சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படக்கூடிய, 'மிச்செலின் ஸ்டார்' என்ற மிக உயரிய விருதை, முதன் முதலில் பெற்றுள்ள இந்தியப் பெண் கரிமா அரோரா: 'மிச்செலின் டயர் கம்பெனி' என்ற நிறுவனத்தை உருவாக்கிய, 'ஆண்ட்ரே, எட்வர்ட் மிச்செலின்' ஆகியோரால், 1900 முதல் வழங்கப்பட்டு வருவது தான், 'மிச்செலின் ஸ்டார்' விருது.
தலைசிறந்த ருசி மற்றும் இட அமைப்பை கொண்டுள்ள உணவகங்களுக்கு, இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதை பெற்ற முதல் இந்தியப் பெண் நான் தான். மும்பையைச் சேர்ந்த நான், பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவள்.
சமையல் கலை நிபுணராவதற்கு முன், இதழியல் துறையில் பணிபுரிந்தேன். 2017 ஏப்ரலில், பாங்காக்கில், 'கே' என்ற பெயரில், மூன்று தளங்களுடன் கூடிய உணவகத்தை சொந்தமாக துவக்கினேன்.
பாரம்பரிய இந்திய உணவு முறை உத்திகளோடு, நவீன ருசி அளிக்கும் உணவுகளை தயாரித்து வழங்கி, வாடிக்கையாளர்களை கவர்ந்தேன்.
கடந்த, 2018ல், எனக்கும், என் உணவகத்துக்கும், 'மிச்செலின் ஸ்டார்' விருது வழங்கப்பட்டது. 2019ல், ஆசியாவின் தலைசிறந்த, 50 உணவகங்கள் பட்டியலில், எங்களின் உணவகம், 16வது இடம் பிடித்தது.
'ஆசியாவின் தலைசிறந்த பெண் சமையல் கலைஞர்' என்ற அங்கீகாரமும் கிடைத்தது.
'மாஸ்டர் செப் இண்டியா' என்ற புகழ் பெற்ற உணவு நிகழ்ச்சியில், நடுவராகவும் பங்காற்றி உள்ளேன். அந்த நிகழ்ச்சியில் நடுவராக அங்கம் வகித்த முதல் பெண்ணும் நானே.
ஆண்களே அதிகம் கால் பதிக்கும் துறை, உணவக சமையல் கலை என்று பலரும் நினைக்கின்றனர்; ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை.
நான் நம்புவதெல்லாம் கடின உழைப்பை மட்டுமே. உங்கள் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்து வந்தால், யாராக இருந்தாலும் ஜெயிப்பது உறுதி.
உங்கள் உழைப்பு நிச்சயம் உங்களை கைவிடாது; உரிய பலனை அது கொடுத்தே தீரும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!