தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி: இலவச வேட்டி, சேலைகள் தாலுகா வாரியாக, 2022 டிச., 15 முதல் அனுப்பப்பட்டன. ஜன., 9ல் சென்னையில் வேட்டி, சேலை வழங்கும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார். வேட்டி, சேலையை, பொங்கல் பண்டிகைக்கு வழங்கவில்லை என்பது தவறான தகவல். இந்த பணிகள், பிப்ரவரியில் நிறைவு பெறும் என்பது தான் உண்மை. அ.தி.மு.க., ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளதை பன்னீர்செல்வம் மறந்து விட்டார். திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு மாறான தகவல்களை, அவர் வெளியிடுவது கண்டனத்திற்குரியது.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில நடந்திருந்தா, அதற்கு பழனிசாமி தான் பொறுப்பு... தான் பொறுப்பில்லை என, பன்னீர்செல்வம் கருதியிருப்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
முதல்வர் ஸ்டாலின்: அதிக மக்கள் தொகை உள்ள நம் நாட்டில், அரசு மருத்துவமனைகள் மட்டும், நவீன மருத்துவ சேவையை வழங்கினால் போதாது; தனியார் பங்களிப்பும் முக்கியம். தனியார் மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் கட்டணம், ஏழைகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும். கல்வியும், மருத்துவமும் சேவைத் துறையை சேர்ந்தது; அது, சேவை துறையாகவே செயல்பட வேண்டும்.
டவுட் தனபாலு: 'கல்வியும், மருத்துவமும் சேவைத் துறைகள்' என்பதை, தங்கள் கட்சியில் இருக்கும், 'கல்வி தந்தை'யர்களிடம் முதலில் வலியுறுத்தினா என்ன என்பது தான் எங்க, 'டவுட்!'
lll
பா.ம.க., தலைவர் அன்புமணி: தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை வராது. தற்போது, ஆட்சிக்கு வந்துள்ளதால், அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க., இன்றைக்கு நாலாக பிரிந்து கிடக்கிறது; அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றுவர். கொள்ளையடித்த பணத்தை வாரி இரைப்பர்.
டவுட் தனபாலு: என்னாச்சு... தி.மு.க., கூட்டணிக்கு, பா.ம.க., ரகசிய பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியானதே... பேரம் படியலையா அல்லது இப்படி குற்றம் சாட்டுனா தான், 'சீட்'கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என, பா.ம.க., தலைவர் கணக்கு போடுறாரான்னு, 'டவுட்' எழுதே!
lll
கல்வி, மருத்துவ 'சேவை' செய்ய கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி பெறவே கோடிகளில் கொட்டிவிட்டுத்தானே ஆரம்பிக்கிறோம் போட்ட முதலிடம் கணிசமாக லாபமும் பார்க்க வேண்டாமா? முதலில் உங்கள் குடும்பம் நடத்தும் பள்ளி, மருத்துவ மனைகளில் எந்த ஏழைக்கு ஒரு ரூபாயாவது சலுகை காட்டியிருக்கிறீர்கள் என்று கணக்கை தெரிவியுங்கள் உபதேசம் அப்புறம் செய்யலாம்