''நிதி ஒதுக்காததால, பஞ்சாயத்துகள் பஞ்சராகி கிடக்குது பா...'' என, சுக்கு காபியை குடித்தபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த ஊர்லன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கிராம பஞ்சாயத்துகள்ல, வளர்ச்சிப் பணிகளை செய்ய, மாநில நிதிக்குழு மூலமா தான் நிதி ஒதுக்குறாங்க... வேலுார் மாவட்டத்துல, 200 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆறு மாசமா நிதி ஒதுக்காததால, வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்குது பா...
''பஞ்சாயத்துகள்ல பணியாற்றும் செயலர், துாய்மை பணியாளர்கள், 'பம்ப் ஆப்பரேட்டர்'களுக்கு சம்பளம் குடுக்க முடியல... மின் கட்டணம் கட்டாம, தெரு விளக்குகள் எரியாம கிராமங்கள் இருண்டு கிடக்குது...
''ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச மக்களுக்கு பதில் சொல்ல முடியாம, பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் விரக்தியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''டாக்டர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாருங்க...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''யாரை சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''நாகை மாவட்டத்தையே ஆட்சி செய்யும் அதிகாரியை தான் சொல்றேன்... அதிகாரி தலைமையில நடக்கிற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துல, துறை ரீதியா டாக்டர்களிடம் விவாதிக்கிறப்ப, திடீர்னு ஒருமையில பேசுறதும் இல்லாம, அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துறாருங்க...
''அதோட, 'நான் நெனச்சா உன்னை கண்காணாத இடத்துக்கு மாத்திடுவேன்'னு மிரட்டுறதோட, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துறாராம்... இதனால, சில டாக்டர்கள் ஆய்வுக் கூட்டத்துல இருந்து பாதியில வெளிநடப்பு செஞ்சிருக்காங்க...
''முதல்வருக்கு நெருக்கமா இருக்கிற சுகாதார அமைச்சரை பத்தி, 'அவர் சென்ஸ் இல்லாம பேசுறார்'னு அவதுாறா பேசியிருக்கார்... இதனால, அதிகாரியை மாத்தக் கோரி போராட்டம் நடத்த, டாக்டர்கள் தயாராயிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எப்படியாவது ரெண்டாவது இடத்தை பிடிச்சிடணும்னு, 'பிளான்' பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''ஈரோடு தேர்தல் விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... 2021ல நடந்த சட்டசபை தேர்தல்ல, ஈரோடு கிழக்கு தொகுதியில, சீமானோட நாம் தமிழர் கட்சி, 15 ஆயிரம் ஓட்டுகள் வாங்குச்சு... 'இந்த தடவை அதை இன்னும் அதிகரிச்சு, ரெண்டாவது இடத்தை பிடிச்சிடணும்'னு சீமான் முயற்சி பண்ணிண்டு இருக்கார் ஓய்...
''நாம் தமிழர் கட்சி சார்பா, செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மேனகா என்பவரை வேட்பாளரா களம் இறக்கியிருக்கா... போன தேர்தல்ல, ஈரோடு கிழக்குல நடிகர் கமலோட மக்கள் நீதி மய்யம் கட்சி, 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்குச்சு...
''இந்த முறை, காங்கிரசுக்கு கமல் ஆதரவு தரார்... 'அதனால அந்த, 10 ஆயிரம் ஓட்டுகளையும் நாம வாங்கிடணும்'னு கட்சி நிர்வாகிகளுக்கு, சீமான் உத்தரவு போட்டிருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அவர் உத்தரவு போட்டா போதுமா வே... ஜனங்க ஓட்டு போடணும்லா...'' என்றபடியே அண்ணாச்சி எழ, சிரித்தபடியே பெரியவர்கள் புறப்பட்டனர்.
இந்த அவதூறுப்பேச்செல்லாம் அந்த அதிகாரி பெரிய இடத்துக்கு நெருக்கமாக இருப்பாரோ, அதனால்தான் இந்த தெனாவட்டோ என்ற டவுட்டை ஏற்படுத்துகிறதே