி டிராபிக்கில் மாட்டிக்கொண்டு நின்றது. வெளியில் போலீசார் அதிகமாக நிற்பதைப் பார்த்த சித்ரா, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...

''மித்து! சிட்டியில டி.சி.,யா ஜாயின் பண்ணிருக்குற சந்தீஸ், ரொம்ப ஆக்டிவா இருக்காராம். அவர் கன்ட்ரோல்ல இருக்குற ஸ்டேஷன்கள்ல, எல்லா ஏ.சி., இன்ஸ்பெக்டர்களுக்கும் ஒரு ஆர்டர் போட்ருக்காராம். கஞ்சா விக்கிறவுங்க, வழிப்பறி, செயின் பறிப்புல சிக்குறவன் யாரா இருந்தாலும், தயவே காட்டக்கூடாதுன்னு சொல்லிருக்காராம். அவுங்களை அவர்ட்ட தனியா கூப்பிட்டு வரவும் சொல்றாராம்!''

''தனியா அவரும் லத்தியில கவனிக்கிறாரா...?''

''இல்லையில்லை...ஒவ்வொரு அக்யூஸ்ட்கிட்டயும் பேசி, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாங்கன்னு விசாரிச்சு, உளவியில் ரீதியா ட்ரீட்மென்ட் கொடுக்கவும் ஏற்பாடு பண்றாராம்...!''

''பரவாயில்லையே...நம்ம சிட்டியில இருக்குற திருநங்கைகளுக்கும் இந்த மாதிரி உளவியல் பயிற்சி கொடுத்தா நல்லாருக்கும்... சிட்டியிலயும், சில ரூரல் ஏரியாக்கள்லயும் ராத்திரி நேரத்துல இவுங்க பண்ற விஷயங்கள், ரொம்ப ஓவராப் போகுதுன்னு ஏகப்பட்ட கம்பிளைன்ட் குவியுது!''

''உண்மைதான் மித்து...! அதுலயும் கவுண்டம்பாளையம் - துடியலுார் ரோட்டுல, நைட் நேரத்துல, செம்ம மேக்கப்ல நிக்கிற திருநங்கைகள்ட்ட யாராவது வழிஞ்சு நின்னா, அவுங்ககிட்ட இருந்து போன், செயின், பர்ஸ் எல்லாத்தையும் பறிச்சிட்டுதான் அனுப்புறாங்களாம். இதை எதிர்த்துக் கேட்ட சில ஆளுங்களை, கும்பலா சேர்ந்து அடிச்சு உதைச்சிருக்காங்க!''

''துடியலுார் போலீஸ் என்னதான் பண்றாங்களாம்?''

''அவுங்ககிட்டப் போய் கம்பிளைன்ட் பண்ணுனா, 'திருநங்கைகளை அரெஸ்ட் பண்ண சட்டத்துல இடம் கிடையாது'ன்னு சிம்பிளா முடிச்சுக்குறாங்களாம். அதனால, அவுங்க அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்காம்!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மித்ராவுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. சிறிது நேரம் பேசி விட்டு, அழைப்பைத் துண்டித்து விட்டு, விஷயத்தை விளக்கினாள் மித்ரா...

''கோவைப்புதுார்ல இருக்குற ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல, ரெண்டு வெய்க்கிள் இன்ஸ்பெக்டர் இருக்கணுமாம். ஒருத்தர்தான் இருக்காரு. ஆர்.டி.ஓ., போஸ்ட்டிங்கும் காலியா இருக்கு. சவுத் ஆர்.டி.ஓ.,தான் அதையும் கவனிக்கிறாரு.

அதனால மொத்த ஆபீசையும், ஒரே ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் குத்தகைக்கு எடுத்தது மாதிரி தாறுமாறா வசூல் பண்ணிட்டு இருக்காராம்!''

''ஆமா மித்து...இதைப் பத்தி எனக்கும் கம்பிளைன்ட் வந்துச்சு...'மெல்லிசை மன்னர்' போல வசூல் கச்சேரியே நடத்துறாராமே...!''

''அவரேதான்க்கா...எல்.எல்.ஆர்., டிரைவிங் லைசென்ஸ், எப்.சி.,பண்றது, ஆர்.சி.,புக்ல பேரு மாத்துறது, திருத்துறதுன்னு எந்த வேலைக்கு யாரு வந்தாலும், வழக்கமா வாங்குற லஞ்சத்தை விட, ரெண்டு மடங்கு வாங்குறாராம்.

கேட்டா, 'இல்லாத ரெண்டு ஆபீசருக்கும் சேர்த்து, நான்தான் வசூல் பண்ணி மேல தர வேண்டியிருக்கு'ன்னு 'லாஜிக்' பேசுறாராம். அங்க போற எல்லாரும் கொந்தளிக்கிறாங்க!''

''வடக்கு தாசில்தார் ஆபீஸ்ல, சர்வே டிபார்ட்மென்ட்ல இருக்குற ஒருத்தரும் இப்பிடித்தான் 'டபுள் டமாக்கா' வசூல் பண்றாராம். சைட், பட்டா சப்டிவிஷன் எதுக்குப் போனாலும், குறைஞ்சது 35 ஆயிரம் ரூபா வாங்குறாராம். ஆனா பணத்தை ஆபீஸ்ல வச்சு வாங்குறதில்லை!''

''அதுக்குன்னு தனியா ஆபீஸ் வச்சிருக்காரா?''

''முழுசாக் கேளு...புரோக்கர் கொடுத்தாலும், மக்களே கொடுத்தாலும், அவுங்களை ஆபீஸ் பக்கத்துல இருக்குற ஸ்டேட் பாங்க்குக்கு வரச் சொல்றாராம். அங்க வாடிக்கையாளருக்குப் போட்ருக்குற சேர்ல அவுங்களை உட்காரச் சொல்லிட்டு, பேங்க்ல ஒரு சுத்து சுத்திட்டு வந்து, கொடுங்கன்னு வாங்குறாராம்!''

''பணத்தை அங்கேயே பேங்க்ல போட்றாரா?''

''இல்லைப்பா...பணத்தை வாங்கிட்டு, வெளியில நிக்கிற அவரோட வெள்ளைக்கலர் பலீனோ கார்ல, டிரைவர் சீட்டுக்குக் கீழே இருக்குற ரகசிய பெட்டகத்துல வச்சிட்டு வர்றாராம்.

அப்புறம் ஆபீஸ் வந்து, கையை சோப்புப் போட்டு கழுவு கழுவுன்னு கழுவிட்டு, கர்ச்சிப்ல துடைச்சிட்டே இருக்காராம். நிறையா புகார் போய், விஜிலென்ஸ் போலீஸ் குறி வச்சும் இவரை பிடிக்க முடியலையாம்!''

விஷயத்தைச் சொல்லி முடித்த சித்ரா, ''சூடா பாலிடிக்ஸ் நியூஸ்!'' என்று கேட்க, மித்ரா ஆரம்பித்தாள்...

''ஈரோடு் கிழக்கு தொகுதி் இடைத்தேர்தலை, தமிழ்நாடே திரும்பிப் பார்த்துட்டு இருக்குல்ல...கொங்கு பெல்ட்ல நடக்குற தேர்தல்ங்கிறதால, எடப்பாடி தரப்பு எப்பிடியாவது ஜெயிக்கணும்னு தீவிரமா வேலை பாக்குதாம். வேலுமணிக்கு 30 பூத் ஒதுக்கிருக்காங்களாம். இங்க இருக்குற எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஆளுக்கு அஞ்சு பூத் பிரிச்சுக் கொடுத்தாச்சாம்!''

''ஆளும்கட்சியில இங்க இருந்து யாரும் போகலையா?''

''அவுங்களுக்கு 20 பூத் மட்டும்தான் கொடுத்திருக்காங்களாம். இங்க இருக்குற அ.தி.மு.க.,காரங்களோட 'ப்ளான்' என்னன்னு தெரிஞ்சிட்டு, அதுக்கு அப்புறம் இங்க இருக்குற மாவட்டங்களுக்குப் பூத்களைபிரிச்சுத் தரப்போறாங்களாம்.

ஆளும்கட்சியே ஜெயிச்சாலும், போன தடவை த.மா.கா., வாங்குன ஓட்டை விட அதிக ஓட்டு வாங்கணும்னு கங்கணம் கட்டிட்டு, அ.தி.மு.க.,வுல வேலை பாக்குறாங்களாம்!''

மித்ரா சொல்லும்போதே, கால் டாக்சி புது வீட்டு வளகத்துக்குள் நுழைந்தது. இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு, கீழிறங்கத் தயாராயினர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement