திருவண்ணாமலை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடன், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 18 லட்சத்து, 82 ஆயிரத்து, 107 சான்றிதழ்கள், வருவாய் துறையால் வழங்கப்பட்டு உள்ளன. கள்ளக்குறிச்சியில், 6 லட்சம் சான்றிதழ்கள், திருப்பத்துார் மாவட்டத்தில், 5.45 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
'இந்த மூன்று மாவட்டத்திலும், 6,400 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளதால், நிலுவை மனுக்களின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்துள்ளது' என்றார்.
அதிகாரிகளில் ஒருவர், 'இப்பல்லாம் தமிழக அமைச்சர்கள், ரமணா பட விஜயகாந்த் மாதிரி, புள்ளி விபரங்களை அள்ளி விடுறாங்க... இதெல்லாம் உண்மையாங்கிறது, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.